18/03/2019

இமயமலைக்கே சீனியர்.. மேற்கு தொடர்ச்சி மலை 1600 கி.மீ. நீள இயற்கை பொக்கிஷம் - உலக பாரம்பரிய சின்னமானதால் கூடுதல் கம்பீரம்...


இமயமலையை விட வயதில் மூத்தது, மொத்தம் ஆறு மாநிலங்களை கடந்து, 1600 கி.மீ. தூரம் நீண்டு பல அதிசயங்களை, பொக்கிஷங்களை தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தேக்கு உள்பட பல அரிய மரங்கள், ஏராளமான உயிரினங்கள், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்கள், சபரிமலை, பழநி கோயில் போன்ற இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கும் இடம்தான் மேற்கு தொடர்ச்சி மலை. இவ்வளவு பெருமைகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

குஜராத்தின் தாபி பள்ளத்தாக்கில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம்,  கேரளா, தமிழ்நாடு வழியாக இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் முடிகிறது மேற்கு தொடர்ச்சி மலை. 6 மாநிலங்களை தாண்டி மொத்தம் 1,600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இது ‘சாயத்ரி மலை’ எனவும், தமிழகத்தில் பொதிகை மலை, ஆனைமலை, நீலகிரி மலை எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மிக உயரமான சிகரமாக கேரளாவில் உள்ள ஆனைமுடி விளங்குகிறது. 2 ஆயிரத்து 695 மீட்டர் உயரத்தில் உள்ள இதுதான் தென்னிந்தியாவின் உயரமான சிகரம்.

புவியியல், வரலாற்று அறிஞர்கள் இந்த மலை ‘கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி’ என கூறுகின்றனர். பண்டைய காலத்தில் இந்த மலை தற்போதைய ஆப்ரிக்கா, மடகாஸ்கர், செஷல்ஸ் தீவுகளுடன் இணைந்திருந்தது. 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் மாற்றம் ஏற்பட்டபோது கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென்னிந்திய பகுதிகள், ஆசிய கண்டம் நோக்கி இடம் பெயர்ந்தன. இதோடு 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவான புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலை என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு, காலப்போக்கில் அங்கு அரிய தாவரங்கள், உயிரினங்கள் உருவாக காரணமாக அமைந்தது. இங்குள்ள பல ஆயிரம் வயதுள்ள அடர்ந்த சோலை காடுகளை போன்று உலகில் வேறு எங்கும் காண முடியாது.

இந்த மலையில் உருவாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பெரிய ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகின்றன. பல்வேறு சிறிய ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன. அதில் சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கல்லாறு, பெண்ணாறு, பெரியாறு ஆகியவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு, நீர் பாசனத்துக்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள கோபாளி, கோய்னா, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர், கேரளாவின் பரம்பிக்குளம், தமிழகத்தில் மேட்டூர் ஆகிய பெரிய அணைகள் முக்கியமானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மிளா போன்ற மிருகங்கள், மான், சோலை மந்தி, சிங்கவால் குரங்கு, வரையாடு உள்ளிட்ட 139 வகையான பாலூட்டி இனங்கள், 508 வகை பறவைகள், நிலத்திலும் நீரிலும் வாழும் 176 வகை உயிரினங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் 119 வகை பட்டர் பிளை, பறக்கும் அணில், பறவை கீரி போன்ற அரிய உயிரினங்களும் அடங்கும்.

இந்த மலையில் தேக்கு மரக்காடுகள் அதிகம் உள்ளன. தேக்கடி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களில் பூக்கும் மலர்கள், மலையின் அழகை ரம்மியமாக்குகிறது. தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர்கள் விளைகின்றன. இதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி அன்னிய செலாவணியை அள்ளித் தருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

அரபிக் கடலில் வீசும் குளிர்ந்த காற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி மழை தருகிறது. இதுதான் தென்மேற்கு பருவ மழையாகும். தென்னிந்தியாவின் நீர் ஆதாரமே இந்த மலைதான். இத்தகைய சிறப்புமிக்க மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கு முன்பு மத்திய அரசின் நிபுணர் குழு ஆராய்ச்சி நடத்தி அறிக்கை பெற்றுள்ளது. அதில் ‘மேற்குத் தொடர்ச்சி மலையில் 60 சதவீதம் பகுதி புலி, யானைகள் காப்பகம், சரணாலயங்கள், தேசியப் பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக ஏற்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய வனப் பகுதி 25 சதவீதம். இதை பாதுகாக்க யுனெஸ்கோ பல ஆயிரம் கோடி நிதி அளிக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை வளத்தை மேம்படுத்த வேண்டும். மழை வளம் தொடர்ந்து கிடைக்க மலை வளம் காக்கப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த மலையின் மைந்தர்களாக வாழும் பளியர், படுகர், இருளர் போன்றவர்களை சுற்றுச்சூழலை காரணம் காட்டி மலைப்பகுதியில் இருந்து விரட்டுவதற்காகவே இந்த அறிவிப்பு என்ற குற்றச் சாட்டையும் சிலர் எழுப்பியுள்ளனர். உண்மையில், பல நூறு ஆண்டுகளாக இந்த மலையில் வாழும் இவர்கள்தான் உண்மையான சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள். இவர்களையே மேற்குத் தொடர்ச்சி மலையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மலையை குடைந்து குவாரி அமைத்து கனிம வளத்தை அழிப்பதில் கர்நாடகாவும், புதிய அணை, மின் உற்பத்தி திட்டமிடுவதில் கேரளாவும் முனைப்பு காட்டுவதுதான் நம் நெஞ்சில் வேல் பாய்ச்சுகிறது. மழை குறைவுக்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதுதான் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குழு தலைவர் அப்பாஸ் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உலக அங்கீகாரம் கிடைத்து பாரம்பரிய பட்டியலில் அறிவிக்கப்பட்டு இருப்பது இந்திய நாட்டுக்கே பெருமை. குறிப்பாக தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதன்மூலம் மலையில் கேரளா, கர்நாடகம் புதிய அணை கட்ட முடியாத நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மலையின் சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்பட அனுமதிக்க கூடாது. மலையில் மரங்கள் உள்ளிட்ட இயற்கை செல்வங்களை அழியாமல் காக்க முன்வர வேண்டும். உலகில் எங்குமில்லாத அரிய உயிரினங்களுக்கு ஆபத்து நேரக் கூடாது. இதன் மூலம் மலை வளம் காக்கப்படும்’’ என்றார்.

உற்பத்தியாகும் ஆறுகள்..

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள்: பத்ரா, பீமா, சாலக்குடி, சித்தாறு, கோதாவரி, கபினி, காளி, கல்லாயி, காவிரி, கோய்னா, கிருஷ்ணா, குண்டலி, மகாபலேஷ்வர், மலபிரபா, மணிமுத்தாறு, நேத்ராவதி, பச்சையாறு, பரம்பிக்குளம், வைகை, பெண்ணாறு, சரஸ்வதி, சாவித்ரி, ஷராவதி, தாமிரபரணி, தபதி, துங்கா, வீணா.

அருவிகளும் ஆன்மீக தலங்களும்...

குற்றாலம், அகஸ்தியர், சுருளி, அப்பே, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சி என இந்த மலை தொடர்ச்சியில் உள்ள அருவிகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. கோவா, பாலக்காடு போன்ற கணவாய்களும் அமைந்துள்ளன.

ஆன்மிகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலை புகழின் உச்சியில் நிற்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில், பழநி மலை, கற்புக்கரசி கண்ணகி கோயில் போன்றவை இதில்தான் அமைந்துள்ளன. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் குளு குளு ஊட்டி, இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களும், சுற்றுலா பயணிகளை கவரும் தேக்கடியும் அமைந்துள்ளன.

களக்காடு முண்டந்துறை, பிடிஆர் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், அகத்தியமலை, நீலகிரி உயிர்க்கோள காப்பகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய பூங்கா, பந்திப்பூர் உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களும் ஸ்ரீவில்லிபுத்தூர், தலைக்காவிரி, வயநாடு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் காட்டுயிர் வாழ்விடங்கள் மற்றும் பறவைகள் வாழ்விடங்களும் அமைந்துள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.