27/04/2019

இயற்கை என்றால் என்ன?



நாம் பார்க்கும் செடி, கொடி, மரங்கள்தான் இயற்கையா? இல்லை, இயற்கையை சட்டத்திற்குள் வட்டமாகவோ அல்லது வட்டத்திற்குள் சட்டமாகவோ அடக்கிவிடமுடியாது. இயற்கைதான் நமது "பிரதான ஆசான்" என்கிறார் ஜப்பான் நாட்டை சேர்ந்த, உலகத்தின் தலைசிறந்த இயற்கை விஞ்ஞானி "மசானபு புகாகோ". இயற்கையில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் தொடர்நிகழ்வுகளை அறிந்துகொள்வதே அறிவியல் என்கிறார் அவர். நமக்கு கல்லூரியில் கல்வி கற்றுத்தரும் அனைத்து ஆசிரியர்களும் இரண்டாம் நிலை ஆசான்கள், இயற்கையே பிரதான ஆசான் என்பதற்கு பல விஷயங்களை சொல்ல முடியும்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் போடப்படும் ஊசிக்கு, கொசுக்கடிதான் முன்னோடி, கண்கள், கேமெராவிற்கு முன்னோடி, காதுதான் ஒலிவாங்கிகளுக்கான முன்னோடி. மனிதர்கள் குகைகளில் வாழ ஆரம்பித்தே சில ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகின்றன, ஆனால் தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி பல கோடிஆண்டுகள் ஆகிவிட்டன, மீனவர்கள் கடந்த சில பத்தாண்டுகளாகத்தான் வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள், ஆனால் சிலந்திகள் வலைபின்னி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. மான்களுக்கு இருக்கும் கொம்புகளும் யானைகளுக்கு இருக்கும் தந்தங்களும் "தற்காப்பு ஆயுதங்கள்", பறவையை கண்டான் விமானம் படைத்தான், தும்பிகள்தான் ஹெலிகாப்டர்களுக்கான உந்துசக்தி. உலகத்தின் தலைசிறந்த நகைச்சுவை கலைஞன் "சார்லி சாப்ளினின்" பிரத்தியேக நடைக்கு காரணம் பென்குயின்கள்.

இப்போது நாம் கண்டுபிடித்ததாக சொல்லப்படும் அனைத்தும் இயற்கையிலிருந்து அறிந்தவற்றை வைத்தே, இயற்கைதான் நமது பிரதான ஆசான் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடியும். அப்படிச்சொன்ன மசானபு புகாகோவின் புத்தகங்களை படித்து பல விஷயங்களை அறிந்துகொள்ள, சென்னை புத்தக காட்சியில் பூவுலகின் நண்பர்கள் அரங்கிற்கு வாருங்கள். அவரின் கரம்பற்றி நம்முடைய இயற்கையை பற்றி அறிந்துகொள்வோம்.

1980களின் மத்தியில் புகாகோவின் "one straw revolution" என்ற நூலை தமிழிலில் மொழிபெயர்த்து "ஒற்றை வைக்கோல் புரட்சியாக" பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டது படித்து பயனடையுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.