19/10/2018

பெண்களின் மார்பகம் பற்றிய ஓர் விழிப்புணர்வு பதிவு...


பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.

அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.

அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.

அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.

ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.

பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது. ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.

சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.

கதைச் சுருக்கம் வருமாறு.

மத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.

மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.

மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள். நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.

இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயை வைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.

பின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.

அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.

காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.

இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.

மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.

இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.

ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி. அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.

ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.

ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.

வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.

அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.

இப்படியாகக் கதை முடிகிறது.

இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது..

யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.

அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.

என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.

ஒருவேளை இக்கதையைப் படித்தால்

பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.

அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.

பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வர வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.