22/12/2018

குமரிக்கண்ட கடல்பரப்பை கைப்பற்றத் துடிக்கும் இலங்கை...


இலங்கைத் தீவை அரசியல் ரீதியாக ஆண்டுக்கொண்டிருக்கும் சிங்கள தேசம், தமிழர் வரலாற்றுப் பகுதியான குமரிக்கண்டத்தின் பெரும்பகுதியை தன் தேசிய உரிமைசார் சொத்தாக ஐக்கிய நாடுகளின் ஒப்புதலுடனும் சர்வதேச நாடுகளின் துணையுடனும் கைப்பற்றத் துடித்துவருகிறது

சர்வதேச விதிமுறைகளின் படி, கடல்சார்ந்த அரசுகள் தன் நிலத்தில் இருந்து முதல் 12 நாட்டிகல் மைல் தொலைவை கடல் எல்லையென வரையறுக்கலாம். அதற்கும் அப்பால், 200 நாட்டிகள் மைல் தொலைவு என தனிப்பட்ட பொருளாதார எல்லை (EXCLUSIVE ECONOMIC ZONE) என்ற அளவீட்டின் படி உரிமையுண்டு. இப்பொழுது, அத்தேசம் தன் தீவின் நிலப்பரப்பை விட 25 மடங்கு அதிகமான கடற்பகுதியினை தன் கட்டுப்பாட்டில் எடுக்க உரிமை கோருகிறது.

இதன் பெரும்பகுதி இந்தியப் பெருங்கடலின் கடல் கட்டுப்பாட்டையும் உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்குபவை, அதோடு உலகப்பொருளாதாரத்திலும் அரசியல் பிராந்திய முக்கியத்துவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது என்பது இதன் ஆபத்து.

கடற்சார் அரசு, அங்கீகரிக்கப்பட்ட 200 நாட்டிகல் மைல் கடல் தொலைவை விட அதிகமான தொலைவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமானால், உரிமைக் கோரும் தேசத்தின் நிலப்பகுதியினை ஒட்டிய கடலில் 1) குறிப்பிட்ட தடிமன் படிகப்பாறை மற்றும் 2) உருவத்துக்குரிய அமைப்புகளோ, அக்கடற் பகுதிகளில் இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குமரிக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்பு குறித்த முழுமையான அறிவியல் ஆய்வுகள் இல்லையெனினும் குமரிக்கடலுக்கு தெற்கேயும் மாலத்தீவு, மதகாஸ்கர் நோக்கியப் பகுதிகளிலும் சிறுசிறுத் தீவுகளும் நிலப்பகுதிகளும் கடலுள் புதைந்துள்ளன என்பதனை நிறுவும் அறிவியல் முடிவுகள் ஏராளம் இருக்கிறது குமரிக்கண்டம்?: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்! .

இந்தியப் பெருங்கடலினுள் புதைந்திருக்கும் நிலப்பகுதியினை ஆய்வு செய்யாமல் இந்தியத் துணைக்கண்டம் அலட்சியப்படுத்தி வரும் இதேக் காலக்கட்டத்தில், இலங்கைக்கு தெற்கே பல நூறு மைல்களுக்கும் அப்பால் தடிமனானப் படிகப்பாறை மற்றும் உருவத்துகுரிய அமைப்புகள் புதைந்துள்ளன என்பதனை அறிவியல் அடிப்படையிலான தரவுகளினால் மேற்கோள் காட்டி, அப்பகுதியினை தனக்கு சொந்தம் என சிங்களத் தேசம் சர்வதேச சட்டங்கள் வழியும் இந்தியா, மேற்குலக சூழ்ச்சியின் பின்னணியிலும் திட்டம் தீட்டி வரும் வேளையில், தமிழக மக்களோ தமிழக அரசோ மெளனமாக இருப்பது தமிழின நெடு வரலாற்றில் நாம் செய்யப் போகும் துரோகமாகவே கருத முடியும்.

தமிழர் கடலின் பெரும்பகுதி என்பதோடு தமிழர் வரலாற்றின் எச்சங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் குமரிக்கடலினை சிங்களத் தேச அரசு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, பல நாடுகளின் வேட்டைக்காடாய் தமிழர் கடல் மாறவிருக்கின்றச் சூழலில் தமிழ்நாடு அரசும் மக்களும் ஓங்கி குரல் எழுப்பி எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

கச்சத்தீவு என்னும் சிறுப்பகுதியை இழந்து நாம் படும் பெருந்துயரத்திற்கே முடிவில்லாத பொழுது தமிழர் கடலின் பெரும்பகுதி இல்லாது போகுமாயின் நம் தமிழர்களின் வருங்காலம் என்னவாவது?

தமிழகம் விழித்தெழ வேண்டிய நேரமிது...

- முனைவர் விஜய் அசோகன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.