28/08/2017

குரு என்பது தமிழ்ச் சொல்லேயன்றி வடமொழிச் சொல் அல்ல...


குரு என்ற சொல் சமக்கிருதம் தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொல்லேயன்றி தமிழ் வடமொழியிலிருந்து இரவல் வாங்கியதல்ல.  குரு என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் தமிழிலேயே உள்ளது.

“குருவுங் கெழுவும் நிறனா கும்மே” என்கிறார் தொல்காப்பியர்

குரு > குருத்தல் > தோன்றுதல்
குருப்பது > குருத்து (முளைப்பதற்குரிய ஆரம்பம் - கரு)
குருத்து > குருத்தோலை = கருவோலை = இளம் ஓலை, ஆரம்ப ஓலை
(காவோலை = முதிர்ந்த ஓலை - பழமொழி: ‘காவோலை விழக் குருத்தோலை சிரித்ததாம்.’ )

குரு = வெப்பம், வெப்பத்தால் தோன்றும் கொப்புளம்
குரு=  ஒளி, ஒளிவடிவான (அறிவு மிகுந்த, இருளை(அறியாமையை)ப் போக்கும் ஆசிரியன்.

குரு = சிவப்பு (செழுமை) > குருதி > உடலில் ஓடுகின்ற செந்நீர் – உயிரின் அடிப்படை.
குருதிக் காந்தள், குருதிவாரம் என்னும் சொற்களை நோக்குக.

“சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே” (குறுந்தொகை, 1: 3-4)

The hill of (the red coloured god) Murukan is full of the red flower bunches of Kaantha'l (Gloriosa superba)

குருந்த மரம் = எப்போதும் செழிப்பாக இருக்கக் கூடிய மரம். குருந்த மர நிழலில் குருக்கள் அல்லது குரவர்களிடம் கல்வி கற்பது தமிழர்களின் மரபு.

பழந்தமிழர்கள் குரு என்ற சொல்லை அரசன், தலைவன், தாய் தந்தையர், ஆசிரியர், மூத்தவன் (தமையன்) என்போரைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் உண்டு.

1.  புறநானூறு பாடல் 16 - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே

முருகற் சீற்றத்து உருகெழு குருசில் – முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா!  இப்பாடலில் ‘குருசில்’ என்ற சொல் தலைவன், அதாவது அரசன் என்ற பொருளில் இடம் பெறுகிறது

 இப்பாட்டில் பாண்டரங் கண்ணனார் சோழன் பெருநற்கிள்ளியை நோக்கி, ‘முருகன் போலும் குருசில் நீ, பகைவர் நாட்டுள் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது ஒளி செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது. இவ்வாறு தீயிட்டுக் கொழுத்திய அந்நாடு ‘கரும்பல்லது நாடறியாப் பெருந்தண் பணை’ பொருந்திய நன்னாடு. ஆனால் நீ எரியூட்டிச் செய்த போரில் உன் களிறுகளும் உன் கருத்துக்கு ஒப்பப் போர் மலைந்தன’ என்று கூறுகின்றார்.

2. பாடியவர்: கோவூர் கிழார்..  பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான்ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.
கொண்டு கூட்டு: பாண, நீ செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ எனக் கூட்டுக.

வரைப்பு = எல்லை; ஓர்த்தல் = கேட்டல்.
குருசில் = அரசன்

'வேல் கெழு குருசில்' - புறநானூறு
(வேலையுடைய தலைவா)

குரு > குரு+ அவர் > குரவர்

3. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்  குரவன் என்றால் ஆசிரியர் என்கிறார்.

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளிஇறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்  185

சிலப்பதிகாரம் -  நாடுகாண் காதை

இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்.

4. அடியார்க்கு நல்லார் தனது உரையில் ’குரவர்’  என்றால் அரசன், ஆசிரியர், தாய் தந்தையும், தனக்கு மூத்தோனும் என்கிறார்;
அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
யாவருங் கண்ட நெறி.

(இ-ள்.) அரசன் - அரசனும், உவாத்தியான் - உவாத்தியும், தாய் தந்தை - தாயும் தந்தையும், தம்முன் - தனக்கு மூத்தோனும், இவர் - என இவர்கள், நிகர் இல் குரவர் - தமக்கு நிகரில்லாக் குரவராவார், இவரை - இவர்களை, தேவரைப் போலத் தொழுது எழுக - தேவரைப்போலத் தொழுது எழுக, என்பது - என்று சொல்லப்படுவது, யாவரும் - எல்லாரும், கண்ட - வரையறுத்துக் கூறிய, நெறி - வழி.

(ப. பொ-ரை.) அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவர்.

5. ‘குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ’ - (புறஞ்சேரியிறுத்த காதை) என்கிறது சிலப்பதிகாரம்.
ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது   90

கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய

குரவனும் நோயும் நிறமும் பாரமும் அரசனும் குரு எனலாகும் - (பிங்கல நிகண்டு, 10: 370)

Teacher, disease (of the pox or blister type), colour, heaviness and king are termed as Kuru...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.