22/03/2019

அமைச்சர் மனிகன்டனால் சிதைந்து போன ராமநாதபுரம் அதிமுக-பர..பர ரிப்போர்ட்...


ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்வர்ராஜா, டாக்டர் சுந்தர்ராஜ் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் மூலம் ஒரே கல்லில் 3 தலைகளை வீழ்த்தியுள்ளார் அமைச்சர் மணிகண்டன்  என்ற கருத்து அ.தி.மு.க-வினரிடையே அதிரடியாகப் பரவி வருகிறது.

ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா மீண்டும் களமிறங்காதது ஏன்?

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்வர்ராஜா, டாக்டர் சுந்தர்ராஜ் ஆகியோருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் மூலம் ஒரே கல்லில் மூன்று தலைகளை வீழ்த்தியுள்ளார் அமைச்சர் மணிகண்டன் என்ற கருத்து அ.தி.மு.க-வினரிடையே அதிரடியாகப் பரவி வருகிறது.

ராமநாதபுரம் தொகுதியின் தற்போதைய எம்.பி-யாக இருந்து வருபவர் அன்வர்ராஜா. அ.தி.மு.க தொடங்கப்பட்ட காலம்முதல் இன்றுவரை அக்கட்சியிலேயே நீடித்து வருபவர். ஒன்றியச் செயலாளர், ஒன்றியப் பெருந்தலைவர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், அமைச்சர், எம்.பி., சிறுபான்மை பிரிவுச் செயலாளர் எனக் கட்சியிலும் ஆட்சியிலும் பல பதவிகளை வகித்தவர். மாவட்டத்தில் அரசியல் பேசத் தெரிந்த ஒரு சிலரில் முதன்மையானவர். இத்தனை தகுதிகள் இருந்தும் இடையில் வந்த அமைச்சர் மணிகண்டனால் ஓரங்கட்டப்பட்டு முக்கிய நிகழ்வுகளில் புறக்கணிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பொது மேடையிலேயே தாக்கிப் பேசுவதும் தொடர்ந்தது. இந்நிலையில் எம்.பி தேர்தலில் மீண்டும் போட்டியிட அன்வர்ராஜா விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்காகக் கட்சியின் மிகவும் ஜூனியரும் தனது எதிரியுமான அமைச்சர் மணிகண்டன் வீட்டுக்கே சென்று பொன்னாடை அணிவித்து ஆதரவு கோரினார். ஆனால், கூட்டணியில் ராமநாதபுரம் பி.ஜே.பி-க்குப் போனதால் எம்.பி சீட் கனவுடன் காத்திருந்த அன்வர்ராஜாவின் கனவு கலைந்துபோனது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் தொகுதி
 அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ராஜகண்ணப்பன். ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜகண்ணப்பன் அ.தி.மு.க-வில் மாணவர் காலம்தொட்டு இருந்து வருபவர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா காலத்தில் கட்சிப் பொருளாளர், பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலை என மூன்று முக்கியத் துறைகளின் அமைச்சர், சிவகங்கை மாவட்டச் செயலாளர் எனப் பலவகையிலும் கோலோச்சி வந்தவர். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் ஓ.பி.எஸ் தொடங்கிய தர்ம யுத்தத்திலும் பங்கெடுத்தவர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓ.பி.எஸ் அணியை முன்னெடுத்துச் சென்றவர். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்புக்குப் பின் கட்சியின் அமைப்புச் செயலாளராகத் தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியினைக் குறிவைத்து காத்திருந்தார். பி.ஜே.பி கூட்டணி உருவாகும் நிலையில் சிவகங்கை பி.ஜே.பி-க்குப் போகும் என்பதால், அடுத்த இலக்கான ராமநாதபுரத்தைக் குறி வைத்துப் பணியாற்றினார். இதற்குத் தொகுதியில் உள்ள தனது சமுதாய வாக்குகளையும் காரணமாகக் காட்டி வந்தார். இதனடிப்படையில் ராமநாதபுரம் தொகுதியில் தனது சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி பி.ஜே.பி-க்கு ஒதுக்கப்பட்டதால் அவரது கனவும் கலைந்துபோனது.

இதையடுத்து, மதுரை தொகுதியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் கைவிட்டுப் போனதால் இப்போது கட்சியைவிட்டே போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் தொகுதி கிடைக்கக் கூடாது என்பதில் அமைச்சர் மணிகண்டனின் சித்து விளையாட்டுகள் இருந்துள்ளதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே கருத்து உலவுகிறது. சிவகங்கை தொகுதி பி.ஜே.பி-க்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடும் சூழலில் அன்வர்ராஜாவோ, ராஜகண்ணப்பனுக்கோ போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். அப்படி வாய்ப்பளிக்கப்பட்டால் இருவரில் ஒருவர் மீண்டும் தனக்குப் போட்டியாக வரக் கூடும் என அமைச்சர் மணிகண்டன் நினைத்ததாகவும், இதைத் தடுக்க பி.ஜே.பி. துணைத் தலைவரான நயினார் நாகேந்திரனை உசுப்பேற்றி ராமநாதபுரம் தொகுதியை பி.ஜே.பி-க்கு வாங்க வைத்ததாகவும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனது அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக, பரமக்குடி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி  நிறைகுளத்தானின் மகனும், மணிகண்டனின் ஆதரவாளருமான சதன் பிரபாகருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 1989 தேர்தலில் ஜெ.அணி சார்பில் போட்டியிட்டு வென்றவர்களில் சுந்தர்ராஜும் ஒருவர். 3 முறை எம்.எல்.ஏ-வான சுந்தர்ராஜுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காத போதும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து இயங்கினார். டாக்டர் முத்தையா, அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அணிக்குச் சென்றதால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதியிருந்தார். அமைச்சர் மணிகண்டன் தரப்பு, மாவட்டச் செயலாளர் முனியசாமி தரப்பு என எந்தப் பக்கமும் கோஷ்டி சேராமல் எல்லாத் தரப்பினரிடமும் இணக்கமாக இருந்து வந்தார். இதனால் எப்படியும் தனக்கு சீட் கிடைத்து விடும் என்ற கனவில் இருந்தார் டாக்டர் சுந்தர்ராஜ்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன்...

கட்சியின் சீனியரான சுந்தர்ராஜ் வெற்றி பெற்றால் தன்னிடம் இருக்கும் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதாலும், மாவட்டத்தில் தன்னை மீறி அரசியல் செய்யத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சத்திலும் சீனியரான சுந்தர்ராஜுக்கு பதில் ஜூனியரான சதன் பிரபாகருக்கு சீட் கொடுக்க அமைச்சர் மணிகண்டன் பரிந்துரைத்ததாகவும் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு எதிராக யாரும் உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் மணிகண்டன் கட்சியின் சீனியர்களான அன்வர்ராஜா, ராஜகண்ணப்பன், டாக்டர் சுந்தர்ராஜ் ஆகிய மூன்று பேரையும் ஒரே கல்லில் வீழ்த்தியது மட்டுமல்ல, தனக்கு வாழ்வு கொடுத்த கட்சியின் அழிவுக்கும் துணை போய் உள்ளார் அமைச்சர் மணிகண்டன் என அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.