27/08/2017

சுப்பரமணியன் - முருகனின் தமிழ்ப்பெயரே தவிர வடமொழிப்பெயர் அல்ல...


முருகன், வேலன், சரவணன், வடிவேலன், குமரன், செந்தூரன் போலவே சுப்பிரமணியன் என்ற பெயரும் தமிழ்ப்பெயரேயன்றி வடமொழிப் பெயர் அல்ல, அது வடமொழியாக்கப்பட்டது.

உதாரணமாக, சென்னையில் கலாசேத்திரப் பார்ப்பனர்கள் எவ்வாறு தமிழர்களிடமிருந்து சதிராட்டத்தை இரவல் வாங்கி, அதற்கு மெருகூட்டி, அதற்குப் பரதம் என்று பெயரிட்டு விட்டு, அதை வடநாட்டுப் பரதமுனிவர் உருவாக்கியதாக கதை விட்டது  மட்டுமன்றி,  அதற்கு எவ்வாறு  பாவம், தாளம், ராகம் என்றெல்லாம் அர்த்தம் கற்பித்தார்களோ, அவ்வாறு தான் முருகனின் இன்னொரு தமிழ்ப்பெயராகிய சுப்பிரமணியன் என்ற பெயருக்கும் சமக்கிருதத்தில் பல கருத்துக்களைக் கற்பித்தனர்.

சுப்பிரமணியன் என்ற முருகனின் பெயர் தமிழா அல்லது வடமொழியா என்பதை நான்  தமிழாசிரியருடனும், வேறு பலரிடமும் முன்பே விவாதித்திருக்கிறேன்.

அவர்களுடைய கருத்துடன்,  சமக்கிருதம் என்று கருதப்படும் பல சொற்கள் உண்மையில் தமிழ்ச்சொற்களே என்பதை தமிழர்கள் அறியும் வகையில் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலரது கருத்துகளின் தொகுப்பே இதுவாகும். சுப்பிரமணியம் என்பதற்கு சமக்கிருத வாதிகள் கூறும் கருத்துக்களுடன் ஒப்பிடும் போது தமிழில் அதன் கருத்து தான் பொருத்தமானதாக எனக்குப் படுகிறது.

Subramaniam (Tamil: சுப்பிரமணியம் or சுப்ரமணியம்; Telugu: సుబ్రహ్మణ్యం) is a South Indian name. It is also be spelled Subramanian or Subramanyam. The name is derived from merging two common Sanskrit/Tamil words supri-ya (सु), meaning "good" or "dear," and mani-ya, meaning jewel; the name translates loosely as "worthy jewel". Other mistranslations such as "dear to Brahmins" are widespread.

சுப்பிரமணியன் என்பது சுப்பிரியா என்ற சமக்கிருதச் சொல்லும் மணி என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து உருவாகிய பெயர் என்கிறது விக்கிப்பீடியா.

தமிழில் சுப்பிரமணியன் எனும் முருகனின் பெயரின் கருத்தைப் பார்ப்போம்:

சு(ல்) + பரம் + அணியன் = சுப்பரமணியன் =  ஒளிரும் + கடவுள் + நெருங்கியவன் = (தமிழர்களுடைய) நெருக்கமான ஒளிரும் கடவுள் = முருகன்

சுல்:

தமிழில் சுல் என்பது ஒளிப்பொருள் கொடுக்கும் வேர்ச்சொல்.

சுல்3 (சிவத்தற் கருத்துவேர்)

பரம்:

தமிழில் பரம் என்பது பரம்பொருள் (கடவுளைக் ) குறிக்கும்

பரம் > பரமன்
பரம் என்ற சொல் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டு சமக்கிருதத்தில்  பிரம் ஆகியது.

பரமன் (தமிழ்) – பிரமன் (சமக்கிருதம் )
பரமம் > பிரமம்
பரமண்ணர் > பிரமண்ணர் > பிராமணர்
பரம் + சாதம் (சத்து (மென்மை) என்ற தமிழ்ச்சொல் (சோறு) = பிரசாதம் (கடவுளுக்குப் படைத்த சோறு)
பரம் +அரசு +அதி +பதி = பிரசாதிபதி = பிரம்மம்

அணியன்:

தமிழில் அணியன் என்றால்  நெருங்கியவர் (பிடித்தமானவர்)  எங்களுடையவன், சொந்தக்காரன், என்று பொருள் படும்.

"நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு."     (நாலடியார் 218)

(பொ-ள்.)நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின் சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிக நெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவி செய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?; சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்த இயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும் அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.

"சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்". (திருவாய்மொழி)

தமிழ்க் கடவுளாகிய முருகனின் பெயர்களில் ஒன்றாகிய சுப்பிரமணியன் என்ற பெயர் தான் பார்ப்பனர்களின் மத்தியிலும், தமிழர்களல்லாத திராவிடர்கள் மத்தியிலும் பரவலாக வழக்கத்தில் உள்ளது.

அதனால் சிலர் அதை சமக்கிருதப் பெயர் எனவும், பார்ப்பனீயம் முருகனை சுப்பிரமணியன் ஆக்கி விட்டது, அதனால் சங்ககாலத்தில் தமிழர்கள் வெறியாடல் ஆடி வணங்கிய அந்த முருகன் வேறு, இன்றைக்கு தமிழ்நாட்டில் குன்றுகள் தோறும் குடியிருப்பது மட்டுமன்றி, ஈழத்திலும், ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் கோயில் கொண்டிருக்கும் தமிழ்க்குமரனுக்கும் தொடர்பு கிடையாது என்பது போல உளறத் தொடங்கி விட்டார்கள்.

கதிர்காமத்தில் முருகன் இயந்திர வடிவில் இருப்பதால் அங்கு சிலைகள் கிடையாது, ஆறுமுகங்களுடன் கூடிய திரைச்சீலை மட்டும் தான் தொங்குகிறது. அந்த திரைச்சீலையில் கந்தபுராணம் கூறும் ஆறுமுகப்பெருமான் மட்டும் அங்கே காணப்படுவதால், ஆதித்தமிழர்களின் கடவுளாகிய முருகன் அங்கு கிடையாது, அதனால் தமிழர்களுக்கும் கதிர்காமக் கந்தனுக்கும் எந்த தொடர்புமில்லை, என்று கூறினால், அது எவ்வளவு அபத்தமானது என்பதை சிலர் உணர்வதேயில்லை. தமிழர்களின் வழிபாட்டில், அவர்களின் பாரம்பரியத்தில் பார்ப்பனீயம் பல மாற்றங்களை ஏற்படுத்தி, உருமாற்றி விட்டது என்பதை மறுக்க முடியாது.

அதே வேளையில் சங்ககால முருகன் தான் தமிழர்களின் முருகன், இன்றைக்குச் திருச்சீரலைவாயிலில் சுப்பிரமணியன் என்ற பெயருடன் நிற்கும் முருகன், ஆதித்தமிழர்கள் வணங்கிய உண்மையான முருகனல்ல என்று சிலர் கூறுவது, முருகனை வணங்கும் பெரும்பான்மை தமிழர்களை அவமதிக்கும் அதிகப்பிரசங்கித்தனமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.