05/08/2018

சிலுவை யுத்தங்கள் − 17...


இரண்டாவது சிலுவைப் போர்
(கி.பி − 1147 − 1149) −1...

முதல் சிலுவைப் போர்களை தகுந்த ஆதரங்களுடன் பார்த்து வந்த நாம் இப்பொழுது இரண்டாம் காலகட்டத்தில் பயணிக்கலாம்...

ஆட்சியாளர் நூருத்தீனின் தலைமையில் புத்துயிர் பெற்ற முஸ்லிம்களின் முன்னேற்றம் ஐரோப்பாவின் உணர்வலைகளைத் தட்டிவிட்டது. எடெஸ்ஸா நகரை முஸ்லிம்கள் வெற்றி கொண்டது ஐரோப்பாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திற்று.இதனால் சிஸ்த்தேசியன்(Cistercian) எனும் இயக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த
"மடபதி பேர்ணாட்" என்பவர் இஸ்லாத்திற்கெதிராகப் புதியதொரு சிலுவைப்போர் தொடங்கப்பட வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யலானார். அவ்வேளை புதிய பாப்பரசராகத் தேர்வு ஆரம்பிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்.

இதன் விளைவாக,ஹி.542
(கி.பி.1147)ல் அன்றைய பிரான்ஸ் மன்னன் ஏழாம் லூயியும்,ஜெர்மனிய அரசன் மூன்றாம் கொன்ராதும் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு சிரியா, பலஸ்தீன பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டனர். இந்தக் கூட்டுப்படையில் சுமார் ஒன்பது இலட்சம் சிலுவை வீரா்கள் இருந்தனர்.

ஆரம்பத்தில் தனித்தனியாகப் புறப்பட்ட இக்கூட்டுப்படைக்குப் பிரான்ஸிய மன்னன் ஏழாம் லூயியே தலைமை தாங்கினான்.

முதலில் புறப்பட்டு வந்த ஜெர்மனியப் படையினர் வரும் வழியிலேயே ஸல்ஜூக்கிய வீரா்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனா்.

பெரும் தொகையான ஜெர்மனியர் அதில் கொல்லப்பட்டனர்.அதேபோல் ஒரு மாதத்தின் பின் புறப்பட்டு வந்த பிரான்ஸுப் படையினர் கத்மஸ் மலைப் பகுதியில் துருக்கியரால் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலிலும் பல சிலுவை வீரா்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தாக்குதல்களுக்குப்பட்ட சிலுவைப் படையினர் ஒருவாறு ஜெரூஸலத்தை அடைந்ததும் டமஸ்கஸ் நகரைக் கைப்பற்றும் முடிவுக்கு வந்தனர்.ஹி.543(கி.பி.1148)இல் டமஸ்கஸை அடைந்த சிலுவை வீரர்கள் முற்றுகையில் இறங்கினர். சிலுவை வீரா்களின் இப்படையெடுப்பைப் பற்றி ஏற்கனவே அறிந்துகொண்ட டமஸ்கஸ் ஆட்சித் தலைவர் "முஜீருத்தீன் ஐபக்" நூருத்தீனிடமும் அவரது சகோதரர் ஸைபுத்தீனிடமும் உதவி கோரியிருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பெரும் படையொன்றை நடத்திச் சென்றனர்.இவர்களின் படை மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் நடவடிக்கைகளினால் சிலுவை வீரா்களின் முற்றுகை சுக்குநூறாய் உடைந்தது.

சிலுவை வீரர்களின் டமஸ்கஸை முற்றுகையிட்டிருந்த வேளை அதனைப் பங்கு போட்டுக் கொள்வதில் அவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் தளபதிக்கு ஏற்பட்ட நோயும் இத்தோல்விக்குக் காரணமாயின எனச் சொல்லப்படுகின்றது. இவ்வாறு இந்த இரண்டாவது படையெடுப்பு படுதோல்வியில் முடிவடைந்ததால் லூயியும், ஜெர்மனிய தளபதி கொன்ராதும் ஏமாற்றத்தோடு ஐரோப்பா திரும்பினர்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.