06/10/2021

சித்தர் ஆவது எப்படி - 2...

 


சித்தம் என்ற பூதத்தின் இயல் தன்மை சித்தத்தை சீர் செய்வதின் மூலம் மட்டுமே ஒருவர் சித்தர் ஆகமுடியும் என தெரிந்து கொண்ட நாம், சித்தம் என்ற நீர் பூதத்தின் சுய வடிவத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது...

நீர் இன்றி அமையாது உலகு என மறை பொருளால் வள்ளுவர் சொன்னார்..

புல்லாகி பூண்டாகி, மரமாகி பல்விருச்சமாகி பறவையாய் பாம்பாய் மனிதனாய் என அடுக்கி கொண்டே ஞான சம்பந்தர் சொன்னது போல் பல் பிறவிகளை எடுத்துள்ள நாம், அப்பிறவிகளை நமது மேல் மன நிலையில் அறியாது இருக்கின்றோம்..

நம் மேல் மன நிலையில் நம் குழந்தை கால நினைவுகளையும் அறியாது இருக்கின்றோம்..

ஆனால் அத்தனை பிறவிகளின் நினைவுகளை நம் ஆழ் மனதில் எண்ணப் பதிவுகளாக பதிக்கப் பட்டு இருக்கின்றன...

ஆனால் இந்த பிறவியின் எண்ண ஆதிக்கத்தால் அமுக்கப்பட்ட ஆழ் மனதின் எண்ணங்கள் எழும்பி வர முடியாத நிலையில் நமது சித்தம் உள்ளது..

ஆனாலும் சித்தத்தில் அமுங்கி கிடக்கின்ற சில எண்ண பதிவுகளின் எழுச்சியின் காரணமாக நமது இன்றைய வாழ்வு வடிவமைக்கப் படுகின்றது..

இதை தான் விதி வழி வாழ்க்கை என்கிறார்கள்..

எல்லா விலங்குகளும் விதி வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகின்றன... மனிதன் மட்டுமே அதை மாற்ற முயலுகின்றான்....

விதி என்பதே வ்+ இதி ஆகும்.. வ் என்ற வகர மெய் எழுத்து விண்ணின் அம்சமான அறிவினை குறிக்க இதி என்பது இல்லாத நிலையை குறிக்கிறது...

அதாவது விதி எனபது அறிவு அற்ற நிலையாகும்... விதியின் எதிர் மறை சொல் தான் வாசி என்பது..

அறிவின் பலப்பட்ட உறுதி பெற்ற நிலையான மதியே வாசி.. அந்த வாசியான மதியால் மட்டுமே விதியை வெல்லலாம்...

சித்தர்கள் விதி வழி வாழ்க்கை வாழாமல், வாசி வழி வாழ்க்கை வாழ முயன்றார்கள்.. அதற்காகவே வாசி யோகத்தை கண்டு பிடித்தனர்...

அதில் சித்தத்தை பூரணமாக அறிந்து சித்தத்தின் உள்ளே சதாசிவத்தை காண முயன்றார்கள்..

சித்தம் தரும் எதிர் மறை கட்டுபாடுகளை தகர்த்து எறிந்து, அவைகளை தங்கள் அறிவு கனலால் சுட்டெரித்து, அதிலிருந்து விடுபட்டு சித்தம் தரும் மிக பெரிய பயனை பயன் படுத்த முயன்றார்கள்... அதன் விளைவாக சித்தர் என்ற ஏற்றம் பெற்றார்கள்...

இயல்பாகவே மனிதனுக்கு சித்தத்தில் எண்ண குவியல் இருக்கும்.. இந்த எண்ண குவியலிருந்து வலு பெற்ற எண்ணங்கள் தானாகவே வெளி பட்டு மனதில் பிரதிபலிக்கின்றன.. அதனால் மனதில் ஒரு குறிபிட்ட எண்ணம் என்று இல்லாமல், ஏதாவது எண்ணம் தோன்றும்..

எண்ண குவியலை சித்தத்தில் தாங்கிய மனிதன் தன் மனதில் தான் தோன்றிதனமாக தோன்றிய எண்ணங்கள் பிரகாரம் தான் பேசுவான் நடப்பான்.. அவன் நடை பாவனை எல்லாம் முன்னுக்கு பின்னும் முரணாகத்தான் தோன்றும்..

மனிதன் எதை நினைகின்றானோ அதுவாகவே ஆகிறான் என்ற சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறக்கக் கூடாது... அதே போல் மனிதன் தான் நினைத்ததை தான் செய்ய தொடங்குவான் என்பது அசைக்க முடியாத விதியாகும்...

யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே என்பது போல் முதலில் எண்ணம் தோன்றி அதன் பிறகே செயல் தோன்றும்...

ஆகவே தான், தான் தோன்றி தனமாக வரும் எண்ணங்களால் மனிதனின் செயல் பாடுகளில் மிகுந்த முரண் பாடுகள் உள்ளன..

இந்த முரண்பாடுகள் சமுதாய சூழ்நிலைகளாலும் சமுதாய பயிற்சியினாலும் கட்டுப் படுத்தப் படுகிறது..

இந்த முரண்பாடுகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுப் படுத்தப் படுகிறது..

அந்த ஒரு நிலையே அந்த சமுதாயத்தின் கலாசாரமாக கருதப் படுகிறது..

நிலை நிறுத்தப் பட்ட அந்த நிலைக்கு கீழே முரண் பாடுகளை நீக்கினாலும் மேலே கூடினாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை..

சமுதாயம் அங்கீகாரம் செய்து கொண்ட முரண்பாடுகளை ஒரு மனிதன் நீக்க முயற்சித்தால் அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது..

ஒரு மனிதன் புனிதனாக முடிவு செய்து சமுதாய முரண்பாடுகளை நீக்க முயன்றால், அவனை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும்...

அப்படியான சமுதாயம் யாரையும் தூய சித்தனாக்க விடாது..

அப்படியான சமுதாயம், சித்தனாக ஏற்றுக்கொண்ட ஒர் மனிதன் சமுதாய முரண் பாட்டிற்கு ஒத்து போனால் மட்டுமே சமுதாயத்தோடு வாழ முடியும்...

அப்படியான மனிதன் தூய சித்தனாக எப்படி இருக்க முடியும் என்பது தான் கேள்வி...

சமுதாயமா அல்லது புனிதமா என்பதில் புனிதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மனிதன் தூய சித்தர் பாதையில் பயணப் படுகிறான்..

சித்தர் யார் என்ற கேள்விக்கு முக்கியமான பதிலை இங்கே உன்னிப்பாக கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

சித்தத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தான் மட்டுமே புனித பாதையில் பயணப் படும் சித்தன் தன்னை சூழ்ந்த சூழ்நிலை மனிதர்களை மாற்ற முயலுவதில்லை.. காரணம் தன்னிடம் ஆன்மா பலம் இல்லை..

அப்படி மாற்ற நினைத்தால், மனிதர்களிடமிருந்து பெரிய தொல்லைகள் வரும் என்பதை அறிந்து ஒதுங்கி கொள்ளவே முயலுகிறான்..

தான் மட்டுமே வாழ, தன்னை சூழ்ந்த மனிதர்கள் மாள ( இறந்து போக ) பயணப்படும் மனிதனை தர்மம் என்ற பிரபஞ்சம் ஒரு சித்தனாக ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இல்லை.. இது சத்தியமாக இருக்கிறது..

இந்த தர்மத்தின் பிரபஞ்சத்தின் பார்வையில், சித்தர்களாக உலக சமுதாய கருதப் படும்.

சித்தர்கள், தங்கள் பதவிகளை இழக்கிறார்கள்.. தர்மம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவர் சித்தர் ஆக முடியும்.. முரண் பட்ட உலகம் கருதும் சித்தர்கள் ஒரு போதும் சித்தர்கள் ஆக முடியாது.. இது மிக கசப்பான உண்மை தான்... பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

ஆகவே பிரபஞ்சத்தின், தர்மத்தின் பார்வை, முரண் பட்ட சமுதாய பார்வைக்கு எதிராக உள்ளது..

இனி வரும் பகுதிகளில் புனித சித்தனின் இயல்பையும், அவனது செயல் பாடுகளையும் ஆராய்ந்து முதல் பகுதியில் சொன்னது போல், புனித சித்தனின் நேர் வழியில் புனித தூய வழியில் பயணப் பட முயல்வோமாக....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.