15/01/2021

பொங்கல்_சீர்...

 


தமிழனின் வாழ்வியல் முறை, பலமான குடும்ப கட்டமைப்பு, பாசம், பந்தம் என நமக்கான ஓர் அடையாளத்தையும் தனித்துவத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஓர் அற்புதமான வழக்கம் தான் பொங்கல் சீர். எப்படி என்பதை ஒரு உதாரணத்துடன் காண்போம் வாருங்கள். 

என் பெரியப்பா திரு. துரைராசு வயது 60க்கு மேல், அவர்களுடைய அக்கா திருமதி. சின்னப் பிள்ளை வயது 80 இருக்கும் (என் அம்மாயி, அதாவது அம்மாவை பெற்றவர்கள்), அவர்களுக்கு இன்று வரை பொங்கலுக்கு சீர் அனுப்பி வருகிறார். 

இது தான் தமிழனின் பண்பாடு, எந்த ஒரு சாத்திரமோ, சூத்திரமோ, மதமோ, கல்வியோ இதை நமக்கு கற்றுத்தரவில்லை, இது நம் வாழ்வியல் நெறி, நம் முன்னோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கடத்துதல் அவசியம்.

மேற்கூறிய உதாரணத்தில் உள்ள என் பாட்டிக்கு, 13/15 வயதில் திருமணம் ஆனதாக கூறிய நியாபகம், எனில் சிந்தித்து பாருங்கள் 65 வருடங்களுக்கு மேலாக அவர்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வந்து கொண்டு இருக்கிறது. 

இதெல்லாம் சாதாரண விடயம் தானே என்று கிராமத்தில் உள்ளவர்களுக்கு தோன்றலாம் தவறில்லை. இதை நான் இங்கு சொல்ல காரணம் உண்டு. இன்றைய சூழலில், ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் போது happy new year என்று கூறும் போது வராத கூச்சமும் தயக்கமும் இன்று பொங்கலோ பொங்கல் சொல்லும் போது வந்து விடுகிறது (உதாரணம் நீங்களாகவே இருக்கலாம், இல்லை என்றால் நலம், உங்கள் அருகில் தேடுங்கள்). இது காலப் போக்கில், பொங்கல் கொண்டாடுவோர் எண்ணிக்கையிலும் குறைவு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆதலால் பண்டிகையின் நோக்கத்தை வயதில் பெரியவர்கள் உங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இன்றே கற்றுக் கொடுங்கள். 

(மீண்டும் சீருக்கு வருவோம்) 

சீர் கொடுப்பதனால் உறவுகள் பலப்படும், மேம்படும், எத்தனை சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சரி செய்ய ஓர் வாய்ப்பு கிடைக்கும். 

ஆனால் இன்று பல இடங்களில், திருமணம் ஆன முதல் பொங்கலுக்கு (தலைப் பொங்கல்) மட்டும் தான் சீர் கொடுத்து வருகிறார்கள், இந்த நிலை மிகவும் ஆபத்தானது, இதிலிருந்து நம் சமுதாயத்தை மீட்க வேண்டியது நம் கடமை.  இந்த பதிவின் முக்கியத்துவம் புரிந்து இருக்கும் என்று கருதுகிறேன்...

அதே போல, மனைவி வீட்டாரிடம் பிச்சை எடுக்கும் கூட்டமே (வரதட்சணை), பொங்கல் சீர் என்பது, பெண் வீட்டார் அவரது வசதிக்கு ஏற்ப முழு மனதுடன் செய்யும் போது தான் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பதை கருத்தில் கொண்டு, கொடுப்பதை கொண்டு மகிழ்ச்சி அடைந்து, உறவுகளை காத்து பழகுங்கள்... 

உலகிலேயே சிறந்த குடும்ப கட்டமைப்பை கொண்ட இனம் நம் தமிழ் இனம், அதை காக்க வேண்டியது நம் கடமை. 

பொங்கல் என்பது பத்தோடு பதினோன்றாக வரும் பண்டிகை இல்லை, பொங்கல் நம் இனத்தின் அடையாளம்... 

பொங்கலோ_பொங்கல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.