13/04/2018

சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோம்...


இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும்.  புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?  அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா?  என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானதுதான்.

காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  ஆயினும் புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. 

காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப் பட்டுள்ளது. 

எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள். 

யார் அந்த முன்று நபர்கள்?  கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.  இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள் என்கிறது.

யார் இந்தக் கிங்கரர்கள்?  இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன?  கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.  அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச் செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.

மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது.  உயிர்கள் புரிந்த நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.

உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக் கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.  செடியிலிருந்து மலரைக் கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.  தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.

உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக் கொண்டு விட்டு விடுவார்கள்.  இப்படி யமலோகம் சென்ற ஜீவன்  மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.

காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால் மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.  செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள்.  அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள் பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள்.  அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.  தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள். அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல் மீது விழுந்து அழுத்துவார்கள்.  இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும்.  இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள்.

உடல் மயானத்தைச் சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல் வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து பதைபதைத்து துடிக்குமாம்.  மிகப் பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக் குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும்  ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.  உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.  காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும்.  இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத்தான் கூறுகிறார்கள்.  மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.