28/02/2018

மகிழ்வுடன் வாழுங்கள்...


மகிழ்ச்சியாக இருப்பதற்கு முன்நிபந்தனை எதும் தேவையில்லை மற்றும் இந்த நொடியை தவிர மகிழ்ச்சியாக இருக்க நேரம் எதுவுமில்லை.

உலகில் உள்ள அனைவருமே மகிழ்வுடன் வாழத்தான் விரும்புகின்றனர்.

மகிழ்ச்சியின் காரணிகள் மற்றும் அளவீடுகள்...

1. மகிழ்ச்சி ஒரு மனநிலை...

அடிப்படையில், மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனநிலை சார்ந்ததே என்பதை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அது நமக்கு வெளியே இல்லை, . மகிழ்ச்சி நமக்குள் தான் இருக்கிறது. எனவே, மகிழ்வான மனநிலையை உருவாக்கிக்கொள்வது அவசியம் என்கின்றனர் உளவியலாளர்.

2. மகிழ்ச்சி ஒரு தேர்வு...

மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கின்றது என்றாலும், அதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது மகிழ்ச்சியின்றி இருப்பதைத் தேர்ந்தெடுக்கலாம். விக்டர் பிராங்கிள் என்னும் உளவியலாளர் சிறையிலும்கூட ஒருவர் மகிழ்ச்சியுடன் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தனது வாழ்வு அனுபவத்தின் மூலம் எண்பித்துள்ளார்.

3. உறவே மகிழ்ச்சி...

மகிழ்ச்சி பற்றிய ஆய்வுகள் தரும் முக்கியமான ஓர் உண்மை, நல்ல உறவுகளே மகிழ்ச்சியின் முதன்மையான காரணி. எனவே, யாருக்கு நல்ல குடும்ப உறவுகளும், நண்பர்களும் அமைந்திருக்கின்றார்களோ, அவர்கள் நிச்சயம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். மாறாக, நல்ல உறவுகள் அமையாவிட்டால், எவ்வளவு வசதிகள், வாய்ப்புகள் இருப்பினும் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். எனவே, குடும்பத்திற்குள் கணவன் - மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் உறவை ஆழப்படுத்துவோம்.

4. பணி நிறைவு...

நமது வேலையில் நமக்குக் கிடைக்கும் மன நிறைவை மகிழ்ச்சியின் இன்னொரு காரணியாக இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது பணியில் நமக்கென்று சில இலக்குகளை உருவாக்கி, அவற்றை அடைந்துவிட்டோமென்றால், அது மிகப்பெரிய மகிழ்வை நமக்குத் தரும். எனவே, பணி இலக்குகளை உருவாக்குவோம், அவற்றை அடைய உழைப்போம். (பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்களும்கூட, குடும்பத்தில் தாத்தா, பாட்டி என்னும் பணியில் மன நிறைவும், மகிழ்ச்சியும் பெறலாம்).

5. ஆன்மீக நிறைவு...

மகிழ்வின் இன்னொரு காரணி சமயச் செயல்பாடுகளில் கிடைக்கும் நிம்மதி. ஆன்மீக வாழ்வில் ஈடுபாடு கொண்டு, நிறைவு கொள்பவர்கள் நிறைவான மகிழ்ச்சி அடைவர். தியானங்களில், வழிபாடுகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வருகிறவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். குருக்கள், துறவிகள் இந்த ஆய்வு முடிவை மனதில் கொண்டு மக்களை ஆன்மீக நிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்ல வேண்டும். குடும்பங்களில் அன்றாட குடும்ப செபம், இறைமொழி வாசிப்பு, ஆண்டுத் தியானம் போன்றவை தவறாது இடம் பெற்றால், அக்குடும்பங்களுக்கு "உலகம் தரமுடியாத" மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

6. சொந்த வளர்ச்சி...

புதிதாக ஒன்றை நாம் கற்றுக்கொள்ளும்போதோ, அல்லது திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போதோ, அதுவும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே, எப்போதும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவர்களாக இருத்தல் நலம். நல்ல நூல்களை வாசிப்பதும், நலமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும் மகிழ்ச்சியின் காரணிகளே. பயணம் செய்வது, இயற்கையை ரசிப்பது போன்றவையும் மனிதருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இயன்றபோதெல்லாம் நாம் இவற்றைச் செய்யலாமே.

7. நலவாழ்வு...

உடல் நலத்தோடு வாழ்வது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி என்பதை நாம் நோய்வாய்ப்படும்போதுதான் உணர்கிறோம். "நல்ல உடல் நலமும், மோசமான நினைவாற்றலும்தான்; மகிழ்ச்சி" என்று ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்னும் அறிஞர் மொழிந்துள்ளார். எனவே, உடல், உள்ள நலனில் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்.

8. தேவையான மறதி...

ஆல்பர்ட் ஸ்வைட்சரின் இரண்டாவது கருத்து நம் கவனத்துக்குரியது. சில சமங்களில் கடந்த காலத்தின் தவறுகள், தோல்விகள் எப்போதும் நம் கண்முன்னே நின்று நாம் நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன. எனவே, கடந்த காலத்தை மறந்துவிடுவது நிகழ்கால மகிழ்ச்சிக்குக் கட்டாயத் தேவை.

9. சமூக அக்கறை...

"பிறரைப் பற்றிச் சிந்திப்பதும், அவர்கள்மீது பரிவுகொள்வதுமே மகிழ்ச்சியைத் தரும்" என்றார் nஉறலன் கெல்லர். பிறர்மீது பரிவு கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபடுகிறவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எப்போதும் நம்மைப் பற்றியும், நமது தேவைகள், மகிழ்ச்சியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிராமல், பிறரது தேவைகளைப் பற்றியும் கொஞ்சம் அக்கறை செலுத்தினால், மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடிவரும்.

10. படைப்பாற்றல்...

புதிதாகப் படைக்கும் திறன் கொண்டவர்கள் - ஓவியர்கள், பாவலர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் போன்ற படைப்பாற்றல் படைத்தவர்கள் - மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க கற்றுக்கொண்டு விட்டால், துன்பங்களின் நிழல் கூட நம்மை அணுக முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.