17/03/2019

கோவை எஸ்பி மீது நடவடிக்கை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு...


பொள்ளாச்சி வீடியோக்கள் பரவாமல் தடுக்க உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு...

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட தமிழக அரசுக்கு அதற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும், கோவை மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு எதிராக துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி பயங்கரத்தில் பாதிக்கப்பட்டு போலீசில் புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிரங்கமாக சொன்னார் கோவை மாவட்ட எஸ்பி, பாண்டியராஜன். இது சர்ச்சையான நிலையில், தெரியாமல் சொல்லி விட்டேன் என்று அதற்கு விளக்கம் அளித்தார்.

ஆனால், இவ்வாறு புகார்தாரர் தகவலை வெளிப்படுத்திய, காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டம் 228, ஏ பிரிவின் கீழ், இவ்வாறு புகார்கொடுத்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டால், 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் இந்த விதிமுறையை எஸ்பி, பின்பற்றப்படவில்லை. புகார்தாரரின் அடையாளத்தை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வெளியிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கல்லூரி விவரம் இடம் பெற்றதை மனுதாரர் சுட்டிக் காட்டினார். இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன், சுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று, விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப் பெற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின், அடையாளத்தை மறைத்து அரசாணை வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வீடியோக்களை வைத்திருப்பதும் பகிர்வதும் குற்றம் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தவறு. இந்த நடவடிக்கையால், அந்தப் பெண் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். இதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.

எஸ்பி மீது நடவடிக்கை...

மேலும், பலாத்காரம் தொடர்பாக, வெறும் நான்கு வீடியோக்கள் மட்டுமே வெளியாகியுள்ளதாகவும், இதில் அரசியல் தொடர்பு இல்லை என்றும் உடனடியாக விசாரணை நடத்தாமல் அறிவித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக, அடையாளங்களை வெளியிட்ட, கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு, பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.