22/11/2018

கஜா புயல் பேரிடர் இழப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது?


நவம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை கடலூர் முதல் சிவகங்கை, ராமநாதபுரம் வரை கோரத் தாண்டவமாடிய கஜா சூறாவளியால் தமிழ்நாட்டின் ஏழு கடலோர மாவட்டங்கள் முற்றிலும் நிலைக்குலைந்து போயுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள 45 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளதை செய்திகளுன் காட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் கஜா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதல் கட்ட நிவாரணமாக ௹.1,000 கோடியை ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், விவசாயிகள் சந்தித்துள்ள கடும் சேதாரங்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள நிவாரணமும் இழப்பீடும் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

சேதாரம் ஏற்பட்டுள்ள விவசாய நிலப்பகுதிகளின் கணக்கீடு ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆனால் நெல்லுக்கும், தென்னைக்கும்,. கரும்பு உள்ளிட்ட மற்ற பயிர்களுக்கும் அறிவித்துள்ள நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் ஏற்கத்தக்கதல்ல. நெல், கரும்பு, வாழை, காய்கறிகள், மலர்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஹெக்டேருக்கு ௹.13,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நீண்ட காலமாகவே இயற்கை இடர்பாடுகளால் தங்களுடைய விளைச்சல் முழுவதுமாக பாதிப்பிற்கு உள்ளாகும் போது – நெல்லுக்கு மட்டும் ஏக்கருக்கு செலவு + உழைப்புக் கூலி என்று கணக்கிட்டு ௹.25,000 கோரி வருகிறார்கள். ஆனால் ஒரு ஹெக்டேருக்கு (ஒரு ஹெக்டேர் = இரண்டரை ஏக்கர்) ௹.13,500 என்றால் ஒரு ஏக்கருக்கு வெறும் ௹.5,400 மட்டுமே. இது எப்படி நிவாரணம் + இழப்பீடு ஆகும்? இப்படியெல்லாம் அறிவிப்பது நமது விவசாய மக்களை ஏகடியம் செய்வதாகாதா?

தென்னைக்கு அறிவித்திருக்கும் நிவாரணமும் சற்றும் நியாயமற்றதாகும். ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னைகள் என்று கணக்கிட்டு அதற்கு இழப்பீடு நிவாரணமாக ௹.1,92,500, மறு சாகுபடி செய்ய ௹.72,100 என ஒட்டுமொத்தமாக ௹.2,64,600 பெறுவர் என்று அறிவித்துள்ளார். நிவாரணத்தை எடுத்துக்கொள்வோம் ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்களில் சராசரியாக 70 விழுக்காடு – 125 மரங்கள் ஒடிந்தும் வேரோடும் சாய்ந்துவிட்டன. இதற்கு மரத்திற்கு ௹.1,540 வருகிறது! இவ்வளவுதானா ஒரு தென்னையின் மதிப்பு?

இதனால்தான் எட்டு வழிச் சாலை கணக்கை நேற்று பதிவிட்டேன். அங்கு வெட்டிச் சாய்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் – அது காய்த்து பயனளிக்கும் மரங்களாக இருப்பின் ௹.50 ஆயிரமும் காய்க்கும் நிலையில் வளர்ந்த மரமாக இருப்பின் அதற்கு ௹.40 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தீர்களே? அப்படியானால் இங்கு 125 மரங்களுக்கு ௹.62 இலட்சத்து 50 ஆயிரம் அல்லவா தர வேண்டும்? இவ்வாறு கேட்பது ஏதோ வேடிக்கை விநோதமில்லை. ஒரு தென்னை ஒவ்வொரு ஆண்டும் தரும் பலனில் இருந்தே அதற்கான மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மனிதன், மரம், கொல்லை என்று எதுவானாலும் அதன் எஞ்சியுள்ள வாழ் நாளும் வாழ்ந்திருந்தால் கிடைத்திருக்கக் கூடிய பயனை வைத்தே இழப்பீட்டை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

எடுத்துக்காட்டாக, நேற்று தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தென்னை விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர் வீரசேனன், ஒரு ஏக்கரில் வளர்ந்து காய் கொடுக்கும் தென்னைகளில் இருந்து ஆண்டுக்கு ஆறு முறை காய் பறிப்போம் என்றும், அது இந்த ஆண்டில் தேங்காய்க்கு கிடைத்த விலையின் படி ஏக்கருக்கு 92,000 பலன் பெற்றோம் என்று தெரிவித்தார். அதன்படி பார்த்தால் ஒரு ஹெக்டேர் தென்னைக்கு ஆண்டுப் பலன் 2 இலட்சத்து 30 ஆயிரம். ஒரு ஓராண்டுக் கணக்கு, இதை குறைந்த்து பத்து ஆண்டுகளுக்கு கணக்கீடு செய்தால் 23 இலட்சம் வருவாய் தரக் கூடியதாகும். இதில் சில ஆண்டுகளில் மழையின்றியோ நோய் போன்று மற்ற வகைகளில் விளைச்சல் இல்லாமல் போனாலோ மட்டுமே இழப்பு ஏற்படும். அப்படி ஒரு 20 விழுக்காட்டை கழித்துவிட்டாலும் பத்து தொடர் ஆண்டுகளுக்கு ஒரு விவசாயி ஒரு ஹெக்டேருக்கு ௹.20 இலட்சம் அளவிற்கு உறுதியான வருவாய் பெறுவார்.

இது ஏதோ கற்பனைக் கணக்கு அல்ல, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனும் மின் ஆற்றல் இணைப்புக் கட்டமைப்பை உருவாக்கும் இந்திய ஒன்றிய அரசு நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் போது நீக்கும் தென்னைகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பதற்கான கணக்கீட்டு முறையை ஒரு சூத்திரமாகவே கொடுத்துள்ளது. இது கேரள அரசிடம் இருந்து பெற்றதை பயன்படுத்துகிறது. அதன்படி, Compensation = yield X constant factor X average market value X future age என்கிற சூத்திரத்தை வைத்து கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

இதைத்தான் இங்கு மேற்கண்ட கணக்கீட்டில் நான் கையாண்டுள்ளேன்.
இப்படி எந்த சூத்திரத்தை பயன்படுத்தி தமிழக அரசு நிவாரணத்தை கணக்கீடு செய்துள்ளது? தொழில்களுக்கும் வர்த்தகத்திற்கும் இழப்பு ஏற்பட்டால் மிகத் துல்லியமாக இழப்பீட்டை கணக்கீடு செய்து காப்பீடு வழங்கும் இந்நாட்டில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் மட்டும் பிச்சைக் கணக்கு போடுவது ஏன்?

ஒரு மரத்தை வெட்டுவதற்கும், அகற்றுவதற்கும் ௹.1,100 கணக்கீடு செய்து அளிக்கும் தமிழக அரசு, உயிரோடு காய்த்த நிலையில் சாய்க்கப்பட்ட தென்னைக்கு அது தந்த பலன், இன்னும் எத்தனை ஆண்டுகள் அது கொடுத்திருக்கக் கூடிய பலன், அந்த பலனுக்கு இருக்கும் சந்தை மதிப்பு ஆகிய அனைத்து காரணிகளையும் அல்லவா உள்ளடக்கி கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்? மறு சாகுபடிக்கு அறிவித்துள்ளதை குறை கூறவில்லை. ஆனால் இருப்பதை இயற்கை பேரிடரால் இழந்த விவசாயிக்கு நியாயமான இழப்பீடு பெறும் உரிமை இல்லையா? என்பதே எமது கேள்வியாகும். இது தென்னைக்கு மட்டுமல்ல, மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலன் தரம் மரங்கள் யாவற்றிற்குமான கோரிக்கையாகும்.

எனவே தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் சிந்தனையை செலுத்தி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நமது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

கா. ஐயநாதன், சென்னை, நவம்பர் 20, 2018...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.