23/03/2019

பம்பரம் சுழன்று வேறு எங்காவது போய் விடும் போலயே.. சிக்கலில் வைகோ மற்றும் திருமா...


திமுக கூட்டணியில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்றவை எல்லாம் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எங்கே நாம் சென்றாலும் இதே உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டுவிடுமோ என்று சில கட்சிகள் திமுகவை கூட்டணியை தவிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

விஷயம் இதுதான்.. வேறு ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டால், அவர்கள் அந்த கட்சியின் உறுப்பினர் ஆகிறார். அந்த கட்சியின் எம்பியாகவே 5 வருடத்திற்கு கருதப்படுவார். இதற்கு நடுவில் யாரும் எதுவும் இதில் செய்யவே முடியாது. பிளாட்டில் குடியிருப்பது போலதான்.. எதுவும் செய்ய முடியாது, உறுப்பினராக இருந்துக்கலாம்.

ஆனால் போன முறை தேர்தலில் ஓரளவு வாக்குகளை வாங்கியிருந்தால் இன்னைக்கு வைகோவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா என்றுதான் கேட்க தோன்றுகிறது. குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறாததால், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மதிமுக இழந்து இப்போது சின்னத்துக்கு திண்டாடி கிடக்கும்படி ஆகிவிட்டது. கணேசமூர்த்திக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா என்பதுதான் அனைத்து மதிமுகவினரின் கவலையாக உள்ளது.

ஒரு கட்சிக்கு சின்னம் என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுமே அறிந்திருப்பார்கள். அந்த வகையில் பாடுபட்டு கட்சியை உருவாக்கி, தங்களுக்கென்று ஒரு கொள்கை, கோட்பாடுகளை வளர்த்து... இன்று அவை அத்தனையையும் இழப்பது என்பது சுலபம் இல்லை என்பதால்தான் வைகோவும், திருமாவும் அரண்டு கிடந்தார்கள்.

மோதிரம் கேட்டால் இல்லை என்றார்கள்.. வைரம் அல்லது பலாப்பழம் சின்னம் கேட்டால் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.. மேஜை சின்னம் கேட்டால் அதுவும் இல்லை என்றார்கள். கடைசியில் இருக்கும் இரண்டில் ஒருவர் உதயசூரியனுக்கு மாறிவிட, வெறுப்பாகிவிட்ட திருமாவோ, எதையாவது ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கினால் அதில் போட்டியிட்டு கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதில் நேற்றுதான் பானை சின்னம் கிடைத்துள்ளது.

கேட்ட தொகுதிகளோ, தொகுதிகளின் எண்ணிக்கையோ கிடைக்கவில்லை என்றால், சின்னம்கூட கிடைக்கவில்லை என்பது தர்மசங்கடமான நிலைமைதான்! பம்பரம் கிடைக்குதான்னு பார்க்கலாம்னு வைகோ காத்திருக்கிறார்! ஆனால் மறுபக்கம் அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனுக்கு மட்டும் சைக்கிள் டக்கென கிடைத்து விட்டது.. ஆனால் வைகோவுக்கு மட்டும் ஏன் இப்படி இழுத்துக் கொண்டிருக்கிறது. புரியலையே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.