15/11/2017

பதனீர் – தமிழகத்தின் குளிர்பானம்...


நீர்... பதனீர் ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம்.

பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும்..

செம்மண், சரளை, மணல், கரிசல் என்ற மண் வேறுபாடுகள் இன்றி எல்லா மண்ணிலும் வளர்ந்து பலன் தரும் பனை தமிழனின் பரம்பரைச் சொத்து ஆகும். தமிழனின் மூளைச் சோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பனைமரம்.

செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவைகளின் நச்சுக்கரங்களால் இன்னும் மாசுபடாமல் கொஞ்சம் பெருமிதத்துடன் வானளாவ வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் தந்து கற்பக மரமாக காட்சியளிக்கின்றன..

பனை – உடை – ஆடு
தொன்றுதொட்டு வறண்ட மணற் பகுதிகளில் மனிதனை வாழ வைத்தது – பனை – உடை – ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை இணைப்பே (Integrated Biological Chain) ஆகும்.

பனை குடிசை அமைக்க உதவியது. குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க, பனை பதநீரைச் சுரந்தது. உடை இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது; மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது; பனை, உடை ஆகிய மரங்களின் கீழ்ப் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தீவனமாகியது. ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன. பணத்தேவையை ஆடும், கருப்பட்டியும் பூர்த்தி செய்தன.

இந்த அருமையான சுற்றுப்புறச் சூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக் கருவேல் ஆகியவை சிதைத்து விட்டன..

வேலிக் கருவேலின் நிழலில் பனை வளருவதில்லை. ஆனால் நம் நாட்டின் பூர்வீக உடையான வெள்வேல் உடையின் நிழலில் பனை செழித்து வளரும்..

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்..

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.

ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான்.

பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை..

பதனீரும், கள்ளும் சர்க்கரைப் பொருள் நிரம்பிய பதனீர் துரிதமாகப் புளித்து கள்ளாக மாறும் இயல்புடையது. பதனீர் சுரந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள்ளேயே பதனீரில் ஆல்கஹால் தோன்றிவிடும். பின்னர்ப் படிப்படியாக ஆல்கஹாலின் அளவு 5% அதிகரித்து விடும். இதுவே போதை தரும் கள்.

இவ்விதம் கள்ளாக மாறுவது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஈஸ்ட் பூசணங்களால் ஏற்படுகிறது. பதனீர் உடனுக்குடன் கள்ளாக மாறாமல் இருக்கவே, பதனீர் இருக்கும் பானையினுள் அடிக்கடி சுண்ணாம்பைத் தடவுகின்றனர்.

பதனீரிலே எல்லாம் இருக்கிறது ஆண், பெண் ஆகிய இருபால் மரங்களிலும் பதனீர் சேகரிக்கலாம்.

தினசரி ஒரு மரம் 10-12 லிட்டர் பதனீர் சுரக்கும். நல்ல சூழ்நிலையில் 18 லிட்டர் வரை பதனீர் பெறலாம்.

250 மில்லி லிட்டர் பதனீரில்,
அமிலகார நிலை 7.2
மொத்த சர்க்கரைப் பொருள் 26.8 கிராம்
இரும்பு 5.5 மில்லி கிராம்
கால்சியம் 35.5 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராம்
தையமின் 82.3 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 44.4 மில்லி கிராம்
வைட்டமின் சி 12.2 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம் 674.4 மில்லி கிராம்
புரதம் 47.7 மில்லி கிராம்
சக்தி 113.3 கலோரி
இவ்வாறு அனைத்து ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய பதனீர் ஒரு அருமையான பானமாகும்.

மெலிந்தோருக்குச் சிறந்த உரமாக்கி (Tonic) ஆகும். இலேசாகப் புளித்த கள் உடலுக்கு நன்மை பயப்பதாகும்.

இதில் நிறைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உற்பத்தியாகி இருக்கும். எனவே அருந்துவோரிடம் வைட்டமின் பி பற்றாக் குறை தோன்றுவதில்லை. கோடைக் காலத்தில் தினந்தோறும் ¼ லிட்டர் முதல் ½ லிட்டர் வரை பதனீர் பருகி வர, உடலுக்கு மிகவும் நலம் பயப்பதுடன் கோடைக்கால நோய்கள் வராமலும் தடுக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.