14/02/2019

உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்.. தமிழகத்தை குறி வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன?


இந்த தலைப்பை பார்த்த எல்லோருக்குமே நடுங்கிடும் அளவிற்கு பயம் நிச்சயம் உண்டாகும். ஆனால், இதுதான் உண்மை மக்களே! சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே விஷ தன்மை வாய்ந்ததாக இப்போது மாறி வருகிறது. முன்பெல்லாம் விஷத்தன்மை கொண்ட உணவுகள் மிக குறைவு. ஆனால், இன்று உணவு முழுவதுமே விஷயமாக மாறியுள்ளது. சைவ உணவுகளை விட அசைவ உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி உண்ணுகின்றனர்.

இந்நிலையில் இவர்களை குறி வைத்தே மிக பெரிய வியாபார சந்தை மறைமுகமான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. கோழிக்கறி, ஆட்டுக்கறி முதலியவற்றில் நடந்த அதே அபாயம் இப்பொது மீன்களின் பக்கம் திரும்பி உள்ளது. நாய்கறி பற்றிய சர்ச்சை இப்போது தான் ஓய்ந்த நிலையில், புதிதாக பிராய்லர் மீன் சர்ச்சை கிளம்பி உள்ளது. இதை ஆராய்ச்சியாளர்களும் நிரூபணம் செய்துள்ளனர். பெரும்பாலும் இது போன்ற விஷ தன்மையுள்ள மீன், கறி, போன்றவற்றை விற்க ஏன் தமிழ்நாட்டை குறி வைக்கின்றனர்..? இதன் பின் மறைந்துள்ள மேலும் பல உண்மைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

விஷமே உணவு...

இன்றைய கால கட்டத்தில் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது என்கிற குழப்பத்திலே நம்மை அலைய விடுகின்றனர். காரணம், எங்கும் விஷம்! எதிலும் விஷம்! என்கிற சூழல் தான். சமீபத்திய காலங்களில் நாய்கறி பற்றிய சர்ச்சை கிளம்பி பலரையும் பீதி அடைய வைத்தது. ஆனால், இப்போது பிராய்லர் மீன் என்கிற சர்ச்சை புதிதாக எழுந்துள்ளது.

பிராய்லர் மீனா..?

இது வரை பிராய்லர் சிக்கனை தான் நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால், இப்போது மீனிலும் பிராய்லர் மீன் வந்துள்ளதாம். பிராய்லர் சிக்கனை சாப்பிட்டால் எப்படிப்பட்ட ஆபத்துகள் மனித உடலுக்கு உண்டாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். இதே வீரியம் இந்த பிராய்லர் மீன்களிலும் உள்ளது.

வித்தியாசம் என்ன?

சாதாரணமாக நாம் சாப்பிடும் மீன்களுக்கும் இந்த வகை பிராய்லர் மீன்களுக்கும் பலவித வித்தியாசங்கள் உண்டு. இந்த வகை மீன்கள் பலவித இராசயன முறைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டு மீன்களை போன்று இல்லாமல் இவை ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

பெயர் என்ன?

நாட்டு மீன்களான கெளுத்தி, அயிரை, உழுவை, கெண்டை போன்ற மீன் இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்க இந்த புதுவித மீன்கள் இப்போது படையெடுக்க தொடங்கியுள்ளன. இவற்றை பாஷா மீன், நெய் மீன், பங்கசியஸ் போன்ற பெயர்களில் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

எங்கிருந்து?

வியட்னாம் நாட்டில் தான் இந்த வகை மீன்கள் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின் இதை உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த வகை மீன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்க இவை ஏன் நம்மை குறி வைத்து வருகின்றன? என்பதை சற்று யோசியுங்கள்.

மக்கள்...

நம் மக்களுக்கு எப்போதுமே ஒரு மனோபாவம் உள்ளது. எதை எளிதில் அடைய முடியும், எது மலிவான விலையில் கிடைக்கும், இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் நம்மை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த வகை மீன்களில் முட்கள் மிக குறைவு, அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டும் போகாது, துர்நாற்றமும் மிக குறைவு, இதில் எந்த வகை உணவுகளை சமைத்தாலும் பிரமாதமான ருசியை தரும். இங்கு தான் அவர்கள் விரித்த வலையில் நாம் மாட்டி கொண்டுள்ளோம்.

பண பேய்கள்...

இந்த வகை மீன்கள் எல்லா கால சூழலிலும் தாக்கு பிடித்து வாழ இயலும் என்பதற்காகவே இதை அதிகஅளவில் பண்ணை உரிமையாளர்களும் உற்பத்தி செய்கின்றனர். யார் எப்படி போனால் என்ன..? எனக்கு என் லாபம் தான் முக்கியம் என்கிற நோக்கில் செயல்பட இன்று பலர் தயாராக உள்ளனர். இந்த வகை மீன்கள் விரைவாக வளர ஹார்மோன் ஊசிகள் இவற்றிற்கு செலுத்தப்படுகிறது. இதனால், உற்பத்தியாளருக்கு மட்டுமே பயன் அதிகம்.

விஷம்...

மீன்கள் அதிக எடையுடன் வளர வேண்டும் என்பதற்காகவும், மிக சீக்கிரத்திலே உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் போது ஹைட்ரஜன் பெராக்ஸைட், STPP, சிட்ரிக் அமிலம் போன்ற விஷ வேதிகளை கொண்டு இவை சுத்தம் செய்யப்படுகின்றன. இவற்றை சாப்பிடும் நமக்கு என்னென்ன அபாயங்கள் உண்டாகும் என்பதை நீங்களே யூகியுங்கள்.

பேராபத்து...

இது போன்ற பிராய்லர் மீன்களை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த மீன்களை சாப்பிடுவதால் புற்றுநோய், விந்தணு குறைபாடு, கருமுட்டை வளர்ச்சியின்மை, எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பேராபத்துகள் மனித இனத்தை சூழும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடவே கெட்ட கொழுப்புகள் அதிகரித்து இதய நோய்களும் உண்டாக கூடும்.

அழிவு...

இந்த பிராய்லர் மீன்கள் நாட்டு மீன்களையே சாப்பிட கூடிய தன்மை கொண்டவை. ஆதலால், சுற்றுசூழல் சமநிலை பாதிக்கப்படும். முன்பு வரை கடல் மீன்கள், நாட்டு மீன்கள் போன்றவை சுமார் 3035 வகைகள் இருந்தன. ஆனால், இப்போது நமக்கு இவற்றில் தெரிந்த மீன்களும், சந்தையில் விற்கப்படும் மீன்களும் வெறும் 5 முதல் 10 வகைகள் மட்டுமே. இதிலிருந்தே மீன் இனத்தின் அழிவை நாம் உணரலாம்.

உணவகங்கள்...

இன்று வீடுகளில் சாப்பிடுவதை விட வெளியில் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் சில உணவகங்கள் இப்படிப்பட்ட மீன்கள், இறைச்சிகளின் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக உயர்தர உணவகங்களில் தான் இந்த முறைகேடுகள் அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தீர்வு...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்கிற வாய்மொழிக்கு ஏற்ப நாம் விழிப்புணர்வுடன் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடந்து கொண்டே இருக்கும். விலை மலிவு, அதிக சுவை, விரைவான உற்பத்தி போன்ற காரணிகளால் இந்த வகை உணவுகளை சாப்பிட்டால் பாதிக்கப்படுவது நாம் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.