12/09/2018

மனதில் தோன்றுவது உணர்வு...


நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா?

கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..

ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன? என்று யாராவது கேட்கலாம்.

அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால்...

அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.

நண்பர்கள் நன்றாக கவனிக்கவும்...

நான் உறுதியான உணர்வு என்று தான் சொல்கிறேன். எண்ணம் என்று சொல்லவில்லை.

ஏனென்றால் எண்ணம் என்பது நமது மேல் மட்ட மனதில் தோன்றுவது.

உணர்வு என்பது உள்மனதில் ஏற்படுவது. அதற்கு சக்தி அதிகம்..

அந்த சக்தி நம்மை சரியான வழியில் நடத்திச் சென்று நமது குறிக்கோளை அடைய உதவும்.

சும்மா நமது உணர்வு மனதில் அந்த செயலில் ஜெயித்துக் காட்டுவோம் என்று வற்புறுத்தி நாம் நினைக்கலாம்.

ஆனால் சக்தி வாய்ந்த நமது ஆழ்மனக் கிடங்கில் உள்ள நாம் சேர்த்து வைத்த நமது பழைய குப்பைகள் அந்த நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருந்தால் பயனில்லை.

அந்த நீண்ட நாளைய சேமிப்புக்கு தான் சக்தி அதிகம்.

அவை ‘இவரு ஜெயிச்சுருவாரோம்ல…என்ன கொடுமை சார் இது?’  என கேலி செய்யலாம்.

ஆக அந்த குப்பைகளை காலி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வேரோடு பிடுங்கி களைய வேண்டும்.

விழிப்புணர்வுடன் இருந்து மேலும் அவை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்மனதில் நன்னம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.

அந்த நல்ல நம்பிக்கைகள் நமக்கு வெற்றி மனோபாவத்தை ஏற்படுத்தும்.
சாதிக்கும் சக்தியை கொடுக்கும்.

வெற்றி மனோபாவத்துடன் நாம் செயல்பட ஆரம்பித்தோமானால் நமது சாதனைகளுக்கு வானமே எல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.