07/09/2020

பெங்களூரு போதைப் பொருள் விற்பனை வழக்கில் டெல்லி ஓட்டல் அதிபர், பாஜக நிர்வாகி உட்பட 15 பேர் கைது...



பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் நடிகை ராகினி திவேதியை தொடர்ந்து டெல்லி ஓட்டல் அதிபர், பாஜக நிர்வாகி உட்பட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவி மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த எச்.ஏ.சவுத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி கைது செய்தனர். இவர்கள்அளித்த தகவலின் பேரில் பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, தொழிலதிபர் ரவீந்திரன், ஓட்டல் அதிபர் முகமது அனூப் ஆகிய 3 பேரை ஆகஸ்ட் 27-ம் தேதி கைது செய்தனர்.

இந்த 3 பேருக்கு உடந்தையாக இருந்ததாக நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் ஷெட்டி, ஓட்டல் அதிபர்கள் பிரதீக் ஷெட்டி, கார்த்திக் ராஜ், ஆர்.டி.ஓ. ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோரை பெங்களூரு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:

நடிகை ராகினி திவேதி தனது நண்பர் ரவிசங்கர் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளார். போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு ராகினி திவேதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.

சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் ஷெட்டி கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் கன்னட திரையுலகினரை ஒருங்கிணைத்து இரவு விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அந்த விருந்தில் போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்ட 8 பேரின் செல்போன், மடிக்கணி னிகளை ஆராய்ந்ததில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வந்த விரேன் கன்னா என்பவரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் கைது செய்தனர். அவரது வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கின.

விரேன் கன்னாவை நேற்று பெங்களூரு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதேபோல பெங்களூருவில் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த 15 பேரை கைது செய்துள்ளோம்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2.13 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 35 செல்போன்கள், 17 மடிக்கணினிகள், 6 கார்கள், ரூ.36 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் 4 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கைதான ஓட்டல் அதிபர்கள் கார்த்திக் குமார், அபி போகி ஆகிய இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் பெங்களூருவில் தங்கி பயிலும் 6 வெளிநாட்டு மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்” என்றார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது, “பெங்களூருவில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கும்பல் கன்னட திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு என் தலைமையிலான மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததன் பின்னணியிலும் இக்கும்பல் இருந்தது” என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.