19/04/2017

பாஜகவுக்கு அல்வா கொடுத்த எம் ஜி ஆர் ரசிகர்கள்...


தமிழகத்தை தனது  வேட்டைக்காடாக்க முயற்சித்தார்கள். எம் ஜி ஆர் ரசிகர்களாக அதிமுகவில் இணைந்து, இன்று அதிமுகவின் முக்கிய தலைவர்களாக இடம் பெற்றிருக்கும் பணிவு பன்னீரும், இடைக்கால முதலமைச்சர் எடப்பாடியும் இணைந்து இப்போது நடத்தி வரும் நாடகம் கண்டு பாஜகவும், மோடியும் நிச்சயம் திகைப்பின் உச்சத்தில் இருப்பார்கள்.

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அட்மிட்டான பின் அ தி மு க வின் ஒன்றரை கோடி உறுப்பினர்களை பதட்டத்தில் வைத்திருந்தது டெல்லி.

ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீருக்கும் - மன்னார்குடி குடும்பத்துக்கும் ஏற்பட்ட பதவிப் போட்டியில் தனிக்குடித்தனம் வந்த பன்னீர் மோடியை நம்பினார்.

இருவரையும் மோதவிட்டு மொத்த தமிழ் நாட்டையும் தன்வசப்படுத்த காய் நகர்த்தியது டெல்லி.

அதிகார ருசி அனுபவித்த ஓபிஎஸ் - எடப்பாடி..

அதிகார ருசி அனுபவித்த பன்னீரும் - எடப்பாடியும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளவில்லை. மன்னார்குடி குடும்பத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்ற அவ்வப்போது அதிரடி நாடகங்களை அரங்கேற்றினர்.

இவர்களது செயல்பாட்டால் சசிகலா அன் கோவால்தான் அதிமுக பிளவுபட்டது, இரட்டை இலை முடக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் வலிமையான பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் அனைவரும் புனிதர்கள், சசிகலா அண்ட் கோதான் எல்லா ஊழலுக்கும் காரணம் என்ற பிம்பத்தை எடப்பாடியும் - பன்னீரும் உருவாக்கினார்கள்.

உளவியல் யுத்தம் - சசிகலா குரூப்பை கட்சி ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுக இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற இயலும் என பன்னீர் எதிர்ப்பாளர்களை நம்ப வைக்கும் உளவியல் யுத்தம் வேலை செய்திருக்கிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம், குடி தண்ணீர் பிரச்சினைகளுக்காக வாய் திறக்காத பன்னீர், அ தி மு க இணைய பேச்சு வார்த்தைக்கு தயார் என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

எதிர்பார்க்காத பாஜக - இப்படி ஒரு திகில் திருப்பத்தை பாரதிய ஜனதா எதிர்பார்க்கவில்லை. எடப்பாடி தரப்பு பேச்சு வார்த்தைக்கு குழு அமைத்து அறிவித்துவிட்டது.

இரு தரப்பும் பதவியையும், அதன் மூலம் சம்பாதித்த சொத்துக்களையும் இழக்க விரும்பவில்லை. அதைக்காக்கும் வியூகத்தை போர்க்கப்பலில் வைத்து வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லதொரு திரைக்கதை.. ஆனால் ஒன்று... இவர்கள் இணைவதால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையப் போவதில்லை. நடப்பவைகளை எல்லாம் கூர்ந்து கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் பன்னீரும் எடப்பாடியும் இணைந்து எழுதிய திரைக்கதை இது.

உலகம் சுற்றும் மூத்த வாலிபன் மோடி எதிர்பார்க்காத ஒன்று இது என்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.