12/09/2020

மறைக்கப்பட்ட மாபெரும் போராளி செவாலியர் செல்லான் நாயகர்: வன்னிய போபியாவின் இன்னொரு எடுத்துக்காட்டு...



சுதந்திர போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய தியாகங்களை செய்த தியாகிகள், "அவர்கள் பிறந்தது வன்னியர் சாதியில்" என்கிற ஒரே காரணத்துக்கான இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள். அவ்வாறு, புதுச்சேரி விடுதலைக்காக அயராது போராடி, அப்போராட்டத்தில் துப்பாக்கி குண்டடிப் பட்டு, புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கு முதன்மை காரணமாக இருந்த போதும், அம்மாநில வரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டவர் செவாலியர் செல்லான் நாயகர். இன்று அவரது 136 ஆவது பிறந்த நாளில் அவரது தியாக வரலாற்றை நினைவு கூறுவோம்.

வன்னியபோபியா எனும் வெறுப்பு...

வன்னியர்களில் திறமைசாலிகள், சாதனையாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பவர்கள், அவருடன் பணியாற்றுபவர்களாலும் உயரதிகாரிகளாலும் அவரது சாதி என்னவென்று தெரியாதவரை மதிக்கப்படுவார்கள். எப்போது அவர் வன்னியர் என்பது மற்றவர்களுக்கு தெரிகிறாதோ, அப்போதே திட்டமிட்டு முடக்கப்படுவார்கள்! இது எல்லா துறையிலும் நடக்கிறது.

அரசியலில் காலம் காலமாக வன்னியர்களை ஓரம்கட்டுவது நடந்து வருகிறது. அதிலும் ‘உழைப்பதற்கு வன்னியர்கள், உயர் பதவிகளுக்கு மற்றவர்கள்’ என்பதே வரலாறு ஆகும். சுதந்திரப் போராட்டத்தில் முன் நின்ற வன்னியர்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஓரம் கட்டப்பட்டார்கள். 

மகாத்மா காந்தியின் சத்தியாகிரப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகி நாகப்பன் படையாட்சி இந்திய நாட்டில் போற்றப்படவில்லை. இந்தியாவின் முதல் நிலவுரிமைப் போராளி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகரை யாருக்கும் தெரியவில்லை. தமிழகத்தை சேர்ந்த விடுதலைப் போராளிகள் சர்தார் ஆதிகேசவலு நாயகரும், ஜமதக்னியும், அஞ்சலை அம்மாளும் புகழப்படவில்லை. அவர்களைப் போன்றே, புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய மாபெரும் போராளி செல்லான் நாயகருக்கு புதுவை வரலாற்றிலேயே இடம் இல்லை.

நாகப்பன் படையாட்சி, அத்திப்பாக்கம் வெங்கடாசல் நாயகர், சர்தார் ஆதிகேசவலு நாயகர், அஞ்சலை அம்மாள், செல்லான் நாயகர் - இந்த தியாகிகள் வன்னியர் சாதியில் பிறந்தார்கள் என்பது மட்டும் தான், அவர்களது தியாகம் இருட்டடிக்கப்பட்டதற்கான ஒரே காரணம் ஆகும்! இவ்வாறான "வன்னியபோபியா" (VANNIYAPHOBIA) சுமார் 500 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திட்டமிட்டு வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

மாபெரும் போராளி செவாலியர் செல்லான் நாயகர்...

புதுச்சேரி காலப்பட்டு கிராமத்தில் 1884 செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள், இரத்தின சபாபதி, இரிசம்மாள் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார் செல்லான் நாயகர். அவர் சபாபதி என்கிற பெயராலும் அழைக்கப்பட்டார். காலாப்பட்டு பள்ளியில் தொடக்கக் கல்வி முடிந்து, 1898 ஆம் ஆண்டு College Colonial கல்லூரியில் சேர்ந்தார். சிறு வயதிலேயே தமிழ், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்றுத்தேர்ந்தவர், 1905 ஆம் ஆண்டு இளநிலை கல்லூரியில் (Baccalaurat) முதல் மாணவராக பட்டம் பெற்றார். 1906 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1909 ஆம் ஆண்டு  சட்டக்கல்வி பட்டம் பெற்றார்.

இதனிடையே 1907 ஆம் ஆண்டு தனபாக்கியம் என்பவரை திருமணம் செய்து, பத்மதிலகம், கமலாதேவி என இரு குழந்தைகளுக்கு தந்தை ஆனார். இரண்டாம் குழந்தை பிறந்த 6 மாதத்தில் அவரது மனைவி மரணமடைந்தார். செல்லான் நாயகர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை. 1912 ஆம் ஆண்டு பாரிஸ் பல்கலைக் கழகத்தில் சட்டமேற்படிப்பு (Licence en Droit) முடித்து 1914 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார்.

செவாலியர் செல்லான் நாயகரின் அரசியல் வாழ்க்கை...

புதுச்சேரி சட்டசபையின் முந்தைய வடிவமான பிரதிநிதித்துவ சபைக்கு செல்லான் நாயகர் 1919 ஆம் ஆண்டு தேர்வானார் (Representative Assembly). 1920 ஆம் ஆண்டு பொதுச்சபை உறுப்பினராக (Conseil General) தேர்வானார். 1922 ஆம் ஆண்டு பாப்புலர் கட்சி எனும் கட்சியை தோற்றுவித்தார். 1927 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தை தொடங்க காரணமாக இருந்தார். 1928 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது. அவர் உழவர்கரை  நகராட்சியின் மேயராக பதவியேற்றார். பிரஞ்சு அரசாங்கம் அமைத்த தொழிலாளர் நலனுக்கான குழுவில் அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம், குறைவான வேலை நேரம் என்பதை அக்குழு பரிந்துரை செய்தது. அது 1937 ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டமாக இயற்றப்பட்டது.

செல்லான் நாயகர் கவிஞர் பாரதிதாசனுக்கு நண்பராக இருந்தார். அவருடன் சேர்ந்து 1930 ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அழைத்துவந்து புதுச்சேரியில் சுயமரியாதை மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் இந்தியர்களை குறைவாக நடத்தும் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 

1928 - 1933 இடையே புதுச்சேரி பொதுச்சபைக்கு அவைத்தலைவராக (President of the Conseil General) இருந்தார். மெட்ராஸ் நிதிமன்றத்துக்கும் பிரஞ்சு அரசுக்கும் சட்டவல்லுநராக உதவிகள் செய்தார். பிரஞ்சு இந்தியாவில் புகழ்பெற்ற வழக்கறிஞராக கோலோச்சிய செல்லான் நாயகருக்கு, பிரஞ்சு அரசாங்கம் 25.11.1933 அன்று பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் (Chevalier) விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

புதுவை சுதந்திரப் போராட்டம்...

பிரிட்டிஷ் இந்தியாவை விட ஒப்பீட்டளவில் பிரஞ்சு இந்தியாவின் அரசியல் சூழல் நன்றாகவே இருந்தது. ஆனாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் தாக்கத்தால், புதுவை மக்களும் இந்தியாவுடன் இணைய விரும்பினர். இதனால் ஈர்க்கப்பட்ட செல்லான் நாயகர் 1934 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி புதுவை வருகையின் போதும், 1936 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு புதுவை வருகையின் போதும் அவர்களை வரவேற்பவராக இருந்தார். அதன்மூலம் புதுவையின் விடுதலைக்கான வழிகாட்டியாக செல்லான் நாயகர் விளங்கினார்.

புதுவையின் விடுதலைக்கான விதைகளை செல்லான் நாயகர் விதைப்பதை உணர்ந்த பிரஞ்சு அரசு, ஆறுமுகம் படையாட்சி எனும் தேடப்படும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக 1934 ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டியது. 1937 ஆம் ஆண்டு குண்டர்களை விட்டு அவர் மீடு தாக்குதல் தொடுத்தது. அவரது மைத்துனர் பார்த்தசாரதியை அரசு பணியில் இருந்து நீக்கியது.

1945 ஆம் ஆண்டு செல்லான் நாயகரும் மற்றவர்களும் இணைந்து தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front) எனும் விடுதலை கூட்டமைப்பை உருவாக்கினர். விடுதலையை சிதைக்க முயன்ற பிரஞ்சு அரசு இடதுசாரி தலைவர் சுப்பையா மீதும், கவிஞர் பாரதிதாசன் மீதும் பொய்வழக்குகளை புனைந்தது. அனைத்து வழக்குகளையும் தனது சட்டப்போராட்டத்தால் முறியடித்து அவர்களை விடுதலை செய்தார் செல்லான் நாயகர்.

1946 ஆம் ஆண்டு பிரஞ்சு இந்திய தேசிய காங்கிரஸ், பிரஞ்சு இந்திய மாணவர் காங்கிரஸ் ஆகிய விடுதலை போராட்ட இயக்கஙள் தோற்றுவிக்கப்பட்டன. செல்லான் நாயகர் அவை இரண்டுக்குமே ஆலோசகராக இருந்து அவற்றை வழி நடத்தினார்.


இந்திய விடுதலைக்கு பின்னர்...

1947 ஜனவரி மாதம் பிரான்சில் இருந்து காலனியாதிக்க அமைச்சர் புதுச்சேரி வந்தபோது, செல்லான் நாயகர் அவரை சந்தித்து புதுச்சேரி மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைவது தான் என்று தெரிவித்தார். இந்திய ஒன்றியம் 1947 இல் பிரித்தானியரிடம் இருந்து விடுதலையடைந்தது. இதனையடுத்து பிரஞ்சு இந்திய பகுதிகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க போராட்டங்கள் தோன்றின. 1947 அக்டோபர் 16 புதுவையில் மாணவர் போராட்டம் வெடித்தது.

இதனையடுத்து புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பது குறித்து மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா - பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையே 1948 ஜூன் 8 அன்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஜவகர்லால் நேருவை ஏமாற்றுவதற்காக பிரான்சு அரசு செய்யும் மோசமான சதி என அதனை கடுமையாக எதிர்த்தார் செல்லான் நாயகர். பொதுவாக்கெடுப்பே தேவையில்லை என்பது அவரது உறுதியான கருத்தாகும்.

பொதுவாக்கெடுப்பு இல்லாமலேயே பிரஞ்சு இந்திய பகுதிகளை இந்திய நாட்டுடன் இணைப்பதற்காக தொடர் பிரச்சாரத்தை முன்னெடுத்தார் செல்லான் நாயகர்.1949 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை சந்தித்து, புதுவை விடுதலைக்கு ஆதரவு கோரினார். 1950 ஆம் ஆண்டு புதுவையில் இருந்துவரும் அகதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் காமராஜரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இந்தியா - பிரான்சு ஒப்பந்தப்படி புதுவை விடுதலை தொடர்பாக திட்டமிடப்பட்டிருந்து பொது வாக்கெடுப்பு குறித்து விசாரிப்பதற்காக 1951 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் (International Court of Justice) பார்வையாளர்கள் புதுவை வந்த போது, அவர்களுக்கு மக்களின் விருப்பத்தை எடுத்து விளக்கினார் செல்லான் நாயகர். அதுதான் உலக அளவில் புதுவை மக்களின் விருப்பத்தை கொண்டு சென்றது. அதே ஆண்டில் பெங்களூருக்கு வந்த இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவை நேரில் சந்தித்து, புதுவை மக்களின் விடுதலைக்கான உரிமையை எடுத்துச் சொல்லி, நேருவின் ஆதரவை கோரினார் செல்லான் நாயகர்.

1952 ஆம் ஆண்டு, புதுவையின் அனைத்து அரசியல் கட்சிகளும், தத்தமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து விடுதலைக்காக போராட வேண்டும் என்பதை வலியிறுத்தினார் செல்லான் நாயகர். இதனால் 29.08.1952 அன்று அரசின் கூலிப்படையால் மூன்று முறை சுடப்பட்டர் செல்லான் நாயகர். இரண்டு குண்டுகள் அவர் மீது படவில்லை. மூன்றவது குண்டு இடது தொடையில் பாய்ந்தது. எனினும் புதுவை பிரஞ்சு போலீசார் மீது நம்பிக்கை இல்லாததால் அவர் வழக்கு பதிவு செய்யவில்லை, புதுவை மருத்துவமனையிலும் சேரவில்லை. சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

செல்லான் நாயகர் சுடப்பட்டதை இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு கடுமையாக கண்டித்தார். "புதுச்சேரியின் மதிப்பு மிக்க தலைவர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். எனவே, புதுச்சேரியில் பொது வாக்கெடுப்புக்கான தேவை முடிந்துவிட்டது" என்று கூறினார் ஜவகர்லால் நேரு.


பிரஞ்சு இந்தியா மத்திய இணைப்பு குழு...

இந்தியாவுடன் புதுச்சேரி இணைய வேண்டும் என்று வலியுறுத்தும் அனைத்து கட்சிகளும் 21.01.1954 அன்று கடலூரில் கூடி செல்லான் நாயகர் தலைமையில் பிரஞ்சு இந்தியா மத்திய இணைப்பு குழு (French India Central Merger Committee) எனும் கூட்டு நடவடிக்கை குழுவை செல்லான் நாயகர் தலைமையில் உருவாக்கினர். பிரஞ்சு அரசின் கீழுள்ள அனைத்து இந்தியப் பகுதிகளும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும். இதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தும் தேவை இல்லை என அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று கூடி அறிவித்து போராட்டத்தில் இறங்கின.

07.04.1954 அன்று சத்தியாகிரக போராட்டத்தை நடத்த செல்லான் நாயகருக்கு அனைத்து கட்சிகள் அதிகாரமளித்தன. 13.04.1954 அன்று சித்திரை முதல் நாளில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. 14.04.1954 அன்று அவரது வீட்டினை கத்திகளுடன் ரவுடிகள் சுற்றிவளைத்தனர். அதிலிருந்து தப்பினார் செல்லான் நாயகர். இந்திய சுதந்திர தினத்தின் போது தனது வீட்டில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டார் செல்லான் நாயகர்.

புதுச்சேரி விடுதலைக்கு வழிவகுத்த செல்லான் நாயகர்...

இந்திய அரசும் பிரஞ்சு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவாக்கெடுப்பின் மூலம் புதுச்சேரியின் எதிர்காலத்தை தீர்மானிக்க 1948 ஆம் ஆண்டிலேயே உடன்படிக்கை செய்திருந்தாலும், "புதுச்சேரியில் நடப்பது ஜனநாயகமே அல்ல; அங்கு சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடக்காது" என்பதை சுட்டிக்காட்டியதுடன், புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே மக்கள் சார்பில் முடிவெடுக்கலாம் என சட்டப்போராட்டத்தை முன்வைத்தார் செல்லான் நாயகர்.

செல்லான் நாயகர் முன்வைத்த சட்டப்படியான ஆலோசனைக்கு இணங்கி, 1954 அக்டோபர் 18 அன்று கீழூர் என்ற சிற்றூரில் பிரஞ்சு அரசு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பாண்டிச்சேரி, மாகே, ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேர் வாக்களித்தனர். அவர்களில் 170 பேர் இந்திய ஒன்றியத்துடன் இணைய வாக்களித்தனர். இதனையடுத்து இந்த நான்கு பகுதிகளின் அதிகாரத்தை இந்திய அரசிடம் அளிக்க இந்திய - பிரஞ்சு அரசுகள் ஒப்பந்தம் செய்துகொண்டன (Indo-French agreement). இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களில் செல்லான் நாயகரும் ஒருவர்.

இவ்வாறு புதுச்சேரியின் விடுதலைக்கும், அதன் இந்திய இணைப்புக்கும் முதன்மை காரணமாக இருந்த செல்லான் நாயகர் 11.08.1965 அன்று இயற்கை எய்தினார்.


 வன்னியர் என்பதால் மறைக்கப்பட்ட செல்லான் நாயகரின் தியாகம்...

விடுதலை அடைந்த புதுச்சேரி அரசு, புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் பட்டியலை உருவாக்கியது. ஆனால், அதில் செவாலியர் செல்லான் நாயகரின் பெயரே இல்லை! செல்லான் நாயகர் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய காலத்தில், அவரை எதிர்த்து பிரஞ்சு அரசுக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட, புதுவையின் விடுதலை தியாகிகள் பட்டியலில் பின் நாளில் சேர்க்கப்பட்டனர். ஆனால், விடுதலையின் வேராக இருந்த செல்லான் நாயகருக்கு அதில் இடமில்லை.

காலாப்பட்டில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடம் மட்டும் தான் இவரது பெயரில் உள்ளது. மற்றபடி, செவாலியர் செல்லான் நாயகர் யார் என்பதும், அவரது தியாகப் போராட்டமும் பெரும்பான்மை மக்களுக்கு தெரியவில்லை. நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரஞ்சு அரசின் முதன்மை விருதான செவாலியர் விருது வழங்கப்பட்டபோது, அதனைப் பெறும் முதல் தமிழர் சிவாஜி என ஊடங்கள் எழுதின. ஆனால், 1933 ஆம் ஆண்டிலிலேயே அந்த விருதை பெற்றிருந்த செல்லான் நாயகரை யாரும் அறிந்திருக்கவில்லை.

புதுச்சேரி விடுதலைக்காக அயராது போராடி, அப்போராட்டத்தில் துப்பாக்கி குண்டினைத் தாங்கி, பிரஞ்சு அரசின் பொது வாக்கெடுப்பு நாடகத்தை முறியடித்து, பின்னர் விடுதலை அடைந்த புதுச்சேரி அரசிடம் எந்த சலுகையையும் பெறாமல் - ஒரு மக்கள் போராளியாகவே மறைந்த செல்லான் நாயகரின் தியாகம் போற்றப்படாமல் - புதுவையின் வரலாற்று பக்கங்களில் இருந்து மறைக்கப்பட்டதற்கு, அவர் ஒரு வன்னியர் என்பது தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இதனை ஒரு வன்னியபோபியா வெறுப்பு என்றழைக்காமல் வேறு எப்படி குறிப்பிடுவது?


குறிப்பு 1: வன்னிய போபியா என்றால் என்ன?

VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars”

வன்னியர்கள் மீதான தேவையற்ற வெறுப்புணர்வு, அச்சம், தப்பெண்ணம், ஓரவஞ்சனை உள்ளிட்டவற்றை வன்னியபோபியா என வரையறுக்கலாம். தமிழ்நாட்டில் வன்னியர் என்கிற ஒரு சமூகம் இருக்கவே கூடாது, அவர்களை எல்லா வகைகளிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இனவெறியாக இது வெளிப்படுகிறது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வன்னியபோபியா மனநோய் பிடித்துள்ளது. இவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர். வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும்.

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஒரு வடிவம்' ஆகும். யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம். மனித உரிமைகள் கோட்பாடுகளின் படி இவற்றை "racism, racial discrimination, xenophobia and related forms of intolerance" என அழைக்கிறார்கள்.

குறிப்பு 2: செல்லான் நாயகர் பிறந்த நாள் 9.1.1884 என சிலர் குறிக்கின்றனர். ஆனாலும், Dictionary of National Biography (India)., by S.P. Sen, Institute of Historical Studies, Culcutta (1974) எனும் நூலும், Journal of Indian History and Culture (JIHC) - CPR Foundation, Chennai (2015) எனும் நூலும் செல்லான் நாயகர் பிறந்த நாளினை 9.9.1884 என்றே குறிப்பிடுகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.