02/09/2020

கர்நாடக சங்கீதம் தமிழிசையே...



நிறுவிய கிறித்தவரும்
ஆராய்ந்த இசுலாமியரும்

தமிழிசையே இப்போது 'தென்னிந்திய இசை' என்றும் 'கர்நாடக சங்கீதம்' என்றும் வழங்கப் படுகிறது..

வட இந்திய இசை அல்லது 'ஹிந்துஸ்தானி இசை' இந்தத் தமிழிசையின் ஒரு 'வளர்ச்சி நிலையே' என்றும் தெரிய வருகிறது..

தமிழ்நாட்டு வரலாற்றை நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்..

கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை இங்கே களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.

தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறி மாறி பிறமொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

இடைக் கால சோழர் ஆட்சியும் இடைக் கால பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிகள் தான்.

இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.

பல்லவர்கள் வடமொழிக்கும், தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.

நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம்.

பிறகு மாரட்டியரின் காலகட்டம்.

இந்தக் கால கட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சரிவும், தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன..

பிற மொழியினர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள்.

வடமொழி என்பது இந்தியா முழுக்க தொடர்பு ஏற்படுத்தித் தரும் தொடர்பு மொழியாக இருந்தது. தெலுங்கு ஆட்சி மொழி. இன்று ஆங்கிலம் நமக்குக் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல வடமொழியும், தெலுங்கும் உயர்குடி மொழியாகவும் கருதப்பட்டன..

இசை முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அரச சபை தெலுங்கிற்கும், வடமொழிக்கும் முக்கியத்துவம் தரும் போது பாடகர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை..

சரி, இந்த இசையமைப்பு தமிழ்நாட்டுக்கு உரியது என்பதற்கு என்னஆதாரம்?

நமது பண்டைய இலக்கியங்களே முதல் ஆதாரங்கள்.

ஆபிரகாம் பண்டிதர் அதை விரிவாக நிறுவியிருக்கிறார்.

நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு.

நான்கிற்கும் கருப்பொருள், உரிப் பொருள் வகுத்தது.

இது நமது கலை இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவான இலக்கண அடிப்படையாகும்.

நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன.

நான்கு பெரும் பண்களும்.நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன.

நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும் பண் சிறு பண் வகுக்கப்பட்டுள்ளது.

பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன..

நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்களை பாலை
என்கிறோம்..

நமது பழந்தமிழ் இலக்கியங்களில் 'ஏழ்பெரும் பாலை' என்பது அடிக்கடி குறிப்பிடப் படுகிறது.

சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் பண்டிதரே.

ஏழ்பெரும் பாலைகளாவன:

1. செம்பாலை
2.அரும்பாலை
3.கோடிப்பாலை
4.மேற்செம்பாலை
5.படுமலைப்பாலை
6.செவ்வழி
7.விரிம்பாலை

இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே.

வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனையாகும்..

எல்லாருக்கும் புரிகிற,தெரிந்த உதாரணம் சொல்கிறேனே.

சிலப்பதிகாரத்தில் 'ஆய்ச்சியர் குரவை' என்ற பாடல் பகுதி வருகிறது.

அது "முல்லைத் தீம்பாணி" என்று குறிப்பிடப் படுகிறது..

‘சரிகபத ‘ என்பது அதன் சுரம்.

இந்த முல்லைத் தீம்பாணி தான் இன்றைய"மோகனராகம்"

கர்நாடக இசை என்ற பெயர் எப்படி வந்தது?

தியாகராஜர் சென்னையைத் தாண்டிப் போனதே இல்லை.

ஒருமுறை திருப்பதி போனதாக தகவல்.

அவர் பாடியதெல்லாம் இங்கே இருந்துதானே?

கர்நாடக இசை என்ற பெயரெல்லாம் பிற்பாடு வந்தது.

பெயர் மாறினால் என்ன?

ருக்மிணி தேவி அருண்டேல் சின்னமேளம் அல்லது சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார்.

பெயர் மாறினால் மரபு மாறுமா?

கேரளத்திலிருந்து திருவிழா ஜெய்சங்கரும்,ஆந்திராவிலிருந்து லால்குடி ஜெயராமனும் ஒரே இசைதானே பாடுகிறார்கள்?

ஆபிரகாம் பண்டிதர் பற்றி...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபிசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்..

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக,
தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர்..

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.

இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.

இராகங்களை உண்டு பண்ணும் முறை,பாடும் முறை ஆகியவற்றை
பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.

அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன..

பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917இல் பெரும் இசை நூலாகக் 'கருணாமிர்த சாகரம்' என்ற பெயரில் வெளியிட்டார்.

1395 பக்கங்கள் உடையது இந்நூல்.

இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.