31/07/2018

சிலுவை யுத்தங்கள் − 9...


நாம் சென்றப் பதிவுகளிலிருந்து விளைவுகளைத் தான் பார்த்து வருகிறோம் அதன் தொடர்ச்சி.....

(ஹி.490)கி.பி.1096ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் ஏர்பன் பிரான்ஸிலுள்ள முவர்ஸ் எனுமிடத்தில் மற்றொரு மாநாட்டைக் கூட்டினார்.

இம்மாநாட்டின் போது பாப்பரசரின் அழைப்புக்கு அமோக வரவேற்புக் கிடைத்தது.இந்த வகையில் சிலுவை யுத்தத்தை முதன் முதல் பிரகடனம் செய்த பூமி பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பல நாடுகள், பிரதேசங்கள் என பயணங்களை மேற்கொண்டு பல உணர்ச்சிப் பூர்வமான சொற்பொழிவுகளை மேற்கொண்டார்.

இவரது தீவிரப் பிரசார முயற்சிகளின் விளைவாக கிறிஸ்தவர்கள் தமது உள்வீட்டுப் பிரச்சினைகளை மறந்து, முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் செய்யத் திரண்டெழுந்தனர்.

பாப்பரசர் இரண்டாம் ஏர்பனின் தீவிரப் பிரச்சாரம் பெரிய ஒரு இனக் கொந்தளிப்பைக் கிளப்பி விட்டிருந்தது.

அவரது பேச்சினால் கவரப்பட்ட தனிநபர்களும் சிலுவைப்போருக்கு ஆட்களை சேர்க்கும் பிரசார முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இப்பிரச்சாரம் கிறித்தவர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது.

இம்முயற்சியில் புதியதொரு அழைப்பாளர் குழு தீவிரமாகக் களத்தில் இறங்கியது.இவர்களின் தலைவனாக "பீற்றர் சன்னியாசி" என்பவன் செயல்பட்டான்.

இவன் தனது முயற்சியில் வெற்றி பெறும் பொருட்டு வித்தியாசமான ஒரு உருவமைப்பில் மக்கள் முன் தோன்றினான்.கிழிந்த ஆடை அணிந்து, பாதணியற்ற பாதத்தோடு நொண்டி கழுதையில் பிரயாணம் செய்து மக்கள் முன் தோன்றிய இவனின் பிரசாரம் மேற்கு ஐரோப்பியர்களின் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவனது உரையைக் கேட்டதும் அவர்களின் உணர்வுகளில் வீரம் அலை போல எழுந்தது.

வீர உணர்வலைகளால் உந்தப்பட்ட இம்மக்கள் அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் திட்டமிடப்பட்ட ஒழுங்குகளை மேற்கொள்வதற்குப் பாப்பரசருக்கோ அல்லது அவரது சீடர்களுக்கோ சிறியதொரு சந்தர்ப்பத்தையும் வழங்காது போருக்குத் தயாராகி விட்டனர்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.