18/07/2017

ஈழம் அழிய வைகோ நாயூடு செய்த தவறுகள் 2...


1994ம் ஆண்டு தோன்றிய ம.தி.மு.க.வில் இந்த நாள் வரை மறுமலர்ச்சி ஏற்பட்டதா என்றால்?... வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் அனைவருமே அதற்கு பதில் சொல்வதைவிட மெளனம்தான் சாதிக்க முடியும்.

கட்சியில் தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் மட்டுமில்லை. பல கட்சிகளில் இருந்து இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ஓட்டமெடுத்தார்கள் வைகோவை நோக்கி. இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத இடத்தில், வைகோ மட்டுமே இருப்பார். எதிர்கால முதல்வர் இவர்தான். கலைஞருக்கு பிறகு தி.மு.க.வே அவரிடம்தான் போய்விடும்… இப்படி எத்தனையோ பேச்சுக்கள். அத்தனையும் இன்றளவிலும் பேச்சு பேச்சாகவே இருக்கிறது என்பதுதான் வேதனை.

ம.தி.மு.க. தொடங்கியதும் முதல் கூட்டம் சென்னை ராயபுரத்தில், தி.மு.க.வை தோற்றுவித்து அண்ணா பேசிய இடம். ராயபுரம் சுழல்மெத்தை.

முதல் கோஷம் “பொதுவாழ்வில் தூய்மை... அரசியலில் நேர்மை… லட்சியத்தில் உறுதி”.

இந்தக் கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கி, மறுநாள் விடிய விடிய நடந்து, அதிகாலை 4.45 மணிக்கு முடிந்தது.

அன்று மேடை ஏறிய வைகோவின் எழுச்சி மிக்க குரலை கேட்டதைவிட, அவரது அழுகுரல்தான் அதிகம் பேசப்பட்டது. அவரது கண்களில் வழிந்த நீர், மேடையில் வீற்றிருந்தவர்களின் விழிகளில் ஓடிய நீர், கூட்டத்தை கேட்க வந்தவர்கள் வடித்த நீர் என, ம.தி.மு.க. ஓர் கண்ணீர் மேடையாகவே ஆகியது.

கட்சித் தொடங்கி, இரண்டு வருடங்கள் எந்த மேடையாக இருந்தாலும், வைகோ அதை கண்ணீரால் நனைத்துவிடுவார். கட்சித்தலைவன் ஒரு நாள் அழலாம். ஏதாவது முக்கியமான கட்டத்தில் கண் ஓரம் ஈரம் அரும்பும். இதுதான் தலைவன்களிடம் மக்கள் பார்த்தது. ஆனால், அழுது அழுது பேசி, இன்னமும் வைகோ அழுதுக் கொண்டுதான் இருக்கிறார்.

அவர் பேசும் போது ஏதாவது விசேஷம் இருக்கும்!
அவர் கோபம் காட்டினால்,
அதில் ஓர் அர்த்தம் இருக்கும்!
அவர் அழுததால், கண்ணீர் ஓடியதை தவிர ஒரு பலனையும் அவரும் காணவில்லை. கட்சிக்காரனும் பலன் அடையவில்லை!

கட்சி ஆரம்பித்து, ஒரு வருடத்திற்குள் நடைப்பயணம் தொடங்கினார். அதுவும் யாரை எதிர்த்து தெரியுமா?

அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து.

ஜெயலலிதா தலைமையிலான அராஜக ஆட்சியை தூக்கியெறிவேன் என்று கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் அது மிகப்பெரிய ஊர்வலமாக வந்து, கடற்கரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்திக் காண்பித்தார். உண்மையிலேயே அது கின்னஸ் சாதனையாகவும் இருக்கலாம்.

கிட்டத்தட்ட 13 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுப்படான ஊர்வலம் சென்னையில் நடந்தது.
தி.மு.க. ஆடிப்போனது. வைகோவுக்கு இத்தனை கூட்டமா? என்று வாய்ப்பிளந்தது பத்திரிகைகள்.

1996ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு, ம.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1998ம் ஆண்டு யாரை கடுமையாக எதிர்த்தாரோ, அந்த அம்மையார் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தார்.

1999ம் ஆண்டு, மக்களவைக்கு மீண்டும் தேர்தல் வந்தது. இம்முறை யார் இவரை கழுத்தை பிடித்து பிடரியில் அடித்து அனுப்பினார்களோ அதே தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். கேட்டால், தான் ஏற்கனவே பா.ஜ.வுடன் கூட்டணி வைத்திருந்தேன். அக்கூட்டணியில் தி.மு.க.தான் வந்து சேர்ந்துவிட்டது என்பார் வைகோ.

அக்கூட்டணியில் இருந்த வைகோ, தி.மு.க.வுக்கும் சேர்த்துதான் பிரசாரம் செய்தார். எப்படி அவரால் முடிந்தது?

தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றியதால், பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள். அந்த தீக்குளிப்புக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று வைகோவிடம் கேட்டால், என்ன பதில் என்பதல்ல முக்கியம்.

அரசியல். அதுவும் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால், சுயமரியாதைக்கெல்லாம் அர்த்தம் தெரிந்திருந்தாலும் தெரியாமல் இருத்தல் நலம். அப்போது வைகோவுக்கு எது நலம் என்பது தெரிந்திருந்தது.
அங்கே சுயமரியாதை சிந்தனைக்கு இடம் அளித்தாரா வைகோ. அதைவிட சுயமரியாதையோடு(!) தி.மு.க.வை பாராட்டிப் பேசினார் வைகோ. தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று மேடைக்கு மேடை ,முழங்கினார் வைகோ.

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து பா.ஜ. கூட்டணி அரசிலும் ம.தி.மு.க. பங்கேற்றது.

அடுத்து, 2001ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வந்தது.

#இங்கே இருந்துதான், அரசியலில் அவர் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார் என்பதை வாசகர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டும்.

அதாவது தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் முறித்துக் கொண்டு வெளியேறியது. அதுவும் தனித்துப்போட்டி. ஒரு இடம் கூட வெற்றிப் பெற முடியவில்லை.
சரி. இருக்கவே இருக்கிறது. விடுதலைப் புலிகளை வைத்து மீண்டும் அரசியல் செய்யத்தொடங்கினார்.

புலிகளை ஆதரித்துப் பேசியதால், வைகோவை வேலூர் சிறையில் அடைத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இது நடந்தது 2002ம் ஆண்டு.

புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ, தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தப் போது, அவரை தமிழக அரசு, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சென்னை விமான நிலையத்தில் அவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிய போது, “பாசிச ஜெயலலிதா அரசை மக்கள் சக்தியைக் கொண்டு தூக்கியெறியும் வரையில் ஓயமாட்டான் இந்த வைகோ” என்ற குரல் ம.தி.மு.க.காரனின் காதில் மட்டுமின்றி, அனைத்து பத்திரிகையாளன் காதிலும் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, சிறையில் இருப்பேனே தவிர, ஜாமீன் கேட்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தார்.
ஒரு நாளா..
இரண்டு நாளா…
ஒரு மாதமா…
இரண்டு மாதமா…
19 மாதங்கள், அதாவது 577 நாட்கள் சிறையில்  இருந்தபடியே கட்சியை நடத்திய பெருமை உலக அரசியல் வரலாற்றில் வேறு எந்தத் தலைவனுக்கு கிடையாது.

திராவிட கட்சிகளில் தலைவர்களாக இருந்தவரில், அதிக நாள் சிறை தண்டனை பெற்றவர் என்ற பெருமை வைகோவைத் தவிர வேற யாருக்கும் கிடையாது. கிடைக்காது.

வேலூர் சிறையில் இருந்த அவரை, மீட்க கையெழுத்து இயக்கம் நடந்தது. அதில் முதல் கையெழுத்துப் போட்டவர் மாஜி தலைவர் கலைஞர் கருணாநிதி.

வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றித் திரிந்தார்.
40க்கு 40 அடிதத்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி. ஆனாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சிக்கு ரொம்பவே ஆடியது காங்கிரஸ். கூட்டணி கட்சிகள் கேட்ட துறைகள் எல்லாம் கிடைத்தன.
வைகோ என்ன செய்தார்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.