02/09/2020

கடவுள் படைத்தாரா ?


கடவுள் மனிதரை படைத்தாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ கடவுளை படைத்தது மனிதன் என்பது மட்டும் உண்மை.

அதிலும் மற்ற கடவுளைவிட பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.

மற்ற எல்லா கடவுளுக்கும் குறிப்பிட்ட அவதாரமுண்டு. ஆனால் பிளேக் மாரியம்மன், மைதான மாரியம்மன், தண்டு மாரியம்மன், வேலை கொடுக்கும் பிள்ளையார், இரட்டை விநாயகர், வினை தீர்க்கும் பிள்ளையார் என தெருவுக்கு ஒரு அவதாரம் எடுப்பது இவர்கள் மட்டும்தான். இப்படி மனிதனுக்கு வழிபட கண்டிப்பாக ஒரு உருவம் தேவைப்படுகிறது.

கி மு 483 ல் புத்தர் இறந்தபோது, அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம்.

புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆரதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிபட மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம், மறைந்த இடம், பல், செருப்பு.... இப்படி ஒரு அடையாள ஸ்தலம் இல்லையென்றால் மனித மனம் தவிக்கிறது.

உங்கள் வாழ்க்கை சீராக Highway ல் கார் செல்வதுபோல் சென்றால் பதசஞ்சலிலும் வேண்டாம்; பாதராயணரும் வேண்டாம். ஆனால் அந்த பயணத்தில் சிறு பிரச்சனையை வரும்போதுதான் கடவுளை பற்றிக்கொள்ள மனம் பதப்பதக்கிறது. மனித மனத்தை பொறுத்தவரை, ஒரு கண் கண்ணாடி or ஒரு கைதடி போன்றது கடவுள்.

பக்தி vs ஆன்மீகம்...

பக்திக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.

பக்தி ஒன்றை பற்றிக்கொண்டு திரும்ப, திரும்ப அதையே செய்வது. பல ஆண்டுகளாக பக்தி பாடல்களையும், ஸ்லோகங்களும் பாடி பூஜை செய்யும் பலரை நமக்கு தெரியும்.

ஆனால் தாம் தினமும் சொல்லுகின்ற , ஸ்லோகங்களுக்கு அர்த்தம் அவருக்கு தெரியாது. இது போன்ற பக்தியைத்தான் கடவுள் நம்பிக்கையென்று நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.

ஆன்மீகம் என்பது தன் நிலை உணர்தல். தனக்குள் இருக்கும் கடவுளை தேடுவதாகும் (அகம் பிரம்மாஸ்மி).

யார் கடவுள்...?

நம் மக்களிடையே எஞ்சி நிற்பது வெறும் பக்திதான். மற்ற மொழிக்கில்லதா தனிச் சிறப்பு தமிழுக்கு உள்ளது. தமிழை வளர்த்ததில் பெரிய பங்கு பக்திக்கு உண்டு. தமிழில் உள்ள சிறப்பான நூல்கள் யாவும் பக்தி இலக்கியங்களே. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், ஆண்டாள் பாசுரம் என தமிழை வளர்த்தது பக்திதான்.

இதுபோன்ற விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஜோதிடம், ஜாதகம், வாஸ்து என மனிதரை பயப் படுத்துகின்றவற்றை தான் நாம் கட்டி காப்பாற்றுகின்றோம். மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பகால காரணங்கள் விலகிப்போய், அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும்நிலை, எல்லா மததிற்க்கும் வெவ்வேறு அளவில் உண்டு.

கடவுளை எப்படி உணர்வது..

நாம் எப்படி கடவுளை வணங்குகின்றோம்? வழியில் கடந்து செல்லும்போது வருகின்ற பிள்ளையார்; வண்டியில் செல்லும்போது ஒரு நொடிப் பொழுதில் கடக்கும் முருகன்; சினிமா அரட்டை அடித்துக்கொண்டு கடவுளை தரிசிக்க செல்வது; பிரசாதத்திற்காக கோயிலுக்கு செல்வது இவைதான் பக்தியா ?

திருச் சிற்றம்பலம்..

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.

கடவுளை பார்த்தவுடன் உடலும் மனமும் நடுங்கி உடலெல்லாம் வியர்த்து, கண்ணீர் ததும்ப்பி, பொய்களை தவிர்த்து கைகளை நெகிழ்ந்து கடவுளை கும்பிடுவதாக மணிக்கவாசகர் கூறுகிறார்.

இந்த உணர்வு எனக்கு கடவுளை பார்த்தவுடன் வரவில்லையே? ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்படும் போதும், அந்த ஆட்டத்தை என்னுடைய அணி வெற்றிப் பெறும்போது என்னால் அதை உணர முடிகிறதே (மணிகவாசகருக்கு ஏற்பட்டதுபோல்). அப்போது கிரிக்கெட் தான் கடவுளா? எது ஒன்று மனிதனை மனம் நெகிழ செய்கிறதோ அதுதான் கடவுளாக இருக்க முடியும்.

பாரதியின் பார்வை..

நாம் எதையெல்லாம் கடவுள் வழிபாடு என்று நினைக்கிறோமோ அந்த எல்லாவற்றையும் உடைத்து எறிகிறான் பாரதி.

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தால் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா.
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா.
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா.

கடவுளை உணர்வதற்கு எந்த வகையான உடையோ , அணிகலனோ தேவையில்லை. உன்னை உணர்ந்தால் போதும் என்கின்றான் பாரதி.

எந்த தோத்திரங்கள் தேவையில்லை அவனை உன் மனதால் வணங்கி நின்றால் போதும் என்கிறான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.