கோலார் தங்கவயல் தமிழர்களின் தியாகம் வரலாற்றில் இன்னும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. தமிழ் பவுத்தம், அம்பேத்கரிய எழுச்சி, தமிழிய அரசியல், முற்போக்கு கோட்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழிற்சங்க செயல்பாடுகளுக்கும் தங்கவயல் நாற்றாங்காலாக இருந்திருக்கிறது. இந்தியாவின் தொடக்க கால தொழிற்சங்கங்களில் மிக தீவிரமாக செயல்பட்ட தொழிற்சங்கமாக தங்கவயல் தொழிற்சங்கத்தை குறிப்பிடுகிறார்கள். ஒரு வகையில், நவீன இந்தியாவின் அத்தனை முற்போக்கு அரசியல் கோட்பாடுகளையும் அங்கிருக்கும் ஒடுக்கப்பட்டோர் நீருற்றி வளர்த்திருக்கிறார்கள் எனலாம்.
1930- களில் சுரங்கத்தில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி, தொழிலாளர்களிடம் பத்து விரல் ரேகை எடுப்பதை எதிர்த்து, தொழிலாளர்களின் கையில் காப்பு போட்டதை கண்டித்து வஜ்ரவேலு செட்டியார் உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகள் நடத்திய போராட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. 1946-ல் கே.எஸ்.வாசன், வி.எம்.கோவிந்தன் ஆகியோர் தலைமையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வீட்டு வசதி, பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுரங்க தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் 78 நாட்கள் நீடித்தது. தங்கத்தை வெட்டியெடுக்கும் பணிகள் முற்றிலுமாக முடங்கியதால், மூர்க்கத்தின் உச்சத்தில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகமும், மைசூரு அரசுமும் இறங்கி வந்தன. தொழிலாளர்களின் 26 கோரிக்கைகளில் 18 கோரிக்கைகளை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்த தொழிற்சங்கத் தலைவர் கே.எஸ்.வாசன் ஆளும் வர்க்கத்தால் குறி வைக்கப்பட்டார். அடுத்த சில தினங்களில் கே.எஸ்.வாசன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆண்டர்சன்பேட்டை மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். கொந்தளிப்பான போராட்டத்தை சிதைக்க, 1946-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காளியப்பன், சுப்பிரமணி, ராமசாமி, சின்னப்பன், கண்ணன், ராமையா ஆகிய 6 தொழிலாளர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புலம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களின் இந்த பலி, வரலாற்றில் பொருட்படுத்தத்தக்க வலியை தராமல் போய் விட்டது. ஆனால் தங்கவயல் சுரங்கத் தொழிலாளர் வாழ்வில் இந்த ஆறு தியாகிகளின் மரணம், ஆறா வடுவாக இருக்கிறது. ரத்தம் சிந்தியோரை நினைவுக்கூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 4-ம் தேதியை தியாகிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர். நேற்று (நவம்பர் 4) தியாகிகள் தினத்தையொட்டி, இடதுசாரி இயக்கத்தினர் தியாகிகளின் கல்லறைகளுக்கு செவ்வண்ணம் பூசி, மலர்களை தூவி, செவ்வணக்கம் செலுத்தினர்.
கோலார்தங்கவயல் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் இந்த தியாகம் தமிழ்ப் பரப்பிலும், முற்போக்கு தளத்திலும் கூட பெரிதாக அறியப்படாமல் இருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.