04/08/2017

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் முகத்தில் கரிபூசிய ஜின்னா...


1940ஆம் ஆண்டு தந்தை பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.

உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை. பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட முன்வரவில்லை. அதற்குக்காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான். இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம். "தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.

தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது 'மனக்கசப்போடு' தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று. இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்" (சி.என்.ஏ.பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)

அண்ணா மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965) சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்: "இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு....
கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க".

பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்னை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.

26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் 'நாடார்குல மித்திரன்' இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.
வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?

ஜின்னா: 'உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்' என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு 'சண்டே அப்சர்வர்' பி.பாலசுப்ரமணியம்)

அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார். இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.

9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அது வருமாறு:

"எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை" . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)

பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும் வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.

திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால் கூற முடிகிற போது...

தமிழர்களுக்காக போராடியதாக சொல்லிக் கொள்ளும் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.