23/02/2018

தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்க.. தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்த அழைப்பு...


மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டு ஊர்வலத்தினர் மீது தடியடி தாக்குதல் நடத்திய தூத்துக்குடி காவல்துறை துணைகண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் நிறைவு நாளான செவ்வாயன்று (20.02.2018) செந்தொண்டர் பேரணி நடைபெற்றது.

மிக அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் தூத்துக்குடி ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையிலான காவல்துறை, எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் கொடும் தாக்குதலை நடத்தியுள்ளது. திட்டமிட்ட முறையில் லத்திகளுக்கு பதிலாக சென்ட்ரிங் வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் பலகைகளை ஆயுதமாக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தையும் அவர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. 3 பேரின் மண்டை உடைந்துள்ளது. இதுதவிர 2 பேரின் உடலில் சென்ட்ரிங் பலகையால் அடித்ததால் கட்டைகளின் செதில்கள் உடலின் பல பாகங்களில் புகுந்துள்ளதை நீக்க வேண்டியுள்ளது. மிக திட்டமிட்ட முறையில் முதுகுத்தண்டை குறிவைத்து தாக்கியிருக்கிறார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கொலை, கொள்ளை, வழிப்பறி, பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே செயின் பறிப்பு போன்ற சம்பவங்களைத் தடுத்து நடவடிக்கை எடுக்க திராணியற்ற காவல்துறை, அமைதியான முறையில் பேரணியாக சென்ற செந்தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது; இதே போல்தான், சிவகங்கை மாவட்டத்தில் சிறுகடை வியாபாரிகளை காவல்துறையினர் தாக்கியபோது அதை தட்டிக்கேட்ட எங்களது கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் எம்.கந்தசாமி மீது வெறிகொண்டு தாக்கியது காவல்துறை. காவல்துறையின் இத்தகைய தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதாகும்.

காவல்துறை அதிகாரிகள் வன்முறையின் மூலமும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகளின் மூலமும் ஜனநாயக இயக்கங்களை ஒடுக்க முயற்சிப்பது சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது.

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையின்போது ஜவுளிக்கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகள் மீது ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகளின் உறுதிமொழி அடிப்படையில் கடையடைப்பு கைவிடப்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடியில் பொதுவான கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் நடத்தும் போது மனித்தன்மையற்று நடந்து கொள்வதை காவல்துறை வழக்கமாக கொண்டுள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற சம்பவத்தில் ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் திட்டமிட்ட முறையில் சென்ட்ரிங் பலகையை எடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தொண்டர்கள் மீது கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். எனவே, ஏஎஸ்பி செல்வநாகரத்தினத்தை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினரையும் இடைநீக்கம் செய்து, உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துறைவாரியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

காவல்துறையின் இந்த கண்மூடித்தனமாக தாக்குதலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அணிகளையும், ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தாக்குதலுக்குள்ளான செந்தொண்டர்கள் மீதே வழக்குப் பதிவு...

தூத்துக்குடியில் செவ்வாயன்று மாலை மார்க்சிஸ்ட் கட்சியின் செம்படை பேரணியில் புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதோடு காயமடைந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். செந்தொண்டர் அணிவகுப்பு பொதுக்கூட்ட திடலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அண்ணாநகர் அருகே காவல்துறையினர் செந்தொண்டர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், காயம் அடைந்த 4பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாங்கள் காயம் அடைந்ததாக கூறி காவலர்கள் அளித்த புகாரின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருப்பூர் விமல் (25), திண்டுக்கல் விஷ்ணு வரதன் உள்ளிட்ட சிலர் மீது 7 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.