20/12/2017

குட்கா ஊழல் சம்பந்தப்பட்ட அமைச்சரை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை முயல்வதால் விசாரணையை தாமதப்படுத்த முயல்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்...


இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை...

தமிழ்நாட்டை அதிரவைத்த குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதற்காகவும், இந்த வழக்கின் புலன் விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்குடனும் வருமானவரித் துறையிடமிருந்து சில மின்னணு கருவிகளைக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரூ. 39 கோடி பணம் கொடுத்திருக்கிறது. இதுகுறித்த ஆதாரங்கள் வருமான வரித்துறை ஆய்வுகளின் போது கைப்பற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணைப்படி, வருமானவரித் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது குட்கா ஊழலின் சூத்திரதாரியாக கருதப்படும் அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்பதால் அதைத் தவிர்க்கவே இந்த மனுவைக் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

குட்கா நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கணினிகள், மடிகணினிகள் சேமிப்புக் கருவிகள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றை பதிவிறக்கம் செய்த வருமான வரித்துறையினர் அவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புப் பிரிவின் விசாரணைக்கு இதுவே போதுமானது. ஆனால், குட்கா நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட கணினி உள்ளிட்ட கருவிகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு பிரிவு வலியுறுத்துகிறது. இதற்காகத் தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

லஞ்ச ஒழிப்புப் பிரிவின் இந்த கோரிக்கை தேவையற்றது. குட்கா ஊழல் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி, இந்த வழக்கில் அமைச்சரையும், காவல் உயரதிகாரிகளையும் சேர்க்காமல் காப்பாற்றவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.

வருமானவரித்துறையால் வழங்கப்பட்டுள்ள சான்றளிக்கப்பட்ட நகல்கள் உண்மையான ஆவணத்திற்கு சமமானவை. அவற்றில் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் கையூட்டு அளிக்கப்பட்டதற்கான குறிப்புகள் இருப்பதால் அவற்றையே ஆதாரமாக தாக்கல் செய்யலாம்; அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளும்.

அதனால் கணினி போன்ற தகவல் சேமிப்புக் கருவிகள் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு தேவையில்லை. ஒருவேளை அவற்றில் உள்ள ஆதாரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருக்கின்றனவா? என்பதைக் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் அறிய விரும்பினால் எந்த நேரமும் வருமானவரித்துறை அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு செய்யலாம். அவ்வாறு ஆய்வு செய்ய குட்கா ஊழலின் விசாரணை அமைப்புக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன.

இதற்கெல்லாம் மேலாக சில விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். குட்கா நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட கணினி உள்ளிட்ட தகவல் சேமிப்புக் கருவிகள் குட்கா ஊழலுக்கான ஆதாரங்கள் மட்டுமல்ல; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதான வரி ஏய்ப்பு வழக்கிலும் அவை தான் முக்கியமான ஆதாரங்கள் ஆகும்.

அத்துடன், சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை நடத்தும்படியும், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கணினிகளை தாக்கல் செய்வதாகவும் வருமானவரித் துறை உறுதியளித்துள்ளது. இதற்குமேல் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு என்ன வேண்டும்? என்பது புரியவில்லை.

லஞ்ச ஒழிப்புப் பிரிவினரின் நோக்கம் எல்லாம் இவ்வழக்கிலிருந்து அமைச்சரை தப்ப வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத் தான் இத்தகையை நாடகங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. குட்கா ஊழல் வழக்கில் உண்மைகள் ஏற்கனவே வெளிக்கொண்டு வரப்பட்டு விட்ட நிலையில், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆட்சியாளர்களுக்கு இருந்தால், இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு தாராளமாக நிரூபிக்க முடியும்.

எனவே, அமைச்சரைக் காக்க வேண்டும் என்று துடிக்காமல், நீதியைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன் குட்கா நிறுவன கையூட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தர லஞ்ச ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.