19/11/2018

நெஞ்செரிச்சல் பிரச்சினையா?


நார்சத்து உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்...

சிலர் நெஞ்செரிச்சல் அல்லது எதுக்களிப்பு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். வயிற்றுப் பகுதி அமிலங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஜீரணக் கோளாறு உண்டாகிறது. இது மாதிரி நிலையில் அமிலங்களுடன் உணவுக்குழாய் நெருங்கி வரும் போது எதுக்களிப்பு சிக்கல் உண்டாகிறது. அதன்பிறகு எது சாப்பிட்டாலும் மேலே வருவது போலவும், கூடவே நெஞ்செரிச்சலும் இருக்கும். இது மாதிரி நிலையில் நார்சத்து நன்றாக கைகொடுக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். (ஏற்கனவே பெருங்குடல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரழிவு ஆகியவற்றை தடுப்பதில் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.) கூடவே கொழுப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்த போது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருந்தது. உடல் பருமனும் எதுக்களிப்பை தூண்டி விடும் மற்றொரு சிக்கலான காரணி தான். இந்நிலையில் உணவில் இடம்பெறும் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைத்து, நார்ச்சத்தை அதிகப்படுத்தும் பட்சத்தில் எதுக்களிப்பு அறிகுறிகள் கணிசமாக குறைவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் நார்சத்து அதிகமாக காணப்படுகிறது.

எதுக்களிப்பு பிரச்சினையை கண்டு கொள்ளாமல் சும்மா இருந்தால், அல்சர், உணவுக் குழாய் பாதையில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படும். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் உணவுக்குழாய் பாதையில் புற்றுநோய் வரும் ஆபத்தும் உள்ளது. ஆகையால் நெஞ்செரிச்சல் வியாதிக்காரர்கள் உணவில் கொழுப்பை குறைத்து, நார்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.