30/08/2018

ஏழு உயிர்களாக மாறிய ஒரு உயிர்...


கொடைக்கானல் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர், இருபத்து நான்கு வயது இளைஞரான மணிகண்டன், திருமணமாகாதவர். அருமையாக புகைப்படம் எடுப்பவர்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து தந்து அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்படித்தான் கடந்த 24ந்தேதி காலை கொடைக்கானல் செங்குத்தான மலைப்பகுதிகளில் ஒன்றான ‛டால்பின் நோஸ்' பகுதியில் சில சுற்றுலாப் பயணிகளை நிற்கவைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

பார்த்து பத்திரமா நில்லுங்க, நல்லா சிரிங்க என்று பேசிக்கொண்டும் கேமிராவில் ஆங்கிள் பார்த்துக் கொண்டும், நகர்ந்து நகர்ந்து உற்சாகமாய் படமெடுத்துக் கொண்டிருந்தவரின் கால் திடீரென இடறியதில் வினாடி நேரத்தில் சரசரவென மலைப்பள்ளத்தாக்கில் சறுக்கிக்கொண்டே போய் அதள பாதாளத்தில் விழுந்தார்.

பிறந்த இடம் கொடைக்கானல்தான் வளர்ந்த இடம் டால்பின் நோஸ்தான் அந்த இடத்தின் பயங்கரத்தை, பாதாளத்தை நன்கு அறிந்தவர்தான் பயணிகளை எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருப்பார், அப்படிப்பட்டவருக்கே இப்படி ஒரு ஆபத்துவரும் என்று யார்தான் ஊகித்திருக்கமுடியும்?

சுற்றியிருந்த சுற்றுலா பயணிகள் அலறினர் அழுதனர் காப்பாற்ற முடியாமல் துடித்தனர், தகவல் அறிந்து தீயனைப்பு படையினர் வந்தனர். மிகவும் சிரமப்பட்டு பள்ளத்தாக்கில் இறங்கி பார்த்த போது மணிகண்டன் உயிருக்கு துடித்துக் கொண்டு இருப்பதை பார்த்தனர்.உடனடியாக டோலிகட்டி மேலே துாக்கிவந்தனர்.

சிராய்ப்புகள் சின்ன சின்னதாய் காயங்கள் இருந்தனவே தவிர உடலில் பெரிதாக எதுவும் அடிபடவில்லை ஆனால் மயக்க நிலையில்தான் மணிகண்டன் இருந்தார், பார்த்தவர்கள் நல்லவேளை பெரிதாக அடிபடவில்லை பிழைத்துக் கொள்வார் என்றே எண்ணினர்.

காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார் அங்கே போன போதுதான் தெரிந்தது எங்கே அடிபடக்கூடாதோ? அங்கே ஆம் தலையில் பலமாக அடிபட்டு இருந்தது,தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது இருந்தாலும் மணிகண்டனுக்கு உயிர் இருந்தே தவிர உணர்வு வரவில்லை.

எப்படியும் மணிகண்டனை காப்பாற்ற வேண்டும் என்ற உறவினர்கள் நண்பர்களின் அழுகை வேதனை காரணமாக உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நல்லவேளை பெரிய பள்ளத்தில் இருந்து விழுந்தாலும் சின்ன காயம்தான் பிழைத்துக் கொள்வார் என்று விபத்தை பார்த்தவர்களும் ஊரில் உள்ள உறவினர்களும் நண்பர்களும் நம்பிக்கொண்டிருக்க அந்த ‛நல்லவேளை' வரவேயில்லை.

மணிகண்டனை காப்பாற்ற தனியார் ஆஸ்பத்தரியில் நடந்த கடுமையான போராட்டம் பலன் தராமலே போனது மூளைச்சாவு என்று அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது மட்டுமே முடியும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சொல்லிவிட கதறி அழுத உறவினர்கள் மற்றவர்கள் உருவிலாவது மணிகண்டன் வாழட்டும் என்று முடிவு எடுத்து உடல் உறுப்பு தானத்திற்கு ஒத்துக் கொண்டனர்.

இருதயமும் நுரையீரலும் சென்னை மலர் மருத்துவமனையில் உள்ள இருவருக்கும், ஒரு சீறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஒருவருக்கும், ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனையி்ல் இருந்த இருவருக்கும், இரண்டு கண்களும் மதுரை அரவிந்த் ஆஸ்பத்தரியில் இருந்த இருவருக்கும் என ஏழு பேருக்கு மணிகண்டனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இப்போது மணிகண்டன் ஏழு பேராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வீர வணக்கங்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.