04/07/2018

உடல் சூடு குறைய பாட்டி வைத்தியம்...


நமது உடலானது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆகையால் அதற்குள் எப்போதும் சூடு இருந்துகொண்டே இருக்கும். இந்த சூட்டின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்படும். பொதுவாக பலருக்கு கோடை காலங்களில் உடல் சூடானது அதிகரிக்கும். இதற்க்கு காரணம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலேயே. உடல் உஷ்ணத்தை குறைத்து உடல் சூட்டை சரியான அளவில் வைத்துக்கொள்ள சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1..

ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதை சூடு செய்யவேண்டும். எண்ணெய் சிறிது சூடான உடன் அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகை போட்டு சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு எண்ணெயை ஆறவைத்து வலது மற்றும் இடது காலின் பெருவிரல் நகத்தின் மேல் மட்டும் இந்த எண்ணெயை தடவ வேண்டும். சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து எண்ணெயை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் உடல் சூடு குறையும். இதன் மூலம் மனஅழுத்தமும் குறையும். ஆகையால் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் இதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முயற்சிக்கலாம்.

குறிப்பு 2...

வெந்தயம் உடல் சூடு குறைய பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கினால் உடல் சூடு குறையும்.

குறிப்பு 3...

வெங்காயத்தை நன்கு அரைத்துக் கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் இவை இரண்டையும் உலர்த்தி நன்றாக அரைத்து பொடியாக்கி தினமும் காலையில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். அடிக்கடி உடல் சூடு உண்டானால் இதை முயற்சிக்கலாம்.

குறிப்பு 4...

சிலருக்கு அதிகப்படியான உடல் சூடால் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். இதனை குறைக்க இரவில் விளக்கெண்ணெயை பாதத்தில் தடவி சூடான நீரில் பாதம் முழுவதும் நனையும்படி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.

குறிப்பு 5...

பாலும் தேனும் உடல் சூட்டை குறைக்கும். தினமும் பாலில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். சுத்தமான தேனை கண்டறிந்து கலந்து குடிப்பது அவசியம்.

குறிப்பு 6...

பசலைக்கீரை, வெள்ளரிக்காய், காலிபிளவர், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். அதே போல நாட்டு வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.