10/02/2018

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நள்ளிரவு வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது...


கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கூடிய ஆட்சி மன்ற குழுவினர் பேராசிரியர் தர்மராஜை பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும் பல்கலைகழகத்தின் செயல்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட நிர்வாக குழுவினை ஏற்படுத்தினர். இன்று கூடிய இந்த நிர்வாக குழு தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணனை பணியில் இருந்து விடுவித்ததுடன், அந்த பணிக்கு பல்கலைகழக புள்ளியல் துறை பேராசிரியர் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே லஞ்ச ஓழிப்புதுறை டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி, டி.எஸ்.பி ராஜேஷ் ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு துணைவேந்தர் கணபதியின் நேர்முக உதவியாளர் சுல்தான் பேகம், பதிவாளர் வனிதாவின் நேர்முக உதவியாளர்கள் ராஜன், சங்கர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மாலை 4 மணிக்கு துவங்கிய விசாரணை நள்ளிரவு தாண்டி இரவு ஒரு மணி வரையில் நீண்டது. 2016-ம் ஆண்டு போடப்பட்ட பணிநியமனங்கள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. பணிநியமனங்கள் தொடர்பான தகவல்களையும் , ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சேகரித்தனர்.

துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சுல்தானா பேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்களிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். 5 துணைவேந்தர்களின் காலங்களில் பணிபுரிந்தவர் என்பதால், சுல்தானா பேகத்திடம் விசாரணை மேற்கொண்டால் பல முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை பெற முடியும் என்பதால் அவரிடமும், பதிவாளர் வனிதாவின் உதவியாளர்களிடம் விசாரணையானது நடத்தப்பட்டது.

நேற்றைய தினம் பல்கலையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில ஆவணங்களை பெற்று சென்ற நிலையில், இன்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கலைகழக அலுவலக ஊழியர்கள் பணி முடிந்து வெளியேறிய நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை கார் மூலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அள்ளிச்சென்றனர். இன்று (09.02.2018) துணை வேந்தரை விசாரணைக்காக போலீஸ் காவல் கோரும் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கட்டுக்கட்டாக ஆவணங்களை போலீசார் அள்ளிசென்றுள்ள சம்பவத்தால் துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.