19/08/2020

பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதியை சிதைக்காதீர்கள்: 1,500 வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை...



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கில், நீதியை சிதைக்காதீர்கள் என 1,500 வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுஇருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் 20ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பஞ்சு, அர்விந்த் தாதர், ஷியாம் திவான், மேனகா குருசுவாமி, ராஜூ ராமசந்திரன், பிஸ்வாஜித் பட்டாச்சார்யா. நவ்ரோஜ் சீர்வாய், ஜனக் துவாரகதாஸ், இக்பால் சக்லா, டாரியஸ்கம்படா, விரிந்தா குரோவர், மிகிர் தேசாய், காமினி ஜெயிஸ்வால் மற்றும் கருணா நந்தி உள்ளிட்ட 1,500 வழக்கறிஞர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்திய பார் கவுன்சிலின் உறுப்பினர்களாகிய நாங்கள், பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்பாராத அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்.

சுதந்திரமான நீதித்துறை என்பது, சுதந்திரமான நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் கொண்டது. அதுவே அரசியலமைப்புக்கு உட்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தின் ஆட்சியென்பதாகும். பரஸ்பர மரியாதையும் அச்சுறுத்தலின்மையும் தான் நீதிமன்ற அமர்வுக்கும், வழக்கறிஞர்களுக்குமான சுமூக உறவுக்கு அடையாளமாக விளங்குவது. அந்த சமன்பாட்டில் இந்த பக்கமோ அந்த பக்கமோ ஒரு சிறு குலைவு ஏற்பட்டாலும், அது நீதிமன்றத்திற்கும் இந்த நாட்டிற்கும் கடுமையான தீங்கை விளைவித்துவிடும்.

ஒரு சுதந்திரமான நீதித்துறை என்பது நீதிபதிகள் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல. நீதித்துறையின் பால் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை நீதிபதிகளிடமும், நீதிமன்ற அமர்வுகளுக்கும், பொது மக்களுக்கும் இயல்பாக சுட்டி காட்டுவது வழக்கறிஞர்களின் கடமையாகும். பிரசாந்த் பூஷனின், இரு டுவிட்டர் கருத்துகளின் தன்மைக்குறித்து எங்களில் சிலருக்கு வேறுபட்ட கருத்துகளும் அறிவுறுத்தல்களும் இருக்கலாம். ஆனால், அவை நீதிமன்ற அவமதிப்பு இல்லை. அந்த நோக்கத்தில் பதிவிடப்படவில்லை என்பதில் ஒரு மித்த கருத்தில் இருக்கிறோம்.

பிரசாந்த் பூஷன், சிறந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர். அவர் ஒரு சாதாரண நபராக இல்லாமல் இருக்கலாம். அவரது டுவிட்டர் கருத்துகளும் அசாதாரணவொன்றை வலியுறுத்தவில்லை. அது சமீபகாலமாக நீதிமன்றத்தின் பணி குறித்து பல்வேறு நபர்களால் தொடர்ந்து பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் வலியுறுத்தப்பட்டு வரும் கருத்து தான். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் இதேபோன்ற, கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பானது மக்களின் பார்வைக்கு நீதிமன்றத்தின் அதிகாரத்தினை நிலைநாட்டுவதாக இல்லை. மாறாக, அது வழக்கறிஞர்களின் வெளிப்படைத்தன்மையை முடக்குவதாக அமையும். நீதிபதிகளின் நியமனத்தில் பதவி மூப்பு மற்றும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளில் பார்கவுன்சிலின் வழக்கறிஞர்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு துணை நின்றனர். நீதிமன்ற அவமதிப்பு என்பதன் மூலம் வழக்கறிஞர்கள் முடக்கப்படுவது நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மையையும் கடைசியாக, நீதிமன்றத்தின் வலுவையும் பாதிக்கும். மவுனமாக்கப்படும் வழக்காடுதல், வலுவான நீதிமன்றத்தை உருவாக்காது.

மேலும், இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் இருப்பை சிறிதும் சட்டை செய்யாத உச்சநீதிமன்றத்தின் செயல் கடுமையான ஏமாற்றத்தை தருகிறது. நீதிமன்ற அவமதிப்பு போன்ற விஷயங்களில் கண்டிப்பாக அவரது கருத்தினை கேட்க வேண்டும் என இருக்கும்போது அதனை செய்யாதது மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த தீர்ப்பை இப்படியே நடைமுறைபடுத்தி விடக்கூடாது என்பதில் நாங்கள் வலுவாக இருக்கிறோம்.

இந்த வழக்கை, இதைவிட பெரிய அமர்வாக திறந்தவெளி அமர்வாக, கொரோனா தொற்றுக்கு பிறகு மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கடந்த 72 மணி நேரத்தில் இது குறித்த ஒலித்த மக்களின் குரலுக்கு உச்சநீதிமன்றம் செவி சாய்க்கும் என்றும், நீதி பிற பிறழாமல் இருக்கு நடவடிக்கை என்றும், உச்சநீதிமன்றத்தில் எப்போதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் , மரியாதையையும் மீட்டெடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.