15/08/2017

வாருங்கள் தேசியக் கொடியை கிழிப்போம் - பாவலர் அறிவுமதி...


1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்தி விட்டனர்.

அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை.

விடிந்ததும் விழித்துப் பார்த்தோம்.

போர்வை இருந்தது கோவணத்தைக் காணவில்லை.

தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம் விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம்.

வாருங்கள் தேசியக்கொடியை கிழிப்போம்.

அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக்கொள்வோம்.

மேற்கண்ட இந்தப்பாடல் பாவலர் அறிவுமதி அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். இந்தப் பாடல் எழுதப்பட்டதற்குப் பின்னால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொல்லாடல் எழுப்பப்பட்டது. அதன் பெயர் தமிழ்த்தேசியம்.

இன்றைக்கு தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்து வரும் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு ஒரு மாநாடொன்று காரணமாக அமைந்தது. அந்த மாநாட்டில் தான் தமிழ்த்தேசிய உரிமை முழக்கம் ஓங்கி ஒலித்தது. 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாள் பெரியார் திடலில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டின் பெயர் தமிழ்த் தேசிய தன்னுரிமை மாநாடு .

தோழர் பெ.மணியரசன், பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோர் முன்னின்று இந்த மாநாட்டைக் கூட்டினர். இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன், கவிஞர் இன்குலாப், கவிஞர் தணிகைச்செல்வன், பாவலர் அறிவுமதி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன் (உரை வாசிக்கப்பட்டது) பேரா.தீரன், சாலய் இளந்திரையன், சேலம் அருள்மொழி, ஈழ வேந்தன், இயக்குநர் வி.சி.குகநாதன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.

இந்த மாநாட்டில் முதன்மையானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது பின்வருமாறு:  "தமிழர்கள் ஒரு தனித்தேசிய இனத்தவர். பிற தேசிய இனங்களுடன் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்று முடிவெடுக்கும் உரிமை ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. இந்த உரிமைக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with rights to secede) என்று பெயர்.

தமிழ்த் தேசிய இனத்திற்கு உடனடியாக இவ்வுரிமை வேண்டும். இந்தியா ஒரு தேசம் அன்று. இந்தியாவில் பல தேசிய இனங்கள் பல தேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லாத் தேசிய தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை வேண்டும்.

தேசம் என்று குறிப்பிடப்பட வேண்டியவற்றை மாநிலம் என்று கூறுவது தவறு.

குடியுரிமை வழங்கும் அதிகாரம் தமிழகத்திற்கு வேண்டும். தமிழ்நாட்டைத் தமிழ்த்தேசக் குடியரசு என்று அழைக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் இருப்பது போல் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை கொண்ட தேசங்களின் ஒன்றியமாக இந்தியாவை மாற்ற வேண்டும்."

இந்த மாநாட்டின் தீர்மானத்தை  எதிரொலிக்கும் வகையில் பாவலர் அறிவுமதி இந்திய  தேசியக் கொடி கவிதையை வாசித்த போது அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். அவரோடு சேர்ந்து ஈரோடு தமிழன்பன் அவர்களும் "அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்" என்று கோபக்கனல் வீசப் பாடினார்.

அன்றைக்கு மாநாட்டை கொச்சைப்படுத்தும் நோக்கில் பார்ப்பன 'துக்ளக்' ஏடு செயல்பட்டது. மாநாட்டில் பேசிய பலரது பேச்சுகளையும், கவிதைகளையும் தொகுத்து வெளியிட்டதோடு பிரிவினை கோரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு  கருணாநிதி அரசை கேட்டுக்கொண்டது.

துக்ளக் சோவின் ஆள்காட்டித்தனத்திற்கு கருணாநிதி அரசு உடனடியாக அடிபணிந்தது. பெ.மணியரசன் அவர்கள் பிரிவினைத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பாவலர் அறிவுமதி மீது இந்திய அரசுக் கொடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தூதர்சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்  ஈரோடு தமிழன் அப்பணியிருந்து நீக்கப்பட்டார்.

வழக்கு விசாரணைக்காக  தோழர் பெ.மணியரசனும், அறிவுமதியும் எழும்பூர் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கினர். எட்டாண்டுகள் கழிந்த பின்னர் வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்த்தேசிய தன்னுரிமை மாநாடு நடத்தப்பட்டப்போது தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு ஆதரவாக திராவிட இயக்கச் சார்பாளர்கள் சுப.வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி உள்ளிட்ட பலர் துணை நின்றனர்.

ஆனால் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் அண்டைய தேசிய இனங்களின் தமிழர் விரோதப் போக்கு ஆகியவற்றுக்கு திராவிட க் கருத்தியல் உடன்பட்டு  நிற்பதால் அவற்றை பகைத்துக் கொள்ள சுப.வீ., பாவலர் அறிவுமதி போன்றவர்களால் இயல வில்லை. குறிப்பாக சுப.வீ. அவர்கள் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் படைவரிசையில் முதல் நபராக விளங்குகிறார்.

இந்தியத்தை நம்பி ஏமாளியானது போதும், திராவிடத்தை நம்பி அனாதையானது போதும் என்ற நிலைக்கு தமிழக இளைஞர்கள் தற்போது வந்து விட்டனர்.  தமிழ்த்தேசிய விடுதலை இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் தமிழர்நலன் காக்கும் கொள்கையென்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்.

தமிழ்நாட்டை அடிமைமுறி நாடாக  இந்திய அரசு வைத்திருப்பதன் அடையாளம் தான் இந்திய விடுதலை நாள் கொண்டாட்டாமாகும். தமிழர்கள் இந்திய விடுதலை நாளைக் கொண்டாடுவது  தங்களுக்குத் தாங்களே விலங்குபூட்டிக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்.

இந்திய விடுதலைத் திருநாளைப் புறக்கணிப்போம்.

தமிழ்த் தேசிய விடுதலைக்குப் போராடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.