20/08/2017

படிக்காத ஏழை விஞ்ஞானி, வறுமையின் பிடியில்...


தனது கண்டு பிடிப்புக்காக டெல்லி செல்ல வழியின்றித் தவிக்கும் மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், உதவும் உள்ளங்களே; இவருக்கும் கொஞ்சம் உதவுங்களேன்...
   
தண்ணியிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டு பிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக்குக்கு அழைப்பு வந்தும் பண வசதி இல்லாததால் தில்லிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டு பிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், அதனை விஞ்ஞானிகள் முன்பு செய்து காட்ட தில்லியிலிருந்து அழைப்பு வந்தும் பண வசதி காரணமாக செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

மின் விசிறியிலிருந்து குக்கர் வரை மக்களின் வசதிக்கு ஏற்றாற்போன்று உருவாக்கி வைத்திருக்கிறார். ஒற்றை மோட்டாரில் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்ட மின்விசிறியைக் கண்டு பிடித்துள்ளார்.

இதுபோன்று 45 பொருட்களைக் கண்டு பிடித்து காப்புரிமை பெற்றுள்ளார். தனது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு உருவாக்கிய ரைஸ் குக்கர்தான் இவரது முதல் படைப்பு.

கடலில் கொட்டும் எண்ணெயை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை அண்மையில் உருவாக்கியுள்ளதுதான் அவரின் கண்டு பிடிப்பிலெல்லாம் மிக மையமானது.

வெறும் 7ஆம் வகுப்பே படித்துள்ள அப்துல் ரசாக், 'சென்னை துறைமுகத்துல ரெண்டு கப்பல் மோதி கொட்டிய எண்ணெயால அந்தப் பகுதி சுற்றுச்சூழலே ரொம்ப பாதிக்கப்பட்டிருச்சி... அதைவிட அதை அள்ளுறதுக்கு வாளிய பயன்படுத்துனது தான் எனக்குள்ள ஒரு தாக்கத்த ஏற்படுத்திருச்சு... அந்த வேகத்துல உருவாக்குனதுதான் சார் இந்த மிஷின்' என்கிறார்.

தனது நண்பர் கிருஷ்ணபிரசாத் செய்த பண உதவியால் இச்சிறு மாடல் கருவியை உருவாக்கியிருக்கிறார். பண வசதியின் பொருட்டு கருவியின் அளவை பெரிதாக்கலாம் என்கிற ரசாக். அது செயல்படும் விதத்தை நமக்கு டெமோ-வாகக் காட்டுகிறார்.

'இக்கருவியின் மூலம் 90 சதவிகித எண்ணெய் பிரிப்பு பணியைச் செய்துவிடலாம் என்றும் மிச்சம் மீதியுள்ள எண்ணெய்ப்படலத்தை மற்றொரு கருவியின் துணை கொண்டு முற்றிலுமாக நீக்கிடவிட முடியும்' என்று கூறும் ரசாக்கை, புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசிய அறக்கட்டளை தில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அப்துல் ரசாக் கண்டுபிடித்துள்ள எண்ணெய் பிரிக்கும் இயந்திரத்தின் முழு மாடலோடு, வருகை, விஞ்ஞானிகள் மத்தியில் அதனை டெமோ செய்து காட்ட அழைப்புவிடுத்துள்ளது. 'இந்த இயந்திரத்தை அதன் முழு வடிவத்தோடு, தயாரிப்புச் செய்ய குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் செலவாகும். அது போக தில்லி செல்வதற்கான செலவுகள் என ஒரு லட்சத்திற்கும் மேல் தேவைப்படுகிறது' என்கிறார்.

கண்டுபிடிப்புச் செய்வதை மட்டுமே தனது வேலையாகக் கொண்ட அப்துல் ரசாக்கிற்கு, தில்லி செல்வதற்கான செலவுகள் அவருக்குள் மலைப்பை ஏற்படுத்திவிட்டது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்துள்ளார். அவர், இவரது கோரிக்கை மனுவை ஏற்று அம்மனுவை மதுரை மாவட்ட தொழில் மையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அந்நிறுவனம் இவரது வயது மற்றும் கல்வித்தகுதியைக் காரணம் காட்டி கடனுதவியையும் மறுத்துள்ளது.

'இக்கருவிக்கான அங்கீகாரத்தை இந்திய அரசாங்கம் வழங்கியதும் இதனை நாட்டுக்காக அர்ப்பணிக்கவே விரும்புகிறேன்' என்கிறார் ரசாக் ., மூன்று வயதில் தாயை இழந்தவர். அப்போதிருந்தே தனியாகவே வாழ்ந்து இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

தில்லியில் விஞ்ஞானிகள் முன்பு தனது கண்டுபிடிப்பு குறித்த சோதனையை நடத்திக் காட்டத் தயாராக இருக்கும் இந்த படிக்காத விஞ்ஞானியின் இன்றைய பரிதவிப்புக்கு, தமிழ் கூறு நல்லுலகம் எவ்வாறு கடமையாற்றப்போகிறது?

தொடர்பு எண்: 9894905268...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.