18/03/2019

துரைமுருகன் மகனுக்கு சீட்டா.. திமுக பிரமுகர் விலகல்.. பாமகவில் சேர்ந்தார்...


துரைமுருகன் மகனுக்கு சீட் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவிலிருந்து விலகிய பிரமுகர் பாமகவில் போய்ச் சேர்ந்தார்.

திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் திமுக எந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது நேற்றே இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இந்த தேர்தலில் திமுக போட்டியிடும் 20 இடங்களில் ஏறத்தாழ 8 இடங்களில் திமுக தலைவர்களின் வாரிசுகளே போட்டியிடுகிறார்கள். இதனால் அடிமட்ட தொண்டர்கள் முதல் கட்சியின் நிர்வாகிகள் வரை பலரும் அதிருப்தியில் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டால் அங்கு தேமுதிக எளிதாக வென்று விடும். ஆகவே பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு போட்டியிட இடம் கொடுக்கக் கூடாது என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி கவுதம சிகாமணிக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதுபோலவே வேலூர் தொகுதியை திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு கேட்டு கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே துரைமுருகன் காய் நகர்த்தி வந்தார். ஆனால் அப்போது அவருக்கு சீட் வழங்கப்படவில்லை மாறாக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. அப்போது திமுகவில் பல உள்ளடி வேலைகள் நடைபெற்றதால் திமுக கூட்டணி அப்போது தோற்றதாக கூறப்படுகிறது.

வேலூரை பொருத்தமட்டில் அங்கு வன்னியர்களின் வாக்கு வங்கி அதிகம். அதிமுக கூட்டணியில் இப்போது புதிய நீதி கட்சி சார்பில் A.C சண்முகம் போட்டியிடுகிறார். கடந்தமுறையே பலவீனமான பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட 63393 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை பறிகொடுத்திருந்தார். இந்நிலையில் வன்னியர் வாக்கு வங்கி பலமாக உள்ளதால் எப்படியும் சொந்த சாதி பலத்தால் வென்று விடலாம் என்று துரைமுருகன் தரப்பு கணக்கு போட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் திமுகவினரிடம் துரைமுருகனுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தின் திமுக முக்கிய பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான சிவூர் துரைசாமி அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவர் பாமகவில் இணைந்துள்ளார்.

மாவட்டத்தில் கணிசமான ஆதரவாளர்களையும் நல்ல செல்வாக்கையும் பெற்றுள்ள துரைசாமி தேர்தல் நெருக்கத்தில் பாமகவில் இணைந்துள்ளது திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நிர்வாகிகள் வெளியேற தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.