28/09/2021

மூட்டு வலி போக்கும் கல்தாமரை...

 


முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி.

அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. பிறந்தது முதல் அங்குமிங்கும் பலவாறு சுழன்று அசைந்துக் கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு போதிய பயிற்சி தராவிட்டாலும் பரவாயில்லை... உடல் எடை கூடாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புகளும் ஒவ்வொரு விதமாக அசைந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அசையும் எலும்புகளானது இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் மேலும், கீழும், முன்னும், பின்னும், அங்குமிங்கும் என சதா அசைந்து கொண்டும், சுற்றிக் கொண்டுமிருக்கும் நம்முடைய கழுத்து, தோள், இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளை வாழ்நாள் முழுவதும் சீராக இயங்க வைக்கின்றன. ஆனால் உடல் எடை மற்றும் வயது அதிகரிக்கும் பொழுது எலும்பு, எலும்பை பிடித்திருக்கும் தசைநார் மற்றும் பந்தங்கள் பலகீனமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி உயவுத்தன்மையை இழந்து, தங்கள் செயல்பாட்டையும் இழக்கின்றன. இந்நிலையில் எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிடில் எலும்பு சந்திகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், இறுக்கம், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன.

போதிய நடைப்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் பருமன், கொழுப்புச்சத்து, ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுக்கொண்டிருத்தல், வைட்டமின்கள் நிறைந்த கீரை, காய்கறிகளை தவிர்த்தல், இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு, மூட்டு இணைப்புகளில் கிருமித்தொற்று, பிற மருந்துகளின் ஒவ்வாமை, முதுமை, பரம்பரை போன்ற பல காரணங்களால் ஆர்த்ரைட்டிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் முதிய வயதினரே கீல்வாயுவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைவுகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. சமவெளிப்பகுதிகளில் வசிப்பவர்களை விட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூட்டுவலிக்கு அதிகம் ஆளாகின்றனர். மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.

Smilax zeylanica என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும். தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம். இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றடமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களில் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.