17/03/2019

தண்ணீர்... தண்ணீர்...


உயிர்களின் ஆதாரமே தண்ணீர். மரமோ மனிதனோ... எதுவாக இருந்தாலும் இயக்கத்தின் உயிர்நாடி காற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது தண்ணீர்தான்.

மனித உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் இருக்கிறது. சராசரி மனித எடையில் (70 கிலோ) தோராயமாக 42 லிட்டர் தண்ணீர் உள்ளதாக உடலியல் உலகம் சொல்கிறது. அதாவது மொத்த உடல் எடையில் தண்ணீரின் அளவானது 60 சதவிகிதம். ஆனாலும், திசுக்களுக்குத் திசு தண்ணீரின் அளவு மாறுபடும்.

அதிகபட்சமாக ரத்தத்தின் திரவப் பகுதியான பிளாஸ்மாவில் 93 சதவிகிதத் தண்ணீரும் குறைந்தபட்சமாக எலும்பில் 20 சதவிகிதத் தண்ணீரும் உள்ளது. மூளையில் 70 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம், இதயத்தில் 75 சதவிகிதம், நுரையீரலில் 75 முதல் 80 சதவிகிதம். ஆணின் தோலில் 60 சதவிகிதமும் பெண்ணின் தோலில் 57 சதவிகிதமும் தண்ணீர் உள்ளது. உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறையும்போது அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும்.

மூளையில் உள்ள 70 சதவிகிதத் தண்ணீரில் ஒரு சதவீதம் குறைந்தால்கூட, மனச் சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகள் வரும். ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது அதில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு மூளையில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை சாஜிட்டல் சைனஸ் த்ராம்போசிஸ் என்று கூறுவோம். தசைகளில் தண்ணீர் அளவு குறையும்போது, உடல் வலி, தோல் சுருங்குதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் ரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீரகத்தில் கல் உருவாதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். 20 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் குறையும்போது உயிரிழப்பு அபாயம்கூட நேரிடலாம்.

ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும்கூட மூச்சை இழுத்து வெளியே விடுவதன் மூலமும் தோலில் இருந்தும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 800 மி.லி. தண்ணீர் பயன்படுத்தப்பட்டுவிடும். இதைத் தவிர, வியர்வை மூலம் 100 மி.லி., சிறுநீர் மூலம் குறைந்தபட்சம் 500 மி.லி., மலம் மூலம் 200 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது. ஆக, எந்த வேலையும் செய்யாமல் இருந்தால்கூட 1600 மி.லி. தண்ணீர் நம் உடலைவிட்டு வெளியேறிவிடும்.

இதேபோல், வளர்சிதை மாற்றங்கள் காரணமாக நம் உடலில் 400 மி.லி. அளவுக்குத் தண்ணீர் உற்பத்தி ஆகிறது.

ஆக்சிஜனை திசுக்களின் உள்ளே செலுத்துவதற்கும் உயிர்ச் சத்தை உறிந்துகொள்வதற்கும் தண்ணீரின் பங்கு மிக முக்கியம். உணவில் உள்ள நச்சுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்வதுடன், மனத்தளர்வு, மனச்சோர்வையும் போக்குகிறது தண்ணீர். மூளையில் மகிழ்ச்சியான நிலையை ஏற்படுத்தும் 'செரோடோனின்’ என்ற நியூரோ டிரான்ஸ்மீட்டரை ஊக்குவிக்கிறது.

மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் இரவு வேளை வந்ததும் தூங்குவதற்கான மனநிலையை ஏற்படுத்தும். உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த ஹார்மோனின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை பிரச்னை தலை தூக்கும்.

உடலுக்குப் போதுமான அளவில் தண் ணீர் கிடைக்காதபோது, உடல் தானாகவே தேவையைக் குறைத்துக்கொள்ளும். அதன் வெளிப்பாடாக சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும். சிறுநீர் கழிக்கும்போது கடுகடுப்பு, அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகவோ சிறுநீர் பிரிதல், அதிகத் தாகம், பசி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடலில் தண்ணீர் அளவு குறைந்துள்ளதாக அறியலாம்.

காலையில் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும். ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலியும் குறையும். மலச் சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படும். தோலில் சுருக்கம் மறையும். வேலை செய்வதற்கான அதிகத் திறனைக் கூட்டவும் தண்ணீருக்கு நிகர் வேறு இல்லை. பாக்டீரியா கிருமிகளை வேகமாக வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று, கல் வராமல் தடுக்கும். குடல் மற்றும் நீர்ப் பையில் ஏற்படும் புற்றுநோய்க் காரணிகளை நீர்த்துப்போகச் செய்து அதன் வீரியத்தைக் குறைக்கும்.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இந்த அளவுக்கும் மேலாகத் தண்ணீர் குடித்தால், சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். ஒரே நேரத்தில் மொத்தமாக இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்தால், உடலில் தண்ணீரின் அளவு அதிகமாகி, ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவு குறைந்து, ரத்த நாளங்கள் சுருங்குதல், அடைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். எனவே, இடைவெளி விட்டு தண்ணீர் குடிப்பதே நலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.