07/08/2020

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட்: அதிகாரிகள் ஆய்வு ; பரபரப்பு...



சென்னை: சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு நடத்தினார்.

லெபனானின் தலைநகர், பெய்ரூட்டின் துறைமுக பகுதியில் நேற்று முன்தினம் மாலை, துறைமுகத்தில் சேர்த்து வைத்திருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த விபத்தில் இதுவரை, 100 பேர் இறந்துவிட்டதாகவும், 4,000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நிறுவனம் ஒன்று, உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்த 740 டன் மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், வட சென்னையில் உள்ள துறைமுக கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 6 ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை. கிடங்கை சுற்றி, வீடுகள் எதுவும் இல்லை. அம்மோனியம் நைட்ரேட்டை, நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. கொரோனா காலம் என்பதால், நீதிமன்ற உத்தரவின் பேரில், மின்னணு முறையில், 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு தலைமையிலான அதிகாரிகள், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு, சென்று ஆய்வு செய்தனர். அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.