05/04/2019

மினி லாரியை ஆட்டைய போட்ட இருவர் கைது...


விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தியாகதுருகம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் திடீரென அங்கிருந்து ஓட தொடங்கினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விரட்டிச் சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த சயத்அமானுல்லா மகன் ரபி (வயது 30), அங்கேரிபாளையத்தை சேர்ந்த சயத்முகமது மகன் யாசின்முகமது(32) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகதுருகத்தை சேர்ந்த ரஜினி(40) என்பவருக்கு சொந்தமான மினி லாரியை திருடிய வழக்கில் தேடப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட 2 பேரும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விருத்தாசலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அதில் யாசின்முகமது மீது திருப்பூர், பல்லடம் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரபி, யாசின்முகமது ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மினிலாரி மீட்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.