04/07/2018

இயற்கை உலகம் சொர்க்கமே...


அகன்று விரிந்த 'பூமி'அண்ணாந்து பார்க்கத் தெவிட்டாத 'ஆகாயம்'தினம் நாம் ஏற்றும் தீபத்தின் ஒளியாய் 'தீ'மழைத் துளியாய் மண்ணில் விழுந்து கடலாய் விரிந்த 'நீர்'ஒவ்வொரு மூச்சுக் காற்றிற்கும் அஸ்திவார ஆக்சிஜனாய் 'காற்று'என ஐம்பூதங்களின் ஒருங்கிணைப்பு தான் இயற்கை. அந்த இயற்கையோடு இயைகின்ற போது சிறு விதையும் ஆலமரமாய் விருட்சம் பெறும். சிறு துளி மழையும் முத்தாய் மிளிரும், சிப்பிக்குள் ஜொலிக்கும். கருகிய கார்பனும் வைரமாய் ஜொலிக்கும். படித்துப் போட்ட பேப்பர் கூட பட்டமாய் உயரப் பறக்கும். மூங்கிலுக்குள் நுழைந்து காற்று ஸ்வரங்களாகும்.
இதே போல் ேஹாம் தியேட்டரில்' கிடைக்காத இசைத்துளியின் பேரின்பத்தை கருங்குயிலின் ஓசையில் கேட்கலாம். எத்தனை டன் 'ஏசி'யிலும் கிடைக்காத குளிர்ச்சியை உதகமண்டலத்தின் மரக்கிளைகளில் காணலாம். எவர் பேச்சிலும் வரவழைக்க முடியாத புன்னகையை தோட்டத்துப் பூக்கள் உருவாக்கும். ஒன்பது கோள்களில் ஒரு கோள் நம்மீது ஆதிக்கம். பன்னிருநட்சத்திரத்தில் ஒன்று நம் ஆயுள் வரைக்கும், என்று வெகு துாரத்து சொந்தங்களாகிப் போன இயற்கை தான் நம் வாழ்வின் ஆதாரமாகிப் போனது. இதைத் தான்'விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கேபசும்புல் தலைகாண்ப தரிது' என்றார் திருவள்ளுவர்.

மழைத்துளி மண்ணில் விழாமல் போனால் சிறு புல்கூட தலைகாட்டாது. பின்பு எப்படி மனித இனம் தழைக்கும் என்ற வள்ளுவரின் வாக்கு இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையேயான இணைப்பை அழகாக எடுத்தியம்புகிறது.

இயற்கை தெய்வம் : பண்டைய காலம் தொட்டு நம் இந்திய மண்ணில் நுாற்றுக்கும் அதிகமான மரங்கள், ஆயிரத்திற்கும் அதிகமான தெய்வ உருவங்கள், லட்சக்கணக்கான கோயில்கள், பல்வேறு புராணக் கதைகள் என பிரசித்தி பெற்றிருக்கும் இன்றைய இறைவழிபாடு அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆதிகால மனிதன் இறைவனாக நினைத்து வழிபட்டது இயற்கையைத் தான். ஒளி தரும் சூரியன், மழை தரும் வானம், வாழ்க்கைக்குத் துணை நிற்கும் மிருகங்கள், பறவைகள் என அனைத்துமே தெய்வங்கள் தான். பாடம் கற்பிக்கும் மரங்கள் இயற்கை ஒரு சிறந்த ஆசானும் கூட. இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பாடத்தை மனிதனுக்கு சொல்லிக் கொடுக்கிறது. மனிதமும், மரமும் வளர நீர் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. பங்குனி, சித்திரை மாதங்களில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்பதை அறிந்த மரங்கள் தன்னுடைய நீரின் தேவையை குறைக்க இலைகளை உதிர்க்கின்றன.
வீட்டில் உணவு குறைவாக இருக்கும் போது எனக்கு பசியில்லை என்று சொல்லும் தாயைப் போல,'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇருக்கண் களைவதாம் நட்பு'என்று வள்ளுவர் கண்ட நட்பினை போல, மண்மும் மரமும் நண்பர்கள். ஆனால் மனிதராகிய நாம் மழைக்காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்காமல், தண்ணீரைக் கடலில் கலக்க விட்டு பின், தண்ணீர் தேவை அதிகம் எனக் கூறி மீண்டும் மீண்டும் ஆழம் கூட்டி நீர் தேடுவோம்.
ஓர் இடத்தில் ஆயிரம் பேர் தான் வாழமுடியும். அவர்களுக்கு மட்டுமே நிலத்தடிநீர் போதுமானதாக இருக்கும் என்று தெரிந்தும் லட்சக்கணக்கில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டி தண்ணீர் எங்களுக்கு போதவில்லை என்று கூறும் மனிதர்களைப் போல் அல்லாமல், உன்னிடம் அதிகம் நீர் இல்லை என்கிற போது நான் என்னுடைய தேவைகளை குறைத்துக் கொள்கிறேன் என்று கூறும் சிறந்த நண்பன் தான் மரம்.

மண்ணின் எதிரிகள் : இயற்கை வளங்களை சுரண்டி எடுத்து தனி மனித வளத்தை கூட்டுவது தான் நம் அடுத்த சந்ததியினருக்கு, நாம் செய்யும் மாபெரும் பாவம்.நம் இரண்டு கைகளைக் கொண்டு நம்மால் இயன்ற அளவு இயற்கையைக் காக்கும் கணம் இது. பூச்சிக்கொல்லிகள் பூமியை அழிக்கின்றன. மீத்தேன் வாயு திட்டம் மண்ணின் வளத்தை விழுங்கிவிடும். சாயக்கழிவுகள் எங்கள் சந்ததியினரை அழித்து விடும். மணல் கொள்ளை மனித இனத்தை அழிக்கும், மழையைத் தடுக்கும், என்று மற்றவர் குற்றங்களுக்கு போர்க்கொடி துாக்கும் நமக்கு ஏன் நாம் செய்யும் குற்றங்கள் தெரிவதில்லை.
மண்ணின் முதல் எதிரியாம் 'பாலிதீன்' பைகளை ஏன் கையில் எடுக்கிறோம். இரும்பைக் கூட செரிக்கின்ற பூமித்தாயால் பாலிதீன் பைகளை செரிக்க முடிவதில்லை.

ஆலயங்களையும், அதிசயங்களையும் கட்டி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர், நம் முன்னோர்கள். ஆனாலும் நாமோ அவர்கள் சேர்த்த பெருமையைக்கு பெருமளவு பாலிதீன் பைகளைத் தான் குப்பைகளாகத் தருகிறோம்.
பணத்தை சீதனமாக பெண்ணுடன் ஒரு குடும்பத்திற்கு கொடுப்பதை விட, நல்ல குணத்தை உடைய பெண்ணை ஒரு வீட்டிற்கு கொடுத்தால் குடும்பம் செழிக்கும். பணத்தை அடுத்த தலைமுறையினருக்கு சேர்த்து வைப்பதை விட நல்ல வனத்தை சேர்த்து வைப்போம். வனங்கள் உள்ளவரை தான் இயற்கை வளங்கள் இருக்கும்.
நரகமாகும் வாழிடம் ;சுற்றத்தை அழிப்பவன் நரகத்திற்கு செல்வான். சுற்றுப்புறத்தை அழிப்பவன் வாழும் போதே வாழிடம் நரகமாய் மாறும். நம் முன்னோர்கள் மரம் வளர்த்தனர். வாழிடம் வளமானது. துாய்மையான காற்று ஊரெங்கும் பரவியிருந்தது.
நாமோ மரம் அழித்து, வனம் அழித்து வாழிடம் கண்டோம். இன்று துாய்மையான காற்று சுற்றத்திலும் இல்லை. வீட்டு முற்றத்திலும் இல்லை. நாகரிகம் நதியோரம் தான் பிறந்தது. இயற்கை அநாகரிகள் நதிக்குள் வீடு கட்டிய போது வந்தது. நதிகள் எல்லாம் கழிவு நீர் ஓடைகள் ஆனதால், நன்னீர் பாட்டிலுக்குள் அடைபட்டுவிட்டது. உயிர்காக்கும் நீர் இன்று காசுக்கு விற்கப்படுகிறது. துாய காற்றுக்கும் கூட விலை உண்டு என்ற நிலை வரும்முன்பாக காப்போம்.ஒரு தொழிலாளி என்பதின் சுருக்கமே முதலாளி, என்று கூறினார் சேகுவேரா. நாம் ஒவ்வொருவரும் இயற்கையின் முதலாளி ஆக நினைப்பதை விடுத்து, இயற்கைக்கு முதல் தொழிலாளியாக மாறுவோம். இயற்கை வளம் கூட்டுவோம்.

கருவறைக் காப்போம் :இனி நாம் இரு கைகளால் இயற்கையை பாதிக்கும் செயல்களை செய்ய மாட்டோம் என்று உறுதி எடுப்போம். புழு, பூச்சிகளுக்கு விஷம் தெளிக்கிறோம் என்று எண்ணி நாம் நஞ்சு கலப்பது பூமித்தாயின் கருவறையில் தான். உயிர்கள் ஜனிக்கும் இடம் தான் கருவறை என்றால், பயிற்களை விளைவிக்கும் ஒவ்வொரு விளைநிலமும் கருவறை தான். சுலபம் என்று எண்ணி, சுகத்தை பெரிது படுத்தினோம். நாகரிகம் என்று எண்ணி நஞ்சை விதைக்கிறோம்.நிலமகளிடம் சாயக்கழிவுகள் என்று சரணடைந்தனவோ அன்றே நிலைகுலைந்தது நிலத்தடி நீர். பூமித்தாயிடம் செல்லத் துடித்த மழை நீரை எல்லாம் தார்ச் சாலைகளும், தலை நிமிரச் செய்யும் கட்டடங்களும் மாற்றாந்தாயான கடலிடம் அல்லவா திருப்பி விட்டன. தாயை சேராத மழை நீரின் அழுகை தான் கடல் நீரை இன்னும் உப்பாக்கியது.

தாயின் உடலில் நஞ்சு ஏற்றிக் கொண்டு இருக்கிறோம். உணவு உட்கொள்ள வழியில்லாமல் வாயை அடைத்து விட்டோம்; குறைந்தது நிலத்தடி நீர் மட்டம்.இத்தனை செய்தும் நம்மை ஈன்றெடுத்த பூமித்தாய் நெஞ்சம் உருகி வேண்டினால்... 'இறைவா! எந்த மாசுபட்ட நீரையும், தித்திக்கும் இளநீராக மாற்றும் தென்னையைப் போல என்னைப் படைத்திருக்க கூடாதா? என் பிள்ளைகள் அருந்துவது நஞ்சு ஏற்றிய நீரை அல்லவா!' உலகம் சொர்க்கமாகும் பாலிதீன் பைகளுக்கு 'பை...பை' சொல்லி துணிப்பையைக் கையில் எடுங்கள். மண்ணின் மைந்தன் என்று நீங்கள் சொல்ல வேண்டாம். இம்மண் மார்தட்டிக் கொள்ளும், நீர் தான் மைந்தன் என்று!மரத்தைப் போல நாமும் இயற்கை வளங்களை காயப்படுத்தாமல், அளவோடு வளங்களை பயன்படுத்தி அவற்றை அதிகரிப்பதற்கான வழிமுறையைக் கையில் எடுத்தால், இறைவனாக இயற்கையைப் போற்றினால் வாழும் காலம் வரை உலகம் சொர்க்கம் தான். எனவே சுற்றுப்புறச் சூழல் காப்போம். சுபிட்சமான வாழ்வை நம் சந்ததியினருக்கு கொடுப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.