16/06/2017

பன்னீரும் பழனிசாமியும் ஒன்றுதான், மணல் குவாரிக்கு எதிராக நாமக்கல் மக்கள்...


தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூடுதல் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில்....

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திலுள்ள ஒருவந்தூர் காவிரியாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் உள்ளூர் மக்களோ கடந்த 15 நாட்களாக பல்வேறு வகையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறை பிடித்து மணலை திரும்ப ஆற்றில் கொட்ட வைத்தல், ஆற்றுக்கு சென்று சில தனியார்கள் பூஜை போட்டதை கண்டித்து அதிகாரிகளை முற்றுகை, அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை, ஊர்கூட்டம், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு என பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொண்டு வந்தனர்.

ஆனாலும் பலன் இல்லாததால்....நேற்று 13-06-2017 செவ்வாய்கிழமை மணல்குவாரி எதிர்ப்பு போராட்டக் குழுவின் அழைப்பின் பேரில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களும் மோகனூர் உளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டனர். மணல்குவாரியை எதிர்த்து போராடும் மக்களோடு இணைந்து பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கெடுத்த சுற்றுச் சூழல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலனிடம் பேசினோம்.

ஒருவந்தூர் காவிரியாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில்தான், “ஒருவந்தூர் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம், நவலடியான், சூரம்பட்டி, முருங்கை, குஞ்சாயூர் மற்றும் ஸ்ரீராம சமுத்திரம் சிறு விவசாயிகள் நீரேற்று பாசன சங்கங்கள் மூலம் காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுத்தும், கிணறு அமைத்தும், ஊற்று நீர் எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர் .

இச்சங்கங்கள் மூலம் 4,000க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒருவந்தூர் அருகே கடந்த 2007 முதல், ரூ.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பட்டணம்-சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், காளப்பநாயக்கன்பட்டி மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சி, 52 கிராம ஊராட்சிகள், 312 குக்கிராமங்கள் குடிநீர் பெற்று வருகின்றன. மேலும் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்த 5,000 ஏக்கர் ஆயக்கட்டு விவசாய நிலங்களும், 4,000க்கும் அதிகமான இதர விவசாய நிலங்களும், காவிரி ஆற்றை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுக்கு முன்பு, ஒருவந்தூரில் மணல் குவாரி அமைக்க மோகனூர், காட்டுப்புத்தூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்தி மணல் எடுப்பதற்காக அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி, தடுப்பணை கட்டித்தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அதன்படி எதுவும் நடக்கவில்லை.

ஆனால் மோகனூரில் அமைந்த மணல்குவாரியில் விதிமுறையை மீறி மணல் அள்ளியதால், நீர்வள ஆதாரம் மிகப் பெரிய அளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக போராடி கடந்த டிசம்பர்-2016 இல் மோகனூரில் அமைந்த மணல்குவாரியை நிறுத்தினர். ஆனால் அப்போதே இப்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள ஒருவந்தூர் கிராமத்தில் சர்வே எண்:643 இல் சட்டத்திற்கு புறம்பாக ஏராளமான மணல் அதிகாரிகள்-அரசு துணையோடு அள்ளியுள்ளனர்.

இந்நிலையில் ஒருவந்தூரில் சர்வே எண்:643 இல் புதிய அரசு மணல் குவாரி செயல்படுத்தினால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். மேலும் ஒதுவந்தூருக்கு அருகில் உள்ள திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஒன்றியம் உன்னியூரில் மணல்குவாரி அமைக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்பட தொடங்கினால் உன்னியூர் பகுதியும் கடும் பாதிப்படையும் என்பதால் ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்பட வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட மக்களும் போராடுகின்றனர்.

ஏற்கனவே மிகவும் அதிக அளவு மணல் இப்பகுதியில் அள்ளப்பட்டு மோகனூர் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதிபடி உடனடியாக தடுப்பணை அமைத்து கொடுக்க வேண்டும். இனி ஒவ்வொரு குவாரிக்கு எதிராகவும் நாங்கள் திரண்டு போராடுவோம். ஓ.பி.எஸ். , ஈ.பி.எஸ். இருவருமே மக்களை ஏமாற்றி வருகின்றனர். மணல் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதில் பன்னீரும் பழனிசாமியும் ஒருவர்தான்’’ என்றார்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு இணையாக, மணல் குவாரிகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு ஊடக வெளிச்சம் இன்னும் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதே நிஜம்.

பதிவு - http://www.minnambalam.com/k/2017/06/14/1497423425

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.