06/06/2018

தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் கட்டப்பட்ட பாலம்.. கடும் எதிர்ப்புகளுக்கிடையே திறப்பு : எட்டு பேர் கைது...


தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியான சாந்தபிள்ளை கேட் பகுதியில் ரூ 52 கோடி மதிப்பீட்டில் 12மீட்டர் அகலத்திலும், 869மீட்டர் நீளத்திலும் புதியதாக பாலம் கட்டப்பட்டது.
   
இப்பாலம் கட்டும்போது விரிசல் ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தியதையடுத்து பாலம் திறக்கப்படாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாலம் சரிசெய்யப்பட்டு தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பாலத்தை  திறந்து வைத்தார். இதனையடுத்து தஞ்சாவூரில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பாலத்திற்கு தோரணங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பாலம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த 8பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதிமுக கட்சியினர் வெடிவெடித்து இனிப்பு வழங்கி பாலத்தில் போக்குவரத்தை தொடங்கினர்.

இந்த பாலத்தில் போக்குவரத்தை தொடங்கினால் அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விபத்துக்கு உள்ளாவர் மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாவர் எனவே பாலத்தை மீண்டும் சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
     
இது குறித்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரெங்கசாமி கூறும்போது பாலம் திருத்தியமைக்கப்படாமல் அவசரமாக இந்த பாலம் திறக்கப்படுகிறது, இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர் என்று தெரிவித்தார், ரெங்கசாமி எம்எல்ஏவாக இருக்கும்போதுதான் இந்த பாலத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுரேஸ், காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் காந்தி, அறிவுடைநம்பி, சரவணன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.