10/11/2018

அமேசான் மர்மம்...


அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.

 வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர்.

அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். சில இடங்களில் அதன் அகலம் சுமார் 150 மைல்கள். அதாவது 190 கி.மீ. மலைக்க வைக்கும் விஸ்தாரம் கொண்ட இந்த நதிக்கு, ‘நதிக் கடல்’ என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. கப்பல் போக்குவரத்தின் பொழுது எழும் அலைகளால் பக்கவாட்டு கரைப்பகுதி பாதிக்கப்படுவதால், வருடத்திற்கு வருடம் இந்த நதியின் அகலம் சுமார் 6 அடி கூடிக் கொண்டே போகிறதாம். 1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1500 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் நீளத்தில் ‘நைல்’ நதிக்குதான் முதலிடம் (மழைக்காலங்களில் அமேசானின் நீளம் நைல் நதியை விட சுமார் 100 கி.மீ. அதிகமாகும்).

அமேசான் ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது. இந்த நதிக்கரையில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நதியின் ஊடாகப் வலைப் பரவலாய் பரவி நின்று, அந்த வழியாகச் செல்லும் படகுகளைக் கவிழ்க்கும் வல்லமை பெற்றவை. எனவேதான் இந்நதிக்கு, ‘படகுகளை அழிக்க வல்லவன்’ என்ற அர்த்தத்தில் அமேசான் என அங்கு வாழும் மக்கள் தங்களது மொழியில் பெயர் சூட்டியுள்ளனர்.

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன. எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர். இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர். இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.

காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.

ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர். ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவைத் தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.

Anaconda உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

அமேசான் நதியில் டால்பின் வகைகள் உட்பட சுமார் 3 ஆயிரம் மீன் வகைகள் உள்ளன. இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீனைப் பற்றி இங்கே கூறியே ஆக வேண்டும். காரணம் இது ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.

தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன. அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம். ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு. அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வாலியா ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது. நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார். எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.

இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கூட புதுவகை டால்பின் (Inia araguaiaensis) ஒன்றினை ஆய்வாளர்கள் அமேசான் நதியில் கண்டுபிடித்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.