27/04/2017

சித்தராவது எப்படி - 38...


இழந்ததில் இருக்கின்றது இரகசியம் அனைத்தும்...

மனிதன் வாழ்வில் புதிய புதிய இலட்சியங்களை தேடி தேடி போய்க் கொண்டு இருக்கும் அதே வேளையில், தன்னை அறியாமல் தான் இழந்து கொண்டே இருக்கும் ஒன்றை விழிப்பு நிலையில் உணருவதே இல்லை..

தேடியவற்றில் சில அற்பங்கள் கிடைத்தாலும் பல அற்புதங்கள் தன் கையை விட்டு போய் இருப்பதை உணருவதில்லை..

பல அற்புதங்களை எல்லாம் அற்பங்களாக ஆக்குவதும், பல அற்பங்களை எல்லாம் அற்புதங்களாக ஆக்குவதும் தன் மனதின் வேலை என்பதை தன் விழிப்பு நிலையிலே அறியாமல் மனிதன் இருக்கிறான்..

தான் தேடிய அற்பங்களுக்கு பல பல சமாதானங்களை வடிவமைத்து, தானும் ஏமாந்தது மட்டும் அல்லாமல், மற்றவர்களையும் ஏமாற்றி பாவ சுமைகளை பெருக்கிக் கொண்டே போகிறான்..

எத்தனையோ மகான்கள் என கருதப் பட்டவர்கள் எல்லோரும் அற்புதங்களை எல்லாம் அற்பமாக்கி, அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கி விட்டு போய் விட்டார்கள்.. இது தான் இதுவரை சத்தியமாக உலகில் நடந்தது..

அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கிய சித்தர்கள் மகான்களை எல்லாம் பின் வந்தவர்கள் போற்றி போற்றி புகழ்ந்ததின் மூலம், அந்த அற்பங்களே முன் நிலையில் நிறுத்தப் பட்டு அற்புதங்கள் பின்னால் தள்ளப் பட்டு யாரும் சீண்டுவார் இன்றி கிடக்கின்றது..
இழந்து விட்ட அற்புதங்களில் கிடக்கின்ற இரகசியங்களையும் எவரும் சீண்டுவார் இன்றி இருக்கின்றன..

ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும் உன்னத பயிற்சிகளையும் நோயற்ற நிலையை தக்க வைக்கும் பயிற்சிகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப் பட்டு, நோயை குணமாக்கும் பயிற்சிகளே முன் நிலையில் உள்ளன..

அப்படி நோயை குணமாக்கும் பயிற்சிகள் பின்னால் அந்த நோய் மீண்டும் வராமல் இருக்க எந்த உத்திரவாதமும் கொடுப்பதில்லை...

முடிவில் நோயால் இறந்து போகும் மனிதனை விதி என்ற சட்டத்தில் நிறுத்தி, சமாதானப் படுத்தி விடுகிறார்கள்..

இப்பொழுது பிரச்சனையே, இழந்து போன, அந்த அற்பமாக்கப்பட்ட அற்புதத்தின் இரகசியத்திற்கு அற்புதத்தை சேர்பதுதான்.. இல்லையேல் மனித குலம் மீள்வதற்கு வழியே இல்லை..

இந்த நிலையில் அற்பத்திற்கு அற்புதம் சேர்த்த புற குருமார்கள் கொள்கையில் சிக்குண்ட மனிதகுலத்தை உணர வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல..

கருத்து போதையிலும் பகட்டிலும் சிக்கி இருப்போரை கரம் தூக்கி கரை ஏற்றுவது அவ்வளவு எளிது அல்ல.. ஆனாலும் போராட்டம் தொடர வேண்டியதிருக்கின்றது..

அந்த போராட்டம் அன்பின் அடிப்படை வைத்தே அமைக்கப் பட்டு உள்ளதால், அந்த அன்பினை பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது..

அன்பு என்பது அறிவு ஆற்றலின் வடிவே.. அதில் ஆற்றலும் அதை பயன் படுத்தக் கூடிய அறிவும், கலந்து இருந்தால் தான் அன்பு என்பது உருவாகும்..

அறிவு இல்லாமல், ஆற்றல் ஒன்றை மட்டும் பெருக்கிக் கொண்டு போகிறவர்கள், முடிவில் அந்த ஆற்றலை இழந்தே ஆகவேண்டும்..

முடிவில் காதற்ற ஊசியும் வாராது காணா கடை வழிக்கே என்ற நிலைதான்..

அறிவு இருந்தால் அந்த ஊசியையும் காணா கடை வழிக்கு கொண்டு செல்லலாம்..

ஆற்றல் மிகுந்த மகான்கள், குருமார்கள், அறிவு அற்ற தன்மையால், எல்லாம் இழந்த நிலையை எவரும் கவனிப்பது இல்லை..

அடைந்ததை வைத்து பெருமைப் படும் சீடர்கள் அவர் இழந்ததை நினைத்துப் பார்ப்பதே இல்லை..

ஒரு குரு காதற்ற ஊசி ஒன்றை காணா கடை வழிக்கு எடுத்துச் செல்ல முடியுமானால் அதுவே மிகப் பெரிய வெற்றி..

ஆனால் எரிக்கப் படவேண்டிய உடலில் இருந்து சத்தான சூட்சம தேகத்தை பிரித்து, காது அறுந்த ஊசியை கூட சம்பாதிக்க விரும்பாமல், நித்திய தேகமான காரண தேகமாகிய சூட்சம தேகத்தில் வாழும் சித்தர்கள் மிகவும் அறிவு உள்ளவர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.