08/10/2018

இந்திக்கு கொடி பிடிக்கும் பலர், மொழி உரிமைக்காக போராடுபவர்கள் மீது அடிக்கடி தொடுக்கும் கேள்வி இதுதான்...


Isn't it mentioned in the constitution of India that "It shall be the duty of the Union to promote the spread of the Hindi language"? So what is wrong in promoting Hindi?

ஆம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியை மேன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடபட்டிருக்கிறது, ஆனால் அதே அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்காவது தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை மேன்படுத்துங்கள் என்று குறிப்பிட பட்டிருக்கிறதா? இந்தியை இந்தியாவின் தனி அதிகார மொழியாக்குவது தான் இந்தியாவின் மொழி கொள்கை,

"The Constitution adopted in 1950 stipulated that English and Hindi would be used for the Union's official business for a period of fifteen years (s. 343(2) and 343(3)). After that time, Hindi was supposed to become the sole official language of the Union."

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை முன்னிறுத்துவது தான் இந்திய அரசின் அடிப்படை மொழி கொள்கை.

அதன் அடிப்படையில், எங்கே இந்தி பேசும் மாநிலங்களை ஆங்கிலத்தை புறக்கணிக்க சொல்லுங்கள் பார்ப்போம்?. ஏன் இந்தி மாநிலங்களில் இன்னும் ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது?

ஆங்கிலத்தை இனி இந்தியாவில் ஓரம் கட்ட முடியாது என்று தெரிந்து தான் இப்போது பிற தேசிய மொழிகளை ஓரம் கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த உண்மை தெரியாமல் தான் பல இந்தி ஆதரவாளர்கள் பிதற்றி கொண்டு திரிகிறார்கள்.

இந்தி மாநிலங்களுக்கு திராணி இருந்தால் முதல் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை நிறுத்த சொல்லுங்கள்.

இந்தியால் ஆங்கிலத்தை வீழ்த்த முடியவில்லை, அதனால் தான் எம் மொழியின் இடத்தை ஆக்கிரமிக்க மத்திய அரசு முற்படுகிறது.

நாம் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அதுவும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தான் எங்கள் எதிர்ப்பு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்

"Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same"(Article 29 Protection of interests of minorities,).என்று குறிப்பிட பட்டிருக்கிறது.

நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பது எமது மொழியை பாதுகாக்க தான். நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கு காரணம் இந்தி தமிழின் இடத்தை ஆக்கிரமிக்க துடிப்பதினால் தான்.

இந்தி திணிப்பை நாம் எதிர்காததினால் தற்போது தமிழகத்தில், வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனங்கள் தமது விளம்பர பதாகைகளில் இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களும் இதையே முன்மாதிரியாக கொண்டு தமது விளம்பரங்களையும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள வங்கிகளின் படிவங்களிலும் இப்போது இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் ..

படிவங்களில் மட்டும் இல்லை, சில வங்கிகளில் வேலைக்கு அமர்த்தப்படும் அதிகாரிகளுக்கும் தமிழ் தெரிவதில்லை. வங்கி இயந்திரங்களிலும் தமிழ் இல்லை.
தமிழக விமான நிலையங்களில் வேலை செய்யும் மேல் அதிகாரிகள் பலருக்கு தமிழ் தெரிவதில்லை. அதை தவிர விமானத்தில் பயணம் செய்யும் போது அறிவிப்புகளும், அபாய குறிப்புகளும் தமிழில் இல்லை.

வானொலியிலும் இந்தி மெல்ல மெல்ல நுழைந்துவிட்டது. இந்திக்கென்று தமிழகத்தில் தனி அலைவரிசை என்ற நிலையும் இப்போது வந்துவிட்டது.

தொலைகாட்சியிலும் இப்போது இந்தி ஆளுமை செலுத்த தொடங்கிவிட்டது. விஜய் தொலைகாட்சியில் சமீபகாலமாக இந்தி திரைப்படங்களை எந்த ஒரு  மொழி பெயர்ப்பும் இல்லாமல் திரையிட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சில மாத காலத்தில் இந்தி நாடகங்களையும் நேரடியாக இந்தியிலேயே திரையிட்டாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை.

நாட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், வீட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், இப்போது கட்டைவிரலிலும் இந்தியின் ஆட்சி தான்.

இந்தியில் கையொப்பம் இட்டால் சன்மானம் வழங்கப்படுமாம். கையொப்பம் என்பது எமது தனிப்பட்ட அடையாளம், எம் கையொப்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை கூட இப்போது தமிழர்களுக்கு இல்லையா? இந்திக்கு இன்று சன்மானம் கொடுப்பவர்கள், தமிழுக்கு நாளை அபராதம் விதிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.