23/12/2017

ஆடி மாத மகத்துவங்கள்...


நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த சாஸ்திரசம் பிரதாயங்களில் நிச்சயம் அறிவியல் காரணங்கள் நிறைந்திருக்கும்..

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கும் ஒரு முக்கியத்துவம் வைத்திருந்தார்கள்..

அந்த வகையில்,  ஆடி மாதத்துக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன..

இம்மாதத்தில் தான் தட்சியாயண புண்ணிய காலம் துவங்குகிறது..

இம்மாதத்தில் தான் அம்பிகை தவமிருந்து சிவபெருமானோடு இணைந்தாள் என புராணங்கள் கூறுகின்றன..

இந்த மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு (ஆடி 18) உள்பட பல்வேறு விசேஷங்கள் வருகின்றன..

ஆடி என்றதும் நம் நினைவில் வந்து நிற்பது, அம்மன் கோயில்களும், வேப்பிலையும், கேழ்வரகு கூழும் தான்..

இந்த மாதத்தில் செவ்வாய் அன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால்..  திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும், கன்னி பெண்களுக்கு திருமண யோகமும் கைகூடும் என்பார்கள்..

ஆடி வெள்ளியன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு சகல தோஷங்களும் விலகி, கன்னி பெண்களுக்கு திருமணம் தடையின்றி நடைபெறும்.. திருமணமான பெண்களுக்கு புத்திரப்பேறு உண்டாகும்.

கூழ் வார்த்தல்...

ஆடியில் அம்மன் கோயில்களில் மஞ்சள், குங்குமத்துடன் கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர்.

இந்நாட்களில் ஒரு சில குடும்பங்களில் சகோதரர்கள், தங்கள் உடன்பிறந்த சகோதரிகளை விருந்துக்கு அழைத்து உபசரிப்பதுடன், அவர்களை அம்மனாக கருதி மஞ்சள், குங்குமம், வளையல்களுடன் புடவைகளையும் அளித்து மகிழ்கின்றனர்.

ஞாயிற்று கிழமைகளில் தங்களது வீடுகளை சுத்தம் செய்து, தங்கள் குலதெய்வம் மற்றும் அம்மனை நினைத்து பிரார்த்தித்து, வழிபாடு செய்கின்றனர்.

பின்னர், தங்கள் நேர்த்திக் கடன்கள் நிறைவேறும் பொருட்டு, அப்பகுதி மக்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்குகின்றனர்.

ஆடிகிருத்திகை..

வாரம், திதி, நட்சத்திரம் என மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உள்ளன.

முருகனுக்கு செவ்வாய்கிழமை உகந்தநாள்.

திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதம்.

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு விசேஷம். அன்று முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வகை அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

ஏராளமான பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.

அடுத்து வரும் ஆடி அமாவாசை தினத்தில், நம் முன்னோர்கள் மற்றும் பித்ருக்களை நினைத்து, தந்தை இல்லாதவர்கள் புனித நீர் நிலைகளில் நீராடி, திதி தர்ப்பணம் அல்லது பித்ரு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பு.

அவ்வாறு செய்ய இயலாதவர்கள், ஏழை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை தமது வசதிக்கேற்ப வழங்கலாம்.

இதன் மூலம் அவர்களது வருங்கால சந்ததிகள் எவ்வித குறைபாடும் இல்லாமல், வளமான வாழ்வோடு சிறந்து விளங்கும் என்று சொல்வார்கள்.

ஆடிப்பெருக்கு..

ஆடி 18-ம்தேதி ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.

இந்நாளில் வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு, குளம், நதி போன்ற முக்கிய நீர்நிலைகளில் நீராடுவர்.

புதுமணப் பெண்கள் அணிந்திருக்கும் தாலியைமாற்றி, புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை மூத்த பெண்கள் அணிவிப்பர்.

கன்னி பெண்களுக்கும் புதிய மஞ்சள் கயிறு அணிவிப்பர்.

மேலும், எலுமிச்சை, தேங்காய் மற்றும் பலவகை சாதங்களை உண்டு, ஆடி பாடி மகிழ்வார்கள்.

தம்பதியருக்குள் அற்ப விஷயங்களுக்காக பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை களைந்து, மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பதற்கான காரணமாக புராணங்கள் கூறுகின்றன.

புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற தனது பெண்ணை, இம்மாதத்தில் தான் ஒரு தாய் சீர் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வருவாள்.

இம்மாதத்தில் தனது தாய் வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் கற்று கொள்வார்கள்.

கட்டுப்பாடாக குடும்பம் நடத்துவது எப்படி, எல்லோரையும் அனுசரித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் தாய் சொல்லி கொடுப்பார்.

அதன்படி, அந்த பெண், புகுந்த வீட்டில் செயல்பட்டு பிறந்த வீட்டுக்கு பெருமை தேடித் தருவார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க ஆடி மாதத்தை நாம் தள்ளுபடி திருவிழா காலமாக கருதாமல், ஆடிமாத அருமை, பெருமைகளைப் புரிந்து கொண்டு, அம்மனின் மகத்துவங்களை மனமுவந்து அறிந்து கொள்வோம்.

பெரியோர்கள் வழிகாட்டிய விரத மற்றும் வழிபாடுகளையும் மேற்கொண்டு, நம் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவோம்.

அடுத்த தலைமுறையினரையும் வழி நடத்துவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.