07/09/2020

ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவம்...



'ரோமன் கத்தோலிக்கம் உலகலாவிய மதம். இதை எந்தவொரு மொழியோ, கலாச்சாரமோ கட்டுப்படுத்தாது. ரோமன் கத்தோலிக்கர்கள் உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் அந்த பகுதி சார்ந்த கலாச்சாரம், உடை, விழாக்கள் என எதையும் பின்பற்றலாம். இதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவரவர் தாய்மொழியில் மட்டுமே இறைவனை வழிபட வேண்டும்' என 1865களில் வாட்டிகனில் கூடிய  இரண்டாம் வத்திக்கான் (வாட்டிகன்) சங்கம் முடிவெடுத்து அதையே செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.

இன்று கத்தோலிக்கத்தைஉலகின் மிகப்பெரிய மதமாக 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டு தொடர்ந்து வளர காரணமாக இருந்தது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முடிவு.

1865க்கு முன்புவரை உலகமெங்கும் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு மொழி லத்தின் மொழிதான். தமிழக தேவாலயங்களிலும் லத்தின் மொழியில்தான் வழிபாடுகள் நடந்தது.

வழிபாட்டு மொழி, கலாச்சாரம் அனைத்தும் அந்த பகுதி வட்டாரம் சார்ந்து பின்பற்றலாம் என சொன்னதும் தமிழ் வழிபாட்டு மொழியானது. அதோடு சேர்ந்து சாதியும் உள்ளே நுழைந்துக்கொண்டது.

இன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா. அங்கிருந்தே இதற்கான உதாரணத்தை காட்டுகிறேன்.

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்கு 40 நாட்கள் விரதமிருந்து பச்சை,கருப்பு,காவி உடைகளில் பாத யாத்திரதை செல்வார்கள். இதில் பெரும்பாலானோர் இந்து சமயத்தை சேர்ந்தோர். இதை கிறிஸ்தவர்களும் காப்பியடிக்கத் தொடங்கினர். இது இந்து மத பழக்கம் எனக்கூறி 18ம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.(அப்போது வேளாங்கண்ணி பாண்டிச்சேரி மறைமாவட்டத்தின்கீழ் இருந்தது)

தமிழக கிறிஸ்தவ வரலாற்றில் இந்த நிகழ்வு 'Querelle des rites Malabar' என குறிப்பிடப்படுகிறது. இந்த சர்ச்சை இந்தியாவில் கிறிஸ்தவர்கள் இருந்த பகுதிகளில் பரவியது. கடைசியில் போப்பாண்டவர் அதில் தலையிட்டு சமரசம் செய்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரவர் விருப்பப்படி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வழிபடட்டும் அதை யாரும் தடுக்க வேண்டாம் என்பதே போப்பின் பதிலாக இருந்தது.

(இது தொடர்பான மேலும் விபரங்கள் பாண்டிச்சேரி French institute வெளியிட்டிருக்கும் 'வேளாங்கண்ணி திருவிழா' என்ற பிரஜிட் செபஸ்தியா எழுதிய நூலில் காணலாம்)

இந்து கோவில்களுக்கு செல்பவர்கள் கோயில் குளத்தில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதன் அர்த்தம் தீய சக்திகளிலிருந்து விடுபடுவதும், உடலை சுத்தம் செய்வதும். இதையே வேளாங்கண்ணியில் செய்ய ஆரம்பித்தனர்.

பழைய வேளாங்கண்ணியில் குளத்தில் குளித்துவிட்டு கோயிலுக்கு வர ஆரம்பித்தார்கள். இதனை தடுக்க அப்போது அந்த குளத்தை சிமெண்ட் சிலாப் போட்டு மூடிவிட்டார்கள். ஆனாலும் மக்கள் மாறவில்லை. குளத்துக்கு பதில் கடலுக்கு போய் குளித்துவிட்டு கோவிலுக்கு வர ஆரம்பித்தார்கள் என அந்நூலில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர்.

ஓரளவிற்குமேல் மக்களை கட்டுப்படுத்த முடியாததால் மக்களுக்கு தகுந்ததுபோல மாற ஆரம்பித்தது வேளாங்கண்ணி.

இந்து கோயில்களில் திருவிழாவின் போது மண்டகப்படி செய்வதுபோல காலங்காலமாக வேளாங்கண்ணி திருவிழாவிலும் மண்டகப்படி கலாச்சாரம் உருவெடுத்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் நாள் கொடி ஏற்றப்பட்டு செப்டம்பர் 7ம் நாள் பெரிய தேர் பவனி கொண்டாடப்படும். அதன் விபரம் கீழே

ஆகஸ்ட் 29 - ஆர்ய நாட்டு செட்டியார்
ஆகஸ்ட் 30 - அகமுடையார், தேவர்
ஆகஸ்ட் 31 - பனைமர நாடார்
செப்டம்பர் 1 - தென்னைமர நாடார்
செப்டம்பர் 2 - கருங்கண்ணி திருச்சபை
செப்டம்பர் 3 - உடையார்
செப்டம்பர் 4 - ஆங்கிலோ - இன்டியன்ஸ்
செப்டம்பர் 5 - திருச்சி எஸ்.எம்.அந்தோணி குடும்பம்
செப்டம்பர் 6 -வேளாங்கண்ணி ஆர்ய நாட்டு செட்டி
செப்டம்பர் 7 - நாகை ஆர்ய நாட்டு செட்டியார்
செப்டம்பர் 8 , 9, 10 - மரிய ஜோசப் குடும்பம்,  ஆசாரி, தச்சர் சமூகம்

இதெல்லாம் உள்ளூர் வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் கலந்த ஒரு கூட்டு.

கிறிஸ்தவத்திற்கென தனியான கலாச்சாரமோ, மொழியோ இல்லாததால் இந்த மாற்றம் பெரிய அளவில் கிறிஸ்தவத்தை பாதிக்கவில்லை. அதே நேரத்தில் இந்துக்களுக்கு இதில் இயல்பான ஒரு ஈடுபாடு வந்தது. தங்களின் வழிபாட்டு முறையிலிருந்து பெரிதாக அந்நியமாக எதுவும் தென்படாததால் வேளாங்கண்ணி மாதாவை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

இதில் இன்னொன்று  கவனம் பெறுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகம் பெண் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதி. அந்த உணர்ச்சிதான் மதம் கடந்து வேளாங்கண்ணி மாதாவை நோக்கி வரச்செய்துள்ளது.

அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.