21/12/2018

உடனடியாக பதவி விலக வலியுறுத்தல், விஷாலுக்கு எதிர்ப்பு சங்க அலுவலகத்தை பூட்டி பட அதிபர்கள் போராட்டம்...


தமிழ்ப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலை கண்டித்து இன்று காலை தயாரிப்பாளர்கள் சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

படஅதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்வி.சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பூட்டு போட்டனர்.

இவர்களை சமாதானம் செய்ய செயலாளர் கதிரேசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் யாரும் சமாதானம் ஆகவில்லை.

நடிகர் விஷால், நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கிறார். சமீபகாலமாக இவருக்கு எதிராக மற்ற தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக, மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் தொகையை முழுமையாக கொடுக்காதது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது. செயற்குழு ஒப்புதல் இல்லாமல் விஷால் தனிச்சையாக முடிவெடுப்பது, இளையராஜா பாராட்டு விழாவை ஒப்புதல் இல்லாமல் நடத்துவது, கியூப், யு.எப்.ஓ., நிறுவனங்கள் பிரச்னை, பைரசியை ஒழிக்காதது, பிலிம் சேம்பரில் உள்ள அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் செயல்படாமல், தனியாக மாதம் ரூ.3 லட்சம் வாடகை கொடுத்து செலவு செய்வது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் முன் வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் அழகப்பன் கூறுகையில்...

தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு தொகையாக ரூ.7.80 கோடி இருந்தது. அந்தப்பணம் பற்றி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். இதிலிருந்தே அந்த பணம் இல்லையென்று தெரிகிறது. எத்தனை படங்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்வதற்கு எதற்கு தலைவர் பதவி. சின்ன தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பினர். தமிழ் ராக்கர்ஸ் உடன் விஷாலுக்கு கூட்டு இருக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரித்தீஷ் பேசுகையில், விஷால் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமையாகிவிட்டார். ஓராண்டுக்குள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் பூட்டு போடுங்கள் என விஷால் சொன்னார். அவர் சொன்னபடி தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை பூட்டிவிட்டோம் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.